சனி, 7 செப்டம்பர், 2019

இன்று அகழ்வாராய்ச்சி ஆய்வுகளில் மிக முக்கியமான நாள்.. .சிந்துச் சமவெளியும் திராவிட மொழிகளும்

Muralidharan Kasi Viswanathan : சிந்துச் சமவெளியும் திராவிட மொழிகளும்
இன்று அகழ்வாராய்ச்சி ஆய்வுகளில் மிக முக்கியமான நாள்.
சிந்துச் சமவெளியில் வசித்த மக்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்ற கேள்விக்கு மரபணு ரீதியாக ஓரளவுககு விடை கிடைத்திருக்கிறது. இது தொடர்பாக இரு கட்டுரைகள் உலகின் மிகச் சிறந்த ஆய்விதழ்களில் வெளியாகியிருக்கின்றன. முதலாவது கட்டுரை ‘The Genomic Formation of South and Central Asia’ என்ற தலைப்பில் Science இதழிலும் இரண்டாவது கட்டுரை Cell இதழிலும் வெளியாகியிருக்கிறது. இந்தக் கட்டுரை, ஹரப்பாவில் கிடைத்த எலும்புக்கூட்டை மரபணு ரீதியாக ஆய்வுசெய்து முடிவுகளை வைத்து எழுதப்பட்ட கட்டுரை.
முடிவுகள் இதுதான். அதாவது, ஹரப்பா நாகரத்தில் வசித்தவர்களிடம் ஸ்டெப்பி புல்வெளி மற்றும் இரானிய விவசாயிகளின் மரபணு இல்லை. இதன் அர்த்தம் என்னவென்றால், ஸ்டெப்பி புல்வெளி மரபணுவைக் கொண்டவர்கள், ஹரப்பா நாகரீகம் மறைந்த பிறகே இந்தியாவுக்கு வந்திருக்கிறார்கள். அவர்களுடன்தான் இந்தோ - ஐரோப்பிய மொழியும் இந்தியாவுக்கு வந்திருக்கிறது.
இரானிய விவசாயிகளின் மரபணுவும் இல்லை என்பதற்கு அர்த்தம், விவசாயம் உலகில் எங்கும் தோன்றும் முன்பே மேற்காசியாவிலிருந்து மனிதர்கள் இந்தியாவுக்கு வந்து, ஹரப்பா நாகரீகத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

ஆகவே ராக்கிகடியில் கிடைத்த டிஎன்ஏ முடிவுகளின்படி, ஹரப்பா நாகரிகத்தில் வசித்தவர்கள் ஆரம்பகால இந்தியர்களும் மேற்காசியாவிருந்து வந்தவர்களும்தான். அவர்கள் வாழ்ந்த காலத்தில் இந்தோ - ஆரிய மொழிகளைப் பேசிய ஸ்டெப்பி புல்வெளிவாசிகள் இந்தியாவில் இல்லை.
இதற்கடுத்த மற்றொரு விஷயமும் முக்கியமானது. அதாவது "Our findings also shed light on the origin of the second-largest language group in South Asia, Dravidian...The strong correlation between ASI ancestry and present-day Dravidian languages suggests that the ASI, which we have shown formed as groups with ancestry typical of the Indus Periphery Cline moved south & east...after the decline of the IVC to mix with groups with more AASI ancestry, most likely spoke an early Dravidian language." என்று குறிப்பிட்டிருக்கிறது.
இதைச் சுருக்கமாக தமிழில் சொன்னால், "எங்களது கண்டுபிடிப்பு இன்னொரு விஷயத்தையும் சுட்டிக்காட்டுகிறது. அதாவது, தெற்காசியாவில் இரண்டாவது மிகப் பெரிய மொழிக் குழுமமான திராவிட மொழிக் குழுமத்தின் தோற்றம் பற்றியது இது. ஆதிகால தென்னிந்திய மூதாதையருக்கும் (ASI) தற்போதைய திராவிட மொழிகளுக்கும் இடையில் உள்ள பரஸ்பர ஒற்றுமையை வைத்துப் பார்க்கும்போது ஒரு விஷயம் புலனாகிறது.அதாவது, ஆதிகால தென்னிந்திய மூதாதையர் என்பவர்கள், சிந்துச் சமவெளி நாகரிகம் (IVC) மறையத் துவங்கியபோது கிழக்கிலும் தெற்கிலும் பரவி, மிக ஆதிகால தென்னிந்தியர்களுடன் (AASI) கலந்தனர். இவர்கள், ஆரம்பகால திராவிட மொழிகளைப் பேசியிருக்கக்கூடும் "
சுருக்கமாகச் சொன்னால்,, 1. சிந்துச் சமவெளி காலத்திற்குப் பிறகே ஸ்டெப்பி புல்வெளி பகுதிகளிலிருந்து கங்கைச் சமவெளிக்கு ஆட்கள் வந்தனர்.
2. சிந்துச் சமவெளி மக்களுக்கும் தென்னிந்தியர்களுக்கும் தொடர்பு உண்டு. இவர்கள் ஆரம்பகால திராவிட மொழிகளைப் பேசினர்.
இது தொடர்பாக மேலும் படிக்க, மிகவும் புகழ்பெற்ற Early Indians புத்தகத்தை எழுதிய டோனி ஜோசப்பின் ட்விட்டர் பக்கத்தை பார்க்கவும். இணைப்பு கமென்ட் பகுதியில் உள்ளது.
ஆய்வு முடிகளுக்கான இணைப்புகளும் உள்ளன.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், தி பிரிண்ட் இணைய இதழும் தி எகனாமிக் டைம்ஸ் இதழும் இதனைத் தவறாக ரிப்போர்ட் செய்திருப்பதுதான். அதாவது, ராக்கிகடி எலும்புக்கூட்டில் ஸ்டெப்பி புல்வெளி மனிதனின் டிஎன்ஏ இல்லை என்பதை வைத்துக்கொண்டு, ஆரியர்கள் வெளியிலிருந்து வரவில்லை என்பதாக எழுதியிருக்கிறார்கள்.
[https://theprint.in/…/aryan-invasion-theory-gets-a-…/287454/](https://theprint.in/…/aryan-invasion-theory-gets-a…/287454/…)
[https://economictimes.indiatimes.com/…/articl…/71001985.cms…](https://economictimes.indiatimes.com/…/articl…/71001985.cms…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக