வெள்ளி, 20 செப்டம்பர், 2019

ஐடி ஊழியர் டேனிதா மரணம் : வலுக்கும் சந்தேகம்

ஐடி ஊழியர் மரணம் : வலுக்கும் சந்தேகம் !மின்னம்பலம் : சென்னையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பெண் ஊழியர் ஒருவர் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் டேனிதா ஜூலியஸ். இருபத்துநான்கு வயதாகும் இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பிட் பூங்கா சாலையில் அமைந்துள்ள தனியார் ஐடி நிறுவனம் ஒன்றில் மென்பொருள் பொறியாளராக வேலைக்கு சேர்ந்தார். இந்தநிலையில் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நாள் வேலைக்கு வந்துள்ளார்.
வேலைக்கு வந்த அவர், செப்டம்பர் 19 ஆம் தேதி இரவு அலுவலகக் கட்டிடத்தின் 8-வது மாடியிலிருந்து கீழே விழுந்தார். டேனிதா கீழே விழுந்த அதே வேகத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பிற ஊழியர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் இது தொடர்பாக அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் டேனிதாவின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
டேனிதா வேலைக்குச் சேர்ந்த ஐடி நிறுவனக் கட்டிடத்தின் 8-வது அடுக்கு, மேல்தளம் என்பதனால், ஊழியர்கள் அங்கு செல்ல அனுமதியில்லை என்று கூறப்படுகிறது. தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து டேனிதா கீழே விழுந்ததால் அவரது மரணம் தற்கொலையா? கொலையா? அல்லது தவறுதலாக கீழே விழுந்தாரா? என்னும் கோணத்தில் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
பல கனவுகளுடன் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே அவர் தற்கொலை செய்திருப்பாரா? தடைசெய்யப்பட்ட பகுதிக்கு அவர் சென்றதற்கான காரணம் என்ன? யாரேனும் அவரை வலுக்கட்டாயமாக கீழே தள்ளி விட்டார்களா? என்ற பல கேள்விகளை எழுப்பி டேனிதாவின் மரணம் ஒரு புதிராக மாறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக