ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

நடிகர்களின் சம்பளத்தை வரையறை செய்ய தயாராகும் தமிழக அரசு..

kadambur rajuவிகடன் - இ.கார்த்திகேயன் : “தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் ஆன்லைன் டிக்கெட் விற்பனையைப் போலவே நடிகர்களின் சம்பளமும் வரையறை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் ஆன்லைன் டிக்கெட் விற்பனை செய்து குறித்து தலைமைச் செயலகத்தில் உள்துறை செயலாளர், செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குநர், செயலாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், ஆன்லைன் டிக்கெட் விற்பனை திரைத்துறைக்கு ஆரோக்கியத்தைத் தரும் இந்தத் தொழில் மேம்படும் நிலையை இந்த அரசு முன்னெடுத்திருக்கிறது. இதை நாங்கள் பாராட்டுக்கிறோம்” என மனமுவந்து கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசினார்கள்.

தயாரிப்பாளர்கள் எடுக்கின்ற படங்களில் செலவு உள்ளிட்டவைகளின் வெளிப்படைத்தன்மை இருக்கும் பட்சத்தில், நடிகர்களின் சம்பள வரைமுறையும் அதில் இடம் பெற்று, எல்லாமே இறுதி வடிவம் பெற்று எல்லாமே சராசரியாகச் சரி செய்யப்படும் நிலை உருவாகும். இந்தியாவுக்கே முன்னுதாரணமாகத் தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு மைல்கல்லாக அமையும். தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் கலந்து பேசி ஒருமித்த கருத்துடன் அடுத்த வாரம் எங்களை வந்து சந்திப்பதாகத் தெரிவித்துள்ளனர். அப்படி சந்திக்கும்போது நல்ல முடிவு எட்டப்படும். அதில், நடிகர்களின் சம்பளம் வரைமுறை உள்ளிட்ட அனைத்தும் இடம்பெறும். தபால் துறையில் தேர்வுகளைத் தமிழிலே எழுத மத்திய அரசிடமிருந்து பெற்று தந்தது அ.தி.மு.க அரசுதான். நீதிமன்ற தீர்ப்பைக்கூட தமிழிலே பெற்றுத்தரலாம் என்ற உத்தரவை பெற்றதும் அ.தி.மு.க அரசுதான்.
நீதிமன்ற தீர்ப்புக்களைத் தமிழ் மொழியில் மாற்றம் செய்யும் பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது. தாய் மொழியான தமிழைக் காக்கும் அரசாக அ.தி.மு.க அரசு இருக்கும். தி.மு.க-வினர் தமிழை அரசியலுக்காகப் பயன்படுத்துகின்றனர். தமிழுக்காக என்ன செய்தார்கள் என்று அவர்களைத் திரும்ப கேட்டால் தெரியும். அவர்களது காலத்தில் தமிழுக்கு ஒன்றும் செய்யாமல். தமிழை வைத்து வெறும் அரசியல் நடத்திக் கொண்டிருந்தார்கள் தமிழ் வளர்ச்சித் துறையைத் தொடங்கி ஆக்கபூர்வமான பணிகளைச் செய்து, சிகாகோவில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சரை கலந்து கொள்ளச் செய்து முதல்வர் பெருமை சேர்த்துள்ளார்” என்றார்.<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக