ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

திரு.ராம் ஜெத்மலானி காலமானார் .. மூத்த வழக்கறிஞர் .. முன்னாள் மத்திய அமைச்சர்

Ram-Jethmalaniதினமணி : புதுதில்லி: பிரபல மூத்த வழக்குரைஞர் ராம் ஜெத்மலானி(95) தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். 
பிரபல மூத்த வழக்குரைஞரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான ராம் ஜெத்மலானி வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2 வாரங்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். 
இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை (செப் 8) தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராம் ஜெத்மலானி 1923 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் உள்ள சிக்கார்பூரில் பிறந்தார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு பின்னர், இந்தியாவின் மும்பையில் குடியேறினார். தனது 18 வயதிலேயே மும்பை பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்து மும்பையில் வழக்குரைஞராக பணியாற்றி வந்தார். பின்னர் உச்ச நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றங்களிலும் சர்ச்சைக்குரிய பல முக்கிய வழக்குகளில் ஆஜராகி வாதடி இந்தியாவின் ஒரு முன்னணி வழக்குரைஞராக புகழ்பெற்றார்.


 முன்னணி வழக்குரைஞரான ஜெத்மலானி பின்னர் அரசியல்வாதியாகவும் காணப்பட்டார். மத்திய சட்டத்துறை அமைச்சராகவும், வழக்குரைஞர் சங்கத் தலைவர் உள்ளிட் பல பதவிகளை வகித்தவர். பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மும்பையில் இருந்து ஆறாவது மற்றும் ஏழாவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் அமைச்சரவையில் 1996-2000 வரை சட்டத்துறை அமைச்சராகவும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகிய ஜெத்மலானி, 2004 -ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வாஜ்பாயை எதிர்த்து லக்னோ தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். மீண்டும் 2010 -ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த இவர், அக்கட்சியின் சார்பில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்தெடுக்கப்பட்டார்.
இந்திய வழக்குரைஞர்களிலேயே மிகக் கூடுதலான ஊதியம் பெறும் பிரபல வழக்குரைஞராக அறியப்பட்ட ராம் ஜெத்மலானி, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கிகில் திமுக எம்.பி. கனிமொழிக்காகவும், ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சிபிஐ வழக்கு, கர்நாடக முதல்வர் எடியூரப்பா பண மோசடி வழக்கு, ஆசாரம் பாபு பாலியல் குற்ற வழக்கு, லாலு பிரசாத் யாதவ் ஊழல் வழக்கு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் செத்து குவிப்பு வழக்கிலும், டிடிவி தினகரன் வழக்கு, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கும் 7 தமிழர்களுக்காக 2011 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்திலும் வாதாடியுள்ளார். 
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் ஆஜராகி செய்த வாதங்கள் நாடு முழுக்க பிரபலம் அடைந்தது. 
இந்த நிலையில் கடந்த 2017ல் இவர் வழக்குரைஞர் தொழிலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதே போல் அரசியல் வாழ்க்கை, பொது வாழ்க்கை இரண்டில் இருந்தும் ஓய்வு பெற்று வீட்டிலேயே இருந்து வந்தார். 
ராம் ஜெத்மலானிக்கு 1947-ல் ரத்தனா என்பவருடன் முதல் திருமணம் நடைபெற்றது. பின்னர் துர்க்கா என்பவரை 2வதாக திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். அவர்களுள் மகேஷ் மற்றும் இராணி ஆகியோரும் பிரபலமான வழக்குரைஞர்கள் ஆவார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக