செவ்வாய், 17 செப்டம்பர், 2019

சாட்டை சுழற்றும் சோனியா... பொறுப்பற்ற நிர்வாகிகள் மேல் கடும் நடவடிக்கை

டிஜிட்டல் திண்ணை: சாட்டை சுழற்றும் சோனியாமின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன்லைன் வந்தது. லொக்கேஷன் டெல்லி காட்டியது.
“கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடுமையாகத் தோல்வி அடைந்து மீண்டும் மோடியே ஆட்சியைப் பிடித்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி அந்தப் பதவியிலிருந்து விலகினார். இதனால் பெரும் தேக்கத்தை சந்தித்த காங்கிரஸுக்கு இடைக்காலத் தலைவராக சோனியா பொறுப்பேற்றுக் கொண்டார்.
ராகுல் விலகியதற்குக் காரணம் சீனியர்களின் அதீத பொறுப்பின்மையே என்பதை உணர்ந்த சோனியா காந்தி, தனது இந்தப் பதவி காலத்தில் அவர்களை சும்மா விடுவதில்லை என முடிவெடுத்தார். கடந்த 12ஆம் தேதி டெல்லியில் நடந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள், மாநிலத் தலைவர்கள், முதல்வர்கள் கூட்டத்தில் சோனியாவின் அணுகுமுறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருப்பதைக் குறிப்பிட்டு விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் காங்கிரஸ் கட்சியில்.

பதவி விலகும் முன் காங்கிரஸ் படுதோல்விக்கு யார் யார் காரணம் என்று சோனியாவுக்கு ஒரு ரிப்போர்ட் கொடுத்துள்ளார் ராகுல் காந்தி. அதில் தொடர்ந்து முதல்வராக இருந்து வருபவர்கள், மக்கள் செல்வாக்கு இல்லாமல் டெல்லி தலைமையின் தொடர்புகளைப் பயன்படுத்திக்கொண்டு புதிய முகங்களுக்கு வழிகொடுக்காமல் இருப்பவர்கள், மேற்பார்வையாளர்களாகச் செல்லக்கூடியவர்கள் அந்தந்த மாநில தலைவர்களிடம் கப்பம் வாங்கிக்கொண்டு தலைமைக்குப் பொய்யான புகார்களைக் கொடுத்துத் தவறு செய்யும் தலைவர்களைக் காப்பாற்றுகிறவர்கள், பல மாநிலங்களில் கிளை முதல் மாவட்டத் தலைவர்கள் வரையில் பதவிகள் போடாமல் இருப்பது என நீண்ட பட்டியலைக் கொடுத்திருக்கிறார் ராகுல் காந்தி.
இந்தப் புகார்கள்தான் கூட்டத்தில் எதிரொலித்திருக்கிறது. குறிப்பாக காங்கிரஸ் முதல்வர்களிடம் சோனியாவின் கோபம், அதிகமாகவே வெளிப்பட்டிருக்கிறது.
காங்கிரஸ் ஆளும் பஞ்சாப், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், யூனியன் பிரதேசமான புதுச்சேரி என ஐந்து மாநிலத்தின் முதல்வர்கள் மற்றும் கட்சியின் தலைவர்கள், மேற் பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். மூத்த தலைவர்களில் அகமது படேல், ஏ.கே.அந்தோணியும் கலந்துகொண்டார்கள்.
ஒவ்வொரு முதல்வரிடமும், ’தேர்தல் வாக்குறுதி என்ன கொடுத்தீர்கள், என்ன செய்திருக்கிறீர்கள், மக்களுக்கான புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளீர்களா, கட்சி நிர்வாகிகள் எப்படி இருக்கிறார்கள்’ என்று கேட்டுள்ளார் சோனியா. அப்போது அவர்கள் பல திட்டங்களைப் பற்றி சொல்ல, உடனே சம்பந்தப்பட்ட மாநிலத் தலைவரிடம், முதல்வர் சொல்வது உண்மையா என்று கேட்டுள்ளார் சோனியா. அதேபோல தலைவர் பற்றி முதல்வரிடம் கேட்கிறார். அதற்கு தலைவரிடம் பதில் கேட்டு நடவடிக்கை எடுக்கிறார்.
ஒரு மாநில முதல்வர் எழுந்து நான் புதிய ஸ்கீம் கொண்டுவரப் போகிறேன் என்று ஒரு திட்டத்தின் பெயரைச் சொன்னதும் கோபமான சோனியா, ‘மிஸ்டர் நீங்கள் சொல்லும் ஸ்கீம் புதியது அல்ல, உங்கள் மாநிலத்தில் 12 வருடத்திற்கு முன்பே நான் தொடங்கிவைத்த ஸ்கீம்’ என்று மூக்கை உடைத்துள்ளார்.
மத்தியப்பிரதேச முதல்வர் கமல்நாத்திடம்தான் சோனியா அதிகம் கோபப்பட்டார் என்கிறார்கள். கமல்நாத் எழுந்து அந்த ஸ்கீம் இந்த ஸ்கீம் என்று சொல்லும்போது, குறுக்கிட்ட சோனியா, ‘கமல்நாத் நீங்கள் எத்தனை தலைமுறையாக முதல்வராக இருந்திருக்கீங்க. ஆனா, நல்லா பொய் சொல்றீங்க’ என்று கோபமாகப் பேசியுள்ளார். சோனியா ஒவ்வொரு முறையும் பேசும்போது ராகுல் பெயரைத் தவறாமல் குறிப்பிட்டுப் பேசியுள்ளார், அருகிலிருந்த மேலிடப் பார்வையாளர்களையும் ஒருபிடி பிடித்துள்ளார்.
சோனியா பேசி முடிக்கும்போது, ‘தலைமையை ஏமாத்தியது போதும். இனிமேலாவது வர்ற சட்டமன்றத் தேர்தல்ல வெற்றி பெற நாம கடுமையா உழைச்சாகணும். வீட்டுக்கு வீடு காங்கிரஸ் பத்தி எடுத்துச் சொல்லணும்’ என்று கூறியிருக்கிறார்.
கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது, ‘மேடத்துக்கு இவ்வளவு கோபம் வந்ததை இப்போதுதான் பார்த்திருக்கிறேன்’ என்று மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி தனக்கு நெருக்கமான ஒரு முதல்வரிடம் தெரிவித்திருக்கிறார். விரைவில் மற்ற மாநிலத் தலைவர்களையும் அழைத்து புகார் பட்டியல், ஆதாரங்களைக் கையில் வைத்துக்கொண்டு ரெய்டு எடுக்கப்போகிறார் சோனியா என்றும் டெல்லியில் பேசுகிறார்கள். மாநில அளவில் புதிய நிர்வாகிகளை நியமிக்கப் பட்டியல் கேட்டு, அந்தப் பட்டியலில் இருப்பவர்களைத் தனிக்குழு போட்டு விசாரித்த பிறகே ஒப்புதல் கொடுக்க போகிறார் சோனியா என்றும் சொல்கிறார்கள். இத்தனை காலம் ஏமாற்றியவர்கள் இனி ஏமாற்ற முடியாது என்று சோனியா சொன்ன சொற்கள் காங்கிரஸ் சீனியர்களின் காதில் இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன” என்று முடித்த மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக