செவ்வாய், 17 செப்டம்பர், 2019

கன்னடத்தை விட்டுத் தர மாட்டோம்: எடியூரப்பா ட்வீட் பின்னணி!

கன்னடத்தை விட்டுத் தர மாட்டோம்: எடியூரப்பா ட்வீட் பின்னணி!மின்னம்பலம் : ‘கர்நாடகத்தைப் பொறுத்தவரை கன்னடமே முதன்மையான மொழியாகும்’ எனக் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார். பாஜக ஆளும் கர்நாடகத்தைச் சேர்ந்த முதல்வர் இவ்வாறு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்திக்கு அலுவல் மொழி அந்தஸ்தை வழங்கிய தினமாகக் கொண்டாடப்படும் செப்டம்பர் 14ஆம் தேதியன்று, உள்துறை அமைச்சர் அமித் ஷா, “ஒட்டுமொத்த நாட்டுக்கும் பொதுவாக ஒரு மொழி நிச்சயம் தேவை. அதுதான் சர்வதேச அளவில் இந்தியாவின் அடையாளமாக இருக்கும். அப்படி இந்தியாவை எந்த மொழியால் இணைக்க முடியுமென்றால், அது இந்திதான். அதைத்தான் ஏராளமானோர் பேசுகிறார்கள். ஆதலால், மக்கள் தங்கள் தாய்மொழிகளுடன் இந்தியையும் சேர்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒருமொழியான இந்தியால் மட்டும்தான், மகாத்மா காந்தி, இரும்பு மனிதர் சர்தார் வல்லபபாய் படேலின் கனவை நிறைவேற்ற முடியும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

அமித் ஷாவின் இந்தக் கருத்துக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பா மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து, நாடு முழுவதும் ஒரு பொதுவான மொழியாக இந்தி என்ற ஒற்றை மொழிக் கருத்தை வலியுறுத்துவதற்கு எதிராகத் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்திருக்கிறார். நேற்று (செப்டம்பர் 16) தனது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் இதுகுறித்து பி.எஸ்.எடியூரப்பா கூறியதாவது:
“நம் நாட்டிலுள்ள அனைத்து அலுவல் மொழிகளும் சமமானது. இருப்பினும், கர்நாடகத்தைப் பொறுத்தவரை கன்னடமே முதன்மை மொழியாகும். நாங்கள் ஒருபோதும் அதன் முக்கியத்துவத்தை சமரசம் செய்ய மாட்டோம். நாங்கள் எப்போதும் கன்னடத்தையும், அதன் மாநில கலாச்சாரத்தையும் ஊக்குவிக்க கடமைப்பட்டுள்ளோம்” எனக் கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சர் மட்டுமல்லாது பாஜகவின் தேசிய தலைவராகவும் பதவி வகிப்பவர் அமித் ஷா. பாஜக ஆளக்கூடிய கர்நாடக மாநிலத்தின் முதல்வரும், மூத்த தலைவருமான எடியூரப்பா அவர்கள் அமித் ஷாவின் கருத்துக்கு எதிராகத் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
மாநில மொழியை விட்டுக்கொடுக்காமல் கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா இட்ட ட்விட்டர் பதிவுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகியுள்ளது.
எடியூரப்பா ட்வீட் பின்னணி
கர்நாடகாவில் முதன்முதலில் பாஜக ஆட்சி உருவாகக் காரணமாக இருந்தவர் எடியூரப்பா. ஆனால், முதல்வராக இருந்தும் அவரால் மந்திரி சபையை சொந்தமாக அமைக்கக்கூட முடியாத நிலையே அவருக்கு அங்குள்ளது. மத்திய பாஜக கைகாட்டிய பட்டியல்படியே மந்திரிகளை எடியூரப்பாவால் நியமிக்க முடிந்தது. துணை முதலமைச்சர் பதவிக்கு எடியூரப்பா சிபாரிசு செய்த நபர்களை நியமிக்காமல், கோவிந்த்கார் ஜோல், அஸ்வத் நாராயணா, லட்சுமண் சவதி ஆகிய மூன்று பேரை துணை முதலமைச்சர்களாக மத்திய அரசு நியமித்தது.
மேலும், வெள்ள நிவாரண நிதி குறித்து கடந்த பத்து நாட்களாகப் பிரதமர் மோடியைச் சந்திக்க முயற்சி செய்தும் எடியூரப்பாவால் முடியவில்லை. இதை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளைச் சரியாக வழங்காததால் எடியூரப்பாவைக் கண்டித்து வெள்ளத்தால் அதிக பாதிப்புகளைச் சந்தித்த வட கர்நாடக மக்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கி உள்ளனர். மேலும், அதிகாரமில்லாத முதல்வராக உட்கட்சியிலேயே விமர்சித்து வருகின்றனர். ஆட்சியில் பொறுப்பேற்ற 100 நாட்களுக்குள் மாறுபட்ட ஆட்சியை வழங்குவதாக அறிவித்த எடியூரப்பாவால் எதையும் செய்ய முடியாத நிலையே அங்கிருக்கிறது.
இந்த நிலையில் எடியூரப்பாவின் இந்த ட்விட்டர் பதிவு, மாநில மொழிக் கொள்கைக்கு முக்கியத்துவம் அளிப்பதாக ஒருபுறம் வரவேற்கப்பட்டாலும், அரசியல் உள்நோக்கம் கொண்டதாக மறுபுறம் பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக