ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு : 69490 பேருக்கு சென்னை மாநகர சபை ஒரு வாரம் கெடு!

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு : 69490 பேருக்கு நோட்டீஸ்!மின்னம்பலம் : மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அமைக்காத 69490 கட்டிட உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மழைநீர் சேமிப்புக்காகத் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “தமிழகத்தில் அடுத்த 3 மாதங்களில் அனைத்து வகையான கட்டிடங்களிலும் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார். அதன்படி மழைநீர் கட்டமைப்பை அமைக்காத 69490 கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 31) சென்னையில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் மழைநீர் சேகரிப்பின் கட்டமைப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மாநகராட்சி ஆணையர், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு செயல்படுத்துவதன் விளைவாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீரின் அளவு 4 அடி உயர்ந்துள்ளது. அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
”சென்னையில் 1,62,284 கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு நல்ல நிலையில் உள்ளது. இதுவரை மழைநீர் சேகரிப்பு அமைப்பு அமைக்க நடவடிக்கை எடுக்காத 69490 கட்டிடங்களின் உரிமையாளர்களுக்குச் செப்டம்பர் மாதத்திற்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அமைக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுதவிர 38,507 கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பைச் சீரமைக்க, அதன் உரிமையாளர்களுக்கு ஒரு வாரம் கெடு விதிக்கப்பட்டுள்ளது” என்று சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக