ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

சங்ககிரி கந்துவட்டி மாஃபியாக்கள் மீண்டும் சிறையில் அடைப்பு!

ms nakkheeran.in - /elayaraja : சங்ககிரியைச் சேர்ந்த கந்துவட்டி மாஃபியா சகோதரர்கள் மூன்று நாள் போலீஸ் காவல் முடிந்து, இன்று மாலை மீண்டும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சேலம் மாவட்டம் காவடிக்காரனூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (52). சங்ககிரியைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர்களான சண்முகம், அவருடைய தம்பி மணி ஆகியோரிடம் கடந்த 1998ம் ஆண்டு 8 லட்சம் ரூபாய் கந்துவட்டிக்கு கடன் வாங்கியிருந்தார். கடனுக்கு அடமானமாக தனக்குச் சொந்தமான 23 ஏக்கர் விளை நிலத்தை அவர்களிடம் பவர் எழுதிக் கொடுத்திருந்தார். வாங்கிய கடனுக்கு 2.50 லட்சம் வரை வட்டி செலுத்திய வெங்கடேசன், ஒட்டுமொத்தமாக அசல், வட்டி, தாமத வட்டி அனைத்தையும் செட்டில்மென்ட் செய்து விடுவதாகவும், தன்னுடைய நிலத்துப் பத்திரத்தை திருப்பிக் கொடுத்து விடுமாறும் கந்துவட்டி மாஃபியா சகோதரர்களிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர்களோ, 2001ம் ஆண்டிலேயே வெங்கடேசன் அடமான கொடுத்த 6 கோடி மதிப்புள்ள 23 ஏக்கர் நிலத்தை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன், தன்னை ஏமாற்றி நிலத்தைப் பறித்துக் கொண்டதாகக்கூறி, சேலம் மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்து இருந்தார். பின்னர் இந்த புகார் சேலம் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் ஆகஸ்ட் 27ம் தேதி சண்முகத்தையும், மணியையும் கைது செய்தனர்.

மேலும் பலரிடம் அவர்கள் ஏமாற்றி, சொத்துகளை பிடுங்கி இருப்பதாக புகார்கள் வந்ததால், இருவரையும் மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். கடந்த 29ம் தேதி காவலில் எடுக்கப்பட்ட அவர்கள் மூன்று நாள் விசாரணை முடிந்து, இன்று (ஆகஸ்ட் 31) மாலை மீண்டும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக