ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

குஜராத் : தலித், முஸ்லிம்களுக்கு சொத்துக்களை விற்க வேண்டாம்: Gujarat: Housing Society Asks Members Not to Sell Property to Dalits, Muslims

மின்னம்பலம் :
தலித், முஸ்லிம்களுக்கு சொத்துக்களை விற்க வேண்டாம்: குஜராத்!
குஜராத்தைச் சேர்ந்த நர்மதா மாவட்டத்திலுள்ள குடியிருப்பு பகுதி ஒன்று ‘தலித், முஸ்லிம்களுக்கு சொத்துக்களை விற்க வேண்டாம்’ என துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துள்ள செய்தி சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.
நந்தோட் தாலுகாவின் வாடியா கிராமத்தில் உள்ள குடியிருப்பு காலனியொன்று நேற்று முன் தினம்(ஆகஸ்ட் 31) ஒரு துண்டுப்பிரசுரத்தை விநியோகம் செய்துள்ளது. வரவிருக்கும் திருவிழாக்கள், சொத்துக்களை விற்பனை செய்வதற்கு விதிக்க வேண்டிய கட்டணம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு பல தகவல்களை உள்ளடக்கியிருந்தது அந்தப் பிரசுரம். அதில் ‘முஸ்லீம் மற்றும் வான்கர் (தலித்) சமூகங்களுக்கு சொத்துக்களை விற்பனை செய்வதைத் தவிர்க்கவும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது அப்பகுதியிலிருந்த தலித் மக்களின் கோபத்தை தூண்டியுள்ளது. தலித் சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ள மனுவில், “சாதி பாகுபாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரினார். அதனைத் தொடர்ந்து தி இந்தியன் எக்ஸ்பிரசுக்கு அந்த நபர் அளித்த பேட்டியில், “இந்த விவகாரம் குறித்து விசாரித்து சமூகங்களிடையே வெறுப்பை பரப்புவோர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுள்ளோம். நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த வகையான ‘கட்டளைகள்’(துண்டுப் பிரசுரத்தைக் குறிப்பிட்டு) இப்போதெல்லாம் வந்து கொண்டே இருக்கின்றன; இவை சமூகத்தின் நம்பிக்கையை அசைத்துப் பார்க்கும் செயல்” எனக் கூறியுள்ளார்.
நர்மதா மாவட்ட ஆட்சியர் ஐ.கே.பட்டேல் இது குறித்து கூறும் போது, “நாங்கள் இவ்விவகாரம் தொடர்பாக காலனியிடமிருந்து பதிலைக் கேட்ட போது, எங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய நிகழ்ச்சி நிரலின் வரைவு மட்டுமே அது என்றும் அத்தகைய எந்த விதியையும் நிறைவேற்றவில்லை என்றும் அவர்கள் எங்களிடம் விளக்கமளித்துள்ளார்கள். இது அங்கு குடியிருப்பவர்களின் பரிந்துரையின் பேரில் தயாரிக்கப்பட்ட பட்டியலாகும். எனவே, இந்தப் பதிலை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். அதே சமயம், இப்பிரச்சினை தொடர்பாக தொடர் கண்காணிப்பு இருக்கும். சமூக பாகுபாடு ஏதாவது நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறியுள்ளார்.
இச்செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. மேலும் சமூக பாகுபாட்டை ஊக்குவிக்கும் அக்குடியிருப்பு நிர்வாகத்துக்கு எதிராக பதிவுகளில் தங்கள் விமர்சனங்களை வைத்து வருகின்றனர் பொது மக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக