திங்கள், 26 ஆகஸ்ட், 2019

அரசு மருத்துவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்.. நான்கு மருத்துவர்கள் மருத்துவமனையில் அனுமதி

doctor தினமணி : சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கிய அரசு மருத்துவர்கள்.
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினர். அதில் 6 மருத்துவர்கள் பங்கேற்று வருகின்றனர்.
இதுகுறித்து மருத்துவ சங்கப் பிரதிநிதிகள் கூறியதாவது:
தமிழக சுகாதாரத் துறை மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்வதாகவும், சர்வதேச தரத்தில் மருத்துவ சேவைகள் இங்கு இருப்பதாகவும் அரசு தரப்பில் பெருமிதம் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், அந்த நிலையை எட்டுவதற்காக அனுதினமும் பாடுபடும் அரசு மருத்துவர்களின் ஊதியம் மட்டும் மற்ற மாநிலங்களில் வழங்குவதைக் காட்டிலும் மிகவும் குறைவாக உள்ளது.
ஊதிய உயர்வு கோரி பல ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். ஆனால், அதற்கு எந்த விதமான பலனும் இல்லை.

அதுமட்டுமன்றி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களின் பணியிடங்களைக் குறைக்கக் கூடாது. மருத்துவ மேற்படிப்பு முடித்தவர்களை கலந்தாய்வு மூலம் மட்டுமே பணிநியமனம் செய்ய வேண்டும்.
மருத்துவ மேற்படிப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பில் ஏற்கெனவே  இருந்த 50 சதவீத இடஒதுக்கீட்டைத் திரும்பக் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனிதச் சங்கிலி, தர்னா, ஒத்துழையாமை போராட்டம், புறநோயாளிகள் சிகிச்சை புறக்கணிப்பு, கருப்புச் சட்டைப் போராட்டம் என பல்வேறு வகைகளில் எதிர்ப்பைத் தெரிவித்தோம்.
அதேபோன்று அரசு மருத்துவமனைகளின் வருவாயைக் குறைக்கும் வகையில் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சையளிப்பதையும் நிறுத்தினோம்.
இத்தனைப் போராட்டங்கள் நடத்தியும் எதற்கும் அரசு செவிசாய்க்கவில்லை. இதையடுத்துதான் அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே தற்போது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளோம்.
டாக்டர்கள் பெருமாள் பிள்ளை, நளினி, நாச்சியப்பன், அனிதா, அகிலன், ரமா ஆகியோர் அப்போராட்டத்தை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு அனைத்து அரசு மருத்துவர்களும் தங்களது ஆதரவை அளித்துள்ளனர் என்று  அவர்கள் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக