வியாழன், 1 ஆகஸ்ட், 2019

தமிழக எம்.பி.க்களுடன் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனை

தமிழக எம்.பி.க்களுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை!மின்னம்பலம் : புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக எம்.பி.க்களுடன் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று (ஆகஸ்ட் 1 ) ஆலோசனை நடத்தினார்.
புதிய தேசிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு, 484 பக்கங்கள் கொண்ட வரைவை மத்திய அரசிடம் கடந்த மே 31ஆம் தேதி சமர்ப்பித்தது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த பல அம்சங்களை தமிழக அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. புதிய கல்விக் கொள்கையை ஆராய்ந்து திமுக குழு தயாரித்த அறிக்கையை அக்கட்சியின் எம்.பி.க்கள் கடந்த 30ஆம் தேதி மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலிடம் சமர்ப்பித்தனர். அதில் கல்விக் கொள்கை வரைவை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தது. மேலும் அமமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளும் இதுதொடர்பாக அறிக்கை அளித்துள்ளன.

இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக விவாதிக்க தமிழக எம்.பி.க்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அழைப்பு விடுத்தார். இதனை ஏற்ற தமிழக எம்.பி.க்கள் டெல்லியில் இன்று ரமேஷ் பொக்ரியாலுடன் ஆலோசனை நடத்தினர். இதில் அதிமுக, திமுக, காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, விசிக, முஸ்லீம் லீக் கட்சிகளின் எம்.பி.க்கள் கலந்துகொண்டனர். அப்போது புதிய கல்விக் கொள்கையில் திருத்தப்பட வேண்டிய அம்சங்கள் குறித்தும், திரும்பப் பெற வேண்டியதன் அவசியம் குறித்தும் கருத்து தெரிவித்தனர்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, “கூட்டத்தில் எங்கள் இயக்கத்தின் கருத்துக்களையும், இன்றைய சூழலில் நாட்டில் கல்வித் துறையில் எவ்வகை மாற்றங்களை செய்ய வேண்டும் என்றும் கூறினோம். இதற்கு முன்பு டி.எஸ்.ஆர் சுப்பிரமணியம் குழு தாக்கல் செய்த அறிக்கை நிராகரிக்கப்பட்டது. அந்தக் குழுவில் கல்வியாளர்கள் யாரும் இல்லை, ஒருசார்பு கொள்கையாளர்கள் மட்டுமே இருந்தார்கள் என்பதுதான் அதற்கு காரணம். தற்போது கஸ்தூரி ரங்கன் தனது அறிக்கையில், இது டி.எஸ்.ஆர் சுப்பிரமணியம் அறிக்கையில் தொடர்ச்சி என்கிறார். நிராகரிக்கப்பட்ட அறிக்கையின் சாயல் இதில் நிறைய இருக்கின்றது” என்று குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து அவர், “குருகுலத்தைப் போல கல்வி சொல்லித் தரப்படும் என்று அறிக்கையில் கூறுகிறார்கள். மாணவர்களை எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக அவர்களை பின்னோக்கி இழுத்துச் செல்லும் முயற்சி இது. கல்வியை தனியார் மயமாக்கும் முயற்சிதான் இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கிராமப்புறப் பகுதிகளில் குறைந்த அளவில் மாணவர்கள் பயிலும் பள்ளிகள் வேறு பள்ளிக்கூடங்களுடன் இணைக்கப்படும் என்று கூறுகிறார்கள். இப்படி செய்தால் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மூடப்படும். ஒரே ஒரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி அமைத்து ஜனநாயகத்தை காக்கிறோம் என்று சொல்லும் அரசானது 20 ஏழை பிள்ளைகள் படிக்கும் பள்ளியை மூடுவது எவ்வகையில் நியாயம்” என்றும் கேள்வி எழுப்பினார்.
புதிய தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக கருத்து தெரிவிக்க ஆகஸ்ட் 15 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அதன்பிறகு மத்திய அரசு தனது முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக