வியாழன், 1 ஆகஸ்ட், 2019

காபி டே ..சித்தார்த் .. பயணங்களில் சாதாரண பயணிகளோடு எளிமையாக ....

பயணங்களின் போது உயர்ந்த வகுப்பு பயணத்தை மேற்கொள்ளாமல், சாதாரண பயணிகளுடன் பயணம் செய்வதையே சித்தார்த்தா விரும்புபவர். காபி டே நிறுவனத்தின் ஊழியர்களின் வீட்டுத் திருமணத்திற்குச் சென்றால் வரிசையில் நின்று பரிசுப் பொருளைக் கொடுத்து வாழ்த்தி விட்டு வருவாராம். எந்த இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டதில்லை.
மின்னம்பலம் : கஃபே காபி டே நிறுவனர் சித்தார்த்தா தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், அவரது கடைசிக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததின்படி, பெங்களூருவில் உள்ள வருமான வரித் துறை அதிகாரிகளிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சித்தார்த்தாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வருமான வரிச் சோதனைகள் அவரது நண்பரும் கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.எஸ்.சிவக்குமார் மீதான நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே நடத்தப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. சித்தார்த்தாவின் மாமாவும் கர்நாடக மாநில முன்னாள் முதல்வருமான எஸ்.எம். கிருஷ்ணா வாயிலாக சித்தார்த்தாவுக்கு சிவக்குமாரின் நட்பு கிடைத்துள்ளது. இவ்விருவரும் பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதும், வரி செலுத்தாமல் இருந்ததும் வருமான வரித் துறையின் சோதனைகளில் தெரியவந்தது.
தான் பெற்ற கடனை விடப் பல மடங்கு சொத்து சேர்த்துள்ள சித்தார்த்தா, சொத்துக்களைக் கொண்டு கடனை அடைக்காமல் தற்கொலை செய்துகொண்டிருப்பது அவரது குடும்பத்தாரிடமும் தொழில் துறையினரிடமும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவராக இருந்தாலும், மிக எளிய மனிதராகவே சித்தார்த்தா வாழ்ந்து வந்ததாக அவருடன் பழகியவர்களும் ஊழியர்களும் தெரிவித்துள்ளனர்.

பயணங்களின் போது உயர்ந்த வகுப்பு பயணத்தை மேற்கொள்ளாமல், சாதாரண பயணிகளுடன் பயணம் செய்வதையே சித்தார்த்தா விரும்புபவர். காபி டே நிறுவனத்தின் ஊழியர்களின் வீட்டுத் திருமணத்திற்குச் சென்றால் வரிசையில் நின்று பரிசுப் பொருளைக் கொடுத்து வாழ்த்தி விட்டு வருவாராம். எந்த இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டதில்லை. தனது நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் மகப்பேறு விடுப்பு எடுத்தால் அவர்கள் மீண்டும் வேலைக்கு வரும் வரை முழுமையான மாத சம்பளத்தைக் கொடுப்பாராம். இவ்வாறு சித்தார்த்தா குறித்து அவரது நிறுவன ஊழியர்கள் தரப்பில் கூறுகின்றனர்.

மிகவும் தாழ்மையான மாணவராகத் திகழ்ந்ததாக அவருக்குச் சிறப்பு வகுப்பு எடுத்த ஆசிரியரான பிரகாஷ் ஷெட்டி தெரிவித்துள்ளார். 1997ஆம் ஆண்டில் சிக்மகளூர் மாவட்டம் முடிகரேவில் ஆரஞ்ச் கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் சித்தார்த்தா பயிற்சி வகுப்புக்குச் சென்றுள்ளார். அங்கு சித்தார்த்தாவுக்கு பயிற்சி வகுப்பு எடுத்த பிரகாஷ் ஷெட்டி, அதுகுறித்து டைம்ஸ் நெட்வொர்க் ஊடகத்திடம் பேசுகையில், “தனது சிறு வயதிலேயே அனைத்து ஆடம்பர வசதிகளும் சித்தார்த்தாவுக்கு இருந்தது. ஆனால் அவரிடம் அந்த எண்ணம் இருந்ததே இல்லை. சாதாரண மாணவராக வகுப்புக்கு வருவார். மற்ற மாணவர்களிடமிருந்து வித்தியாசமாக இருப்பார்.
சித்தார்த்தா மிகவும் அமைதியான நபர். ஒரு பணக்காரர் இவ்வளவு பக்குவமாக இருக்கிறாரே என்று நான் பலமுறை ஆச்சரியப்பட்டதுண்டு. காபி தோட்டத்துக்கு ஊழியர்கள் வந்தால் அவர்களுக்குத் தனி மரியாதை கொடுப்பார். அவர்களிடம் அன்போடு பழகுவார். அது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அவருக்கு அப்போது 30 வயது. மற்ற மாணவர்கள் அனைவருக்கும் 20 வயதுக்கு உள்ளேதான் இருக்கும். சித்தார்த்தா பயிற்சி வகுப்பில் மிகவும் பெரியவராக இருந்தாலும் மிகவும் கனிவாக நடந்துகொள்வார்” என்று தெரிவித்துள்ளார்.
சித்தார்த்தாவுக்கு அமர்த்தியா, இஷான் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். அமர்த்தியா கொலம்பியா பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் படித்தவர். இவர் கடந்த சில வாரங்களாகத் தந்தையின் அலுவலகங்களுக்கு வரத்தொடங்கியுள்ளார். எனவே சித்தார்த்தாவின் முக்கிய அலுவலகப் பொறுப்புகளை அமர்த்தியா கவனிப்பார் என்று தெரிகிறது. மற்றொரு மகன் இஷான் அமெரிக்கன் பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர். அவர் தனியாகத் தொழில் தொடங்கும் முனைப்பில் இருக்கிறார்.
சித்தார்த்தாவின் மனைவி மாளவிகா, கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மூத்த மகள் ஆவார். சித்தார்த்தா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர் கடைசியாக மாளவிகாவிடம் போனில் தொடர்பு கொண்டு பேசியது விசாரணையில் தெரியவந்தது. சித்தார்த்தாவின் கடன் நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகள் எதுவும் தன் மனைவி மாளவிகாவிடம் சித்தார்த்தா தெரியப்படுத்தவே இல்லை. சித்தார்த்தாவின் இறப்புக்குப் பிறகு நிறுவனத்தின் புதிய இடைக்காலத் தலைவராக எஸ்.வி.ரங்கநாத்தும், முதன்மை நிர்வாக இயக்குநராக நிதின் பாக்மனேயும் மாளவிகாவின் ஆலோசனையின் பேரிலேயே நியமிக்கப்பட்டுள்ளனர். நிறுவனத்தின் தலைமை இயக்குநராக விரைவில் மாளவிகா நியமிக்கப்படவுள்ளார்.

சித்தார்த்தாவின் தந்தை கங்கையா ஹெக்டேவுக்கு 96 வயதாகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு குளியல் அறையில் தவறி விழுந்து அவருக்குத் தலையில் பலத்த அடிபட்டுள்ளது. அவருக்கு மைசூருவில் உள்ள சாந்தாவெரி கோபாலா கவுடா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சுயநினைவு இல்லாமல் இருந்து வருகிறார். சித்தார்த்தா தற்கொலை செய்து கொண்டது இதுவரை அவருக்குத் தெரியாது. அவரது உடல்நிலை கடந்த சில தினங்களாக முன்னேற்றம் இல்லாமல் உள்ளது. இது சித்தார்த்தாவின் குடும்பத்தினரை மேலும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக