வியாழன், 1 ஆகஸ்ட், 2019

கோவை இந்தியன் வங்கி முன்பு விவசாயி பூபதி தற்கொலை!

கோவை இந்தியன் வங்கி முன்பு விவசாயி தற்கொலை!மின்னம்பலம் : சங்ககிரி கொங்கணாபுரத்தைச் சேர்ந்த விவசாயி, கோவை இந்தியன் வங்கி முன்பு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கோவை அருகே கொங்கணாபுரத்தை சேர்ந்தவர் விவசாயி பூபதி. இவர் 2015ஆம் ஆண்டு தனது நண்பர்கள் இருவருடன் கோவை வெரைட்டி ஹால் சாலையில் உள்ள இந்தியன் வங்கியில், பால் பண்ணை வைப்பதற்காகக் கடன் வாங்கியுள்ளார். பால் பண்ணை லாபகரமாக இயங்காததால் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த கடனுக்காகத் தனது சொத்து பத்திரங்கள் சிலவற்றை பூபதி வங்கியில் அடமானம் வைத்துள்ளார்.
கடனை திருப்பி செலுத்த முடியாததால் தான் பெற்ற கடனை மட்டும் திருப்பி செலுத்தி பத்திரத்தை திரும்பப் பெறுவதாக வங்கி மேலாளரிடம் தெரிவித்திருக்கிறார். இதனால் பூபதி, வங்கி மேலாளருக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. மூவரும் வாங்கிய கடனை திருப்பி செலுத்தினால் மட்டுமே பத்திரங்கள் திரும்பி ஒப்படைக்கப்படும் என்று வங்கி தரப்பில் பூபதிக்கு நெருக்கடி கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் மன உளைச்சலிலிருந்த பூபதி இன்று (ஆகஸ்ட் 1) இந்தியன் வங்கி முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவர் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது உடலைப் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக