திங்கள், 15 ஜூலை, 2019

தேசிய புலனாய்வு முகமைக்கு அதிக அதிகாரம் .. பாசிசத்துக்கு வரவேற்பு ...


மின்னம்பலம் :தேசிய புலனாய்வு முகமைக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் சட்டத் திருத்த மசோதா இன்று மக்களவையில் நிறைவேறியது.
தேசிய புலனாய்வு முகமைக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது தொடர்பான சட்டத் திருத்த மசோதா இன்று (ஜூலை 15) மக்களவையில் கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த மசோதாவிற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
விவாதத்தில் மீது திமுக சார்பில் பேசிய ஆ.ராசா, “நமது நாடு ஒரு மதச்சார்பற்ற நாடு. சமூக ஜனநாயக குடியரசு என்றுதான் அரசியல் சாசனத்தின் முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் குற்றவியல் சட்டங்கள் மதச்சார்பற்றவையாக உள்ளன. இந்த சட்டங்கள் மதச்சார்பற்றவையாக தொடர்வதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும். தீவிரவாதத்திற்கு எதிராக என்.ஐ.ஏ மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த சட்டத் திருத்த மசோதாவை மதவாத கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டது. கடந்த காலங்களில் தேசிய புலனாய்வு முகமை பதிவு செய்துள்ள வழக்குகள், தண்டனை பெற்றவர்களின் விவரங்கள், அதில் குறிப்பிட்ட மதங்கள் அல்லது சாதிகளைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்ற விவரங்கள் தேவை” என்று தெரிவித்தார்.
மேலும், “வெளிநாடுகளில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் தொடர்பாக இந்தியாவில் வழக்குப் பதிவு செய்ய தேசிய புலனாய்வு முகமைக்கு அதிகாரம் அளிப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது” என்றும் குறிப்பிட்டார்.
மசோதா மீது பதிலளித்த உள் துறை அமைச்சர் அமித் ஷா, “மத்திய அரசு இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தாது. இந்த சட்டத்தின் மூலமாக பயங்கரவாதத்தையே ஒழிக்க நினைக்கிறது” என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் 274 உறுப்பினர்களின் ஆதரவுடன் தேசிய புலனாய்வு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக