வெள்ளி, 12 ஜூலை, 2019

நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்!

நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்!
 மின்னம்பலம் :  தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள பொட்டிபுரம் அம்பரப்பர் மலைப்பகுதியில் சுமார் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. சுமார் 2 கிமீ தூரத்துக்குச் சுரங்கம் அமைத்து இந்த ஆய்வகம் அமைக்க இருந்தது.
ஆனால், இந்த ஆய்வு மையம் அமைவதன் மூலம் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படும் என தேனி சுற்றுவட்டாரப் பகுதியினரும் அரசியல் கட்சிகளும் சூழலியல் அமைப்புகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராடிவருகின்றன. நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பிலும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்தச் சூழலில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் விஜயகுமார், “தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு ஏதேனும் உத்தரவிட்டுள்ளதா? அவ்வாறு உத்தரவிட்டிருந்தால் அதுகுறித்த விரிவான தகவல் வேண்டும் என்று கேட்டிருந்தார். மேலும் நாட்டின் வேறு எந்தெந்த இடங்களில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமையவுள்ளது என்று கேட்டிருந்தார்.

இதற்கு மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில், “தமிழகத்தின் தேனி மாவட்டத்திலுள்ள பொட்டிபுரம் என்னும் இடத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க இந்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மலையில் 2 கிமீ நீளத்துக்குச் சுரங்கம் அமைத்து 51,000 டன் இரும்பு கலோரிமீட்டர் கருவி மூலமாக நியூட்ரினோவைக் கண்டறிவதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டம் அந்தப் பகுதியிலுள்ள சுற்றுப்புறச் சுழலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. கதிர்வீச்சுக்களை வெளிப்படுத்தாது. மேலும், எவ்வித கதிரியக்க பொருளும் இதில் பயன்படுத்தப்படவில்லை. அளவீடு செய்வதற்காக காஸ்மிக் கதிர்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன” என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்த அறிக்கையை மத்திய அணுசக்தி துறை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மீண்டும் போராட்டத்தை முன்னெடுக்கத் தயாராகிவிட்டன தமிழகச் சூழலியல் அமைப்புகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக