வெள்ளி, 12 ஜூலை, 2019

மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?

மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?மின்னம்பலம் : தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் ஒவ்வொரு நாளும் டெல்லியில் வெவ்வேறு மத்திய அமைச்சர்களைச் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளைப் பற்றி மனுக்கள் அளிக்கிறார்கள்; வேண்டுகோள்களை முன்வைக்கிறார்கள்.
ஆனால், ஓரிரு நாட்களுக்கு முன் டெல்லியில் திமுக எம்.பி ஒருவர் மத்திய இணையமைச்சரைச் சந்தித்துப் பேசியது டெல்லி அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை உண்டாக்கியுள்ளது.
திமுகவின் மத்திய சென்னை மக்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் ஓரிரு நாட்கள் முன் பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங்கைச் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்புக்கு மிகப்பெரிய அரசியல் பின்னணி இருப்பதாக டெல்லியில் பேச்சு அடிபடத் தொடங்கியுள்ளது. காரணம், தமிழக எம்பிக்கள் பலரும் மத்திய அமைச்சர்களை அவரவர் அலுவலகங்களில் சந்திக்கும் நிலையில் தயாநிதி மாறன் மட்டும் ஜிதேந்திரசிங் கை அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளார்.

இது பற்றி டெல்லி பாஜக வட்டாரங்களில் இதுபற்றி பேசும்போது, “பிரதமர் நரேந்திர மோடியிடம் இருக்கும் பொறுப்புகளைக் கவனிப்பதில் உறுதுணையாக இருப்பதுதான் பிரதமர் அலுவலக இணையமைச்சரின் பணி. அந்த வகையில் மத்திய பணியாளர் நலன், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை, வடகிழக்கு மாநிலங்களுக்கான நலன் உள்ளிட்ட துறைகள் ஜிதேந்திர சிங்கிடம் இருக்கின்றன.
மேற்கண்ட துறைகளில் தயாநிதி மாறனுக்குக் கோரிக்கை இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதேநேரம் பிரதமர் அலுவலக இணையமைச்சர் என்ற ரீதியிலும் தயாநிதி மாறன் ஜிதேந்திர சிங்கைச் சந்தித்துப் பேச முகாந்திரம் உள்ளது.

சில வாரங்களாகவே நீங்கள் உற்று நோக்கினால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜக மீது முன்பு காட்டிய கடுமையை, பாய்ச்சலை அதே வேகத்தில் இப்போது வெளிப்படுத்துவதில்லை. பாஜக மீதான ஸ்டாலினின் அணுகுமுறையில் ஒரு சிறு மாற்றம் தென்படத் தொடங்கியிருக்கிறது.
பாஜக தற்போது தென்னிந்தியாவில் கழுகு பார்வையைப் பதித்துள்ளது. பாஜக வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதேநேரம் பாஜகவின் முக்கிய எதிர்க்கட்சிகளை அவற்றின் பலவீனங்களை வைத்து ஒடுக்கி ஓரம்கட்டுவதும் பாஜகவின் தென்னிந்திய அஜெண்டாவில் இருக்கிறது.
உள் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற அமித் ஷா தமிழகத்தில் உள்ள திமுக எம்.பி.க்களின் ஒட்டுமொத்த அரசியல் ஜாதகத்தையும் தற்போது தன் கையில் வைத்திருக்கிறார். இதில் பல திமுக எம்.பி.க்கள் மீதான வழக்குகள் தூசு தட்டப்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.
இந்தப் பின்னணியில்தான் ஸ்டாலின், பாஜக மீது கடுமை காட்டுவதைக் குறைத்துள்ளார். அதேநேரம் டெல்லி அரசு நிர்வாக வலைப்பின்னல்களை நன்கு அறிந்த திமுக எம்.பி தயாநிதி மாறன், பிரதமர் அலுவலக இணையமைச்சரைச் சந்தித்திருக்கிறார். இது கிட்டத்தட்ட பிரதமரை மறைமுகமாகச் சந்திப்பது போன்ற நிகழ்ச்சிதான்.
இந்தச் சந்திப்பின் மூலம் பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் அனுப்பியுள்ள செய்தியைச் சுமந்த தூதுவராகவே தயாநிதி மாறன் பார்க்கப்படுகிறார்” என்கிறார்கள் டெல்லி பாஜக வட்டாரத்தில்.
அதேநேரம் தயாநிதி மாறன் திமுக தலைவர் ஸ்டாலின் அனுமதி பெற்று ஜிதேந்திரசிங் கை சந்தித்தாரா அல்லது ஸ்டாலினுக்கு தெரியாமல் சந்தித்தாரா என்ற கேள்விகளும் டெல்லி பாஜக வட்டாரத்தில் இன்னொரு தரப்பிலிருந்து முன்வைக்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக