வியாழன், 11 ஜூலை, 2019

கர்நாடகா .. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சபாநாயகர்!

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சபாநாயகர்!மின்னம்பலம் : எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதம் மீதான முடிவை இன்று இரவுக்குள் எடுக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராகக் கர்நாடகா சபாநாயகர் ரமேஷ் குமார் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதில், குறிப்பிட்ட முறையில் முடிவெடுக்க சபாநாயகருக்கு எதிராக உத்தரவிட முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் ஆளும் கூட்டணிக் கட்சியில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகி வருகின்றனர். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பைக்குச் சென்று அங்கு இரண்டு நாட்கள் தனியார் விடுதியில் தங்கியிருந்தனர். தாங்கள் ராஜினாமா கடிதம் கொடுத்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதாகச் சபாநாயகர் ரமேஷ் குமார் மீது உச்ச நீதிமன்றத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று (ஜூலை 11) விசாரணைக்கு வந்த போது, ’10 எம்.எல்.ஏக்களும் மாலை 6 மணிக்குள் சபாநாயகர் முன் ஆஜராகி தங்களது விளக்கத்தை அளிக்க வேண்டும், அதன் மீது சபாநாயகர் இன்று இரவே முடிவு எடுக்க வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி மும்பையில் இருந்து தனி விமானம் மூலம் பெங்களூரு வந்த 10 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அங்கிருந்து சபாநாயகர் அலுவலகம் சென்று புதிய ராஜினாமா கடிதத்தை வழங்கவுள்ளனர். இதற்கிடையே உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளார் சபாநாயகர். அவரது சார்பில் வழக்கறிஞர் சினேகா ரவி ஐயர் தாக்கல் செய்த மனுவில் “ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் முடிவெடுக்கக் கால அவகாசம் வேண்டும். சட்டப் பிரிவு 190 ஆவது பிரிவின் கீழ் குறிப்பிட்ட முறையில் முடிவெடுக்க சபாநாயகருக்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார். இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், 10 எம்.எல்.ஏக்கள் மனுவோடு சேர்த்து நாளை இம்மனுவையும் விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில முதல்வர் குமாரசாமி, “நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும். இப்போது ராஜினாமா செய்ய வேண்டியதற்கான அவசியம் என்ன?. 2009ல் 18 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த போது எடியூரப்பா ராஜினாமா செய்தாரா? என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக