வியாழன், 11 ஜூலை, 2019

காட்டுமன்னார் கோயில் காவல் நிலையத்தில் இளைஞர் மர்ம மரணம் .. தற்கொலை என்று போலீஸ் ..

காவல் நிலையத்தில் லாக் அப் டெத்!மின்னம்பலம் : கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தின் கழிவறையில் விசாரணைக் கைதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதால் மாவட்டத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
காட்டுமன்னார்கோவில் காவல்நிலையத்தில் என்னதான் நடந்தது என்று விசாரணையில் இறங்கினோம்.
ஜூலை 10ஆம் தேதி, மாலை நகரப் பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி ஏடிஎம்மில் ஓம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீசன் (66) பணம் எடுக்க வந்துள்ளார். அவருக்குப் பணம் எடுப்பது எப்படி என்று தெரியாததால் அவருக்குப் பின்னால் சென்ற இளைஞர் ஒருவர் பணம் எடுக்க உதவிசெய்து ஏடிஎம் கார்டை மாற்றிக் கொடுத்துவிட்டு வெளியேறிவிட்டார்.
உடனே ஜெகதீசனின் ஏடிஎம் கார்டு மாறிப்போனதைப் பற்றியும் தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1200 பணம் எடுக்கப்பட்டு அதற்கான குறுஞ்செய்தி செல்போனுக்கு வந்துள்ளது பற்றியும் எஸ்.பி.ஐ. வங்கியிலும் காவல்துறையிலும் புகார் கொடுத்துள்ளார். ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து போலீஸார் விசாரித்தபோதுதான் தெரிந்தது அந்த இளைஞர் ருத்திரசோலை கிராமத்தைச் சேர்ந்தவர் என்று. காட்டுமன்னார்கோவில் அருகில் உள்ள ருத்திரசோலை கிராமம் பொதிகை வீதியில் உள்ள பத்தர் (முதலியார்) சமூகத்தைச் சேர்ந்த மூர்த்தியின் மகன் வினோத் என்பவர்தான் ஜெகதீசனிடம் ஏடிஎம் கார்டை மாற்றி எடுத்துச் சென்றுள்ளார்.

நேற்று இரவே வினோத் காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார். தான் ஐடிஐ படித்த இளைஞன் என்றும் இதற்கு முன்பு இதுபோன்ற திருட்டு சம்பவத்தில் ஈடுபடவில்லை என்றும் கூறியவர், ”நான் எடுத்த பணத்தை வீட்டில் பேன்ட் பாக்கெட்டில் வைத்துள்ளேன். அதை எடுத்துக்கொடுத்துவிடுகிறேன்” என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வினோத்தை லாக் ஆப்பில் வைத்திருந்த காவல் துறையினர், இன்று (ஜூலை 11) காலை 8.00 மணிக்கு அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள்.
பணம் திருடியதாக வினோத் பிடிபட்டது தெரிந்த ஊர் மக்கள் ”இவனா திருடினான்” என்றும், சிலர் வினோத்திடமே சென்று ”தம்பி நீயாடா தவறு செய்தாய்” என்று கேட்கக் கண்ணீரோடு அவமானம் தாங்காமல் தலை குனிந்தபடி நடந்துள்ளார் வினோத். வீட்டிலிருந்த ரூ.1,200 பணத்தை எடுத்துக்கொண்டு வினோத்தை 8.30 மணிக்கு மீண்டும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தார்கள். அவமானம் தாங்கமுடியாமல் கதறியழுத வினோத் 9.00 மணியளவில் கழிவறைக்குச் செல்வதாகச் சென்று தான் உடுத்தியிருந்த வேட்டியால் கழுத்தில் சுருக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.
கழிவறைக்குச் சென்ற வினோத் நீண்டநேரமாகியும் திரும்பவில்லையே என்று, பணியில் இருந்த போலீஸார் ஒருவர் ஓடிப்போய் கழிவறையின் கதவைத் தட்டியபோதுதான் தெரிந்தது வினோத் உயிரை மாய்த்துக்கொண்டார் என்று. அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தபோது வினோத் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இத்தகவல் அறிந்த நிலைய அதிகாரி எஸ்.ஐ. இராஜேந்திரன் மற்றும் சர்க்கில் ஆய்வாளர் ரவிந்தர் ராஜன், சட்டமன்றம் நடைபெற்றுவரும் இந்த நேரத்தில் இப்படி ஒரு சம்பவமா என்று உரைந்துபோனார்கள்
வினோத் லாக் அப் டெத்துக்கு யார் காரணம், என்ன காரணம் என்று காட்டுமன்னார்கோவிலில் இருந்த போலீஸாரிடம் கேட்டோம்.
”ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இன்ஸ்பெக்டரை விட அதிகாரம் படைத்தவர்கள் எஸ்.பி, தனிப்பிரிவு ஏட்டுகள்தான். அவர் சொல்வதைத்தான் காவல் நிலையத்தில் உள்ளவர்கள் செய்யவேண்டும். காவல் நிலையத்தில் தற்கொலை செய்துகொண்ட வினோத் விஷயத்தில்கூட பொறுமையாகக் கையாளவேண்டும் என்றுதான் நினைத்தோம். எஸ்.பி, ஏட்டுதான் அழுத்தம் கொடுத்து வினோத்தை ஊருக்கு அழைத்துப்போய் பணத்தை ரெக்கவரி செய்யுங்கள். என்றும் வினோத் மீது வேறு ஏதேனும் வழக்குகள் உள்ளதா என்று விசாரியுங்கள் என்றும் கூறினார். அவர் சொல்வதைச் செய்யவில்லை என்றால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் தவறான தகவல் கொடுத்து போலீஸ் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரையில் பழிவாங்கிவிடுவார் என்று நாங்களும் பயந்து ஓடினோம்.
எஸ்.பி, தனிப்பிரிவு ஏட்டுகள் ஆதிக்கம் காட்டுமன்னார்கோவிலில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் இதே நிலைதான். இன்ஸ்பெக்டர்கள் சம்பாதிப்பதைவிட அதிகமாகச் சம்பாதிப்பார்கள். எஸ்.பி, தனிப்பிரிவில் இருந்தவர்கள், இருப்பவர்கள் பலர் மேல் அதிகாரிகளைக் காக்கா பிடித்துக்கொண்டு பணம் கொழிக்கும் கலால், புட்செல் ஆகிய பிரிவுகளுக்கு மாறிவிட்டு, மீண்டும் எஸ்.பி, தனிப்பிரிவுக்கே பதவி வாங்கிவிட்டு வருவார்கள். இவர்கள் சொல்வதைத்தான் எஸ்.பி.களும் கேட்பார்கள்” என்று புலம்பினார்கள்.
”காவல் நிலையத்தில் தற்கொலை செய்துகொண்ட வினோத் சூழ்நிலை காரணமாகத் தவறுசெய்துவிட்டான். இவனைவிடப் பெரிய திருடர்கள் பலர் இருக்கிறார்கள்; அவர்களைப் பிடித்தாலும் சமரசம் செய்து அனுப்பிவிடுகிறார்கள். காரணம், அவர்கள் மெஜாரிட்டி சாதியினர், வினோத் மைனாரிட்டி சாதியினர்” என்கிறார் வினோத்தின் உறவினர்.
தற்கொலை செய்துகொண்டவன் தலித், வன்னியர் சமுதாயமாக இருந்திருந்தால் போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று பலநாள் சடலத்தை வாங்காமல் இருப்பார்கள். கட்சியினரும் போராட்டத்தில் இறங்கியிருப்பார்கள். காவல்துறையினருக்குப் பெரும் தலைவலியாக இருந்திருக்கும். இறந்தவன் முதலியார் சமூகம் என்பதால் பெரிய பிரச்சனைகள் இல்லை என்று பெருமூச்சுவிட்டு நிம்மதியடைந்துள்ளார்கள் மாவட்ட காவல்துறை அதிகாரிகள்.
காவல்துறையினரின் தவறான அணுகுமுறையாலும் ஆணவப்போக்காலும் வினோத் என்ற இளைஞனை இழந்துவிட்டதாகக் கருதுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக