ஞாயிறு, 7 ஜூலை, 2019

நீட் விலக்கு நிராகரிக்கப்பட்ட விடயம் எடப்பாடி அரசுக்கு முன்பே தெரியும்?

மின்னம்பலம் : நீட் தேர்வு மசோதாக்களை மத்திய அரசு நிராகரித்ததற்குத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நீட் நிராகரிப்பு: முதல்வருக்கு முன்கூட்டியே தெரியுமா?நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டுமென கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரியில் தமிழகச் சட்டமன்றத்தில் இரண்டு மசோதாக்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இரண்டு வருடங்களாக அதன் நிலை என்னவென்றே தெரியாமல் இருந்துவந்தது. இந்த நிலையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு நேற்று (ஜூலை 6) விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “தமிழக அரசின் இரண்டு மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டுவிட்டதாக உள் துறை சார்பு செயலாளர் பதிலளித்துள்ளார்” என்று தெரிவித்தனர்.
அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக நிறைவேற்றிய அனுப்பிய தீர்மானத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளதற்குத் தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “27 மாதங்கள் கழித்து,சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்பு இப்போது இந்தத் தகவலை மத்திய அரசு கூறியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. நீட் தொடர்பான கேள்வி இரு அவைகளிலும் எழுப்பப்பட்ட நிலையிலும், அதுகுறித்து பேசப்பட்ட நேரங்களிலும் இந்த மசோதா குறித்த முடிவை அவையில் தெரிவிக்காமல் மூடி மறைத்து வைத்திருந்து, இப்போது நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது ஒரு வகையில் நாடாளுமன்ற அவமதிப்பும் ஆகும்” என்று விமர்சித்துள்ளார்.
பிரதமரிடம் முதல்வர் அளித்த மனுவில் நீட் தேர்வு தொடர்பாக ஒரு வார்த்தை கூட குறிப்பிடப்படவில்லை என்ற ஸ்டாலின், அவ்வாறு கோரிக்கை விடுக்காமல் வாய்மூடி இருந்ததின் உள்நோக்கம் “மசோதாக்களை மத்திய அரசு நிராகரித்து விட்டது” என்பது ஏற்கனவே முதலமைச்சருக்குத் தெரிந்திருக்கிறது என்பது இப்போது வெளிவந்திருக்கிறது. மசோதா நிராகரிக்கப்பட்ட தகவலை முதலமைச்சரோ, சுகாதாரத் துறை அமைச்சரோ தமிழக மக்களுக்கும் சொல்லவில்லை. தமிழகச் சட்டமன்றத்தில் இதுகுறித்து உறுப்பினர்கள் வலியுறுத்திப் பேசிய போதும் தெரிவிக்காமல் இருவருமே சட்டமன்றத்தை அவமதித்துள்ளார்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த முடிவை மத்திய பாஜக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், “மசோதா நிராகரிக்கப்பட்டதற்கு மத்திய அரசுக்கு எதிராக கண்டனத் தீர்மானத்தைச் சட்டப் பேரவையில் கொண்டுவந்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” என்று முதல்வருக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், நீட் தேர்வு மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் சட்ட முன்வரைவுகளுக்கு அனுமதி கொடுக்காமல் நிராகரிக்கப்பட்ட தகவல் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு முன்பே தெரிந்திருக்கும். ஆனால் அந்த செய்தியை மறைத்து, நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் சட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெறுவோம் என்று தமிழக மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வந்த செயல் கடும் கண்டனத்துக்குரியது” என்று விமர்சித்துள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “நீட் தேர்வு மசோதாக்களை நிராகரித்துவிட்டதாக இரண்டு ஆண்டுகள் கழித்து மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் கூறியிருப்பது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அவமதிக்கும் செயலாகும். இதன்மூலம் மத்திய அரசோடு சேர்ந்துகொண்டு மக்கள் விரோத எடப்பாடி அரசு இரண்டு ஆண்டுகளாக நடத்திவந்த நாடகம் அம்பலமாகியுள்ளது. நடப்பு கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வுக்கு விலக்கு கோரி மசோதா நிறைவேற்ற வேண்டு” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “நீட் தேர்வுக்கு விலக்களிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்” என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக