ஞாயிறு, 7 ஜூலை, 2019

வேலுார் தொகுதி வெற்றி பெற துடிக்கும் அ.தி.மு.க., - தி.மு.க.,

தினமலர் : வேலுார் லோக்சபா தொகுதி தேர்தல், மத்தியிலோ, மாநிலத்திலோ, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது அல்ல என்றாலும், இதில் வெற்றி
பெற்றாக வேண்டும் என்று, அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகள் நினைப்பதால், தேர்தல் களத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதிகளுக்கும், ஏப்., 18ல் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பணப் பட்டுவாடா விவகாரம் காரணமாக, வேலுார் தொகுதியில் மட்டும், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. வேலுார் தொகுதியில், அ.தி.மு.க., சார்பில், புதிய நீதிக்கட்சி தலைவர், ஏ.சி.சண்முகம் போட்டியிட்டார். தி.மு.க., சார்பில், அக்கட்சி பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த், களம் இறங்கினார். இருவரும் பணத்தை வாரி இறைத்தனர். தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதால், இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். மீதமுள்ள, 38 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில், தேனி தவிர, 37 தொகுதிகளிலும், தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றது. எனினும், மத்தியில் பா.ஜ., பெரும்பான்மை பெற்று, ஆட்சியை பிடித்ததால், மத்திய அரசில் பங்கேற்க முடியாத நிலை, தி.மு.க.,வுக்கு ஏற்பட்டது.

மத்தியிலும், மாநிலத்திலும், ஆட்சி மாற்றம் ஏற்படும் என நினைத்த, தி.மு.க.,வின் கனவு நிறைவேறவில்லை. பெரும் வெற்றி பெற்றும், ஆட்சி மாற்றம் ஏற்படாதது, அக்கட்சியினருக்கு அதிருப்தியைஏற்படுத்தியது. மெகா கூட்டணி அமைத்தும், அ.தி.மு.க., தோல்வியை தழுவியது. தமிழகத்தில், பிரதமர் மோடிக்கு எதிரான அலை காரணமாக, கூட்டணி தோல்வியை தழுவியதாக, அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.


தற்போது நடக்க உள்ள, வேலுார் லோக்சபா தேர்தலால், பிரதமர் மோடிக்கு, எந்த சிக்கலும் இல்லை. அ.தி.மு.க., கூட்டணி சில இடங்களை பிடித்திருந்தால், மத்திய அமைச்சரவையில் இடம் கிடைத்திருக்கும். அந்த வாய்ப்பு பறிபோய் விட்டதே என்ற எண்ணம், மக்களிடம் ஏற்பட்டுள்ளதாக, பா.ஜ.,வினர் கூறி வருகின்றனர்.


தேர்தல் வெற்றி, மோடிக்கு எதிரானது அல்ல; எங்களுக்கு கிடைத்த ஆதரவு என்பதை நிரூபிக்க, வேலுார் தொகுதியிலும், தி.மு.க., வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. 'மக்கள் ஆதரவு, எங்களுக்கு உள்ளது. மோடி வெறுப்பு காரணமாகவே, லோக்சபா தேர்தலில் தோல்வியை தழுவினோம்' என்பதை நிரூபிக்க, அ.தி.மு.க.,வும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.< மேலும், அ.தி.மு.க., விற்கு வெற்றி கிடைத்தால், அக்கட்சி, எம்.பி.,க் கள் எண்ணிக்கை, லோக்சபாவில் இரண்டாக உயரும்; மத்திய அமைச்சர் பதவி கேட்க உதவும். எனவே, வேலுாரில் வெற்றி பெற, அனைத்து வித யுக்திகளையும் பின்பற்ற, அ.தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது. லோக்சபா தேர்தலில், அ.ம.மு.க., படுதோல்வியை சந்தித்தது. அக்கட்சி நிர்வாகிகள், பிற கட்சிக்கு ஓட்டமெடுத்து வருகின்றனர்.


இருக்கிற நிர்வாகிகளை தக்கவைக்கவே, தினகரன் போராடுவதால், வேலுார் தொகுதியில், அக்கட்சி போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தி.மு.க., பொருளாளர் துரைமுருகன், தன் மகனை, எம்.பி.,யாக்க, தற்போது கிடைத்துள்ள வாய்ப்பை தவற விட விரும்பவில்லை. இவ்வாய்ப்பை தவற விட்டால், பின், அவருக்கு, 'சீட்' கிடைப்பதே சிரமமாகி விடும். எனவே, அவரும் தன் வாரிசு வெற்றிக்காக, தன் செல்வாக்கை முழுமையாக பயன்படுத்துவார். எனவே, ஒரு தொகுதிக்கான தேர்தல் என்றாலும், தேர்தல் களத்தில் விறு விறுப்புக்கு பஞ்சமிருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக