வியாழன், 18 ஜூலை, 2019

மாசெக்களுக்கு தெரியாமல் உதயநிதி நடத்தும் புது ஆபரேஷன்!

மின்னம்பலம் : திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் ஜூலை 6ஆம் தேதி நடத்திய, முதல் கூட்டத்திலேயே
மாவட்ட செயலாளர்கள் மீது இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள் சார்பில் புகார்கள் வைக்கப்பட்டன.
உதயநிதிக்கு இந்த திடீர் ஏற்றம் கொடுக்கப்பட்டது இன்னமும் சில மாவட்ட செயலாளர்களை உறுத்திக் கொண்டுதான் இருக்கிறது ஆனால் அவர் தலைவரின் மகன் என்பதால் எதுவும் பேச முடியாமல் தங்கள் வட்டாரத்துக்குள் புலம்பியபடியே இருக்கிறார்கள் சில மாவட்ட செயலாளர்கள். மாவட்ட செயலாளர்களுக்கும் இளைஞர் அணிக்கு மான இந்த நிலையில் இப்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.
அதாவது திமுகவில் மாற்றுக் கட்சியினரோ, எந்த கட்சியும் சாராதவர்களோ யாராக இருந்தாலும் புதிதாக இணையும் போது அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் மூலமாகவே தலைமைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அதன் பிறகு இணைப்பு நிகழ்வு நடைபெறும்.
தலைமைக்கு நேரடி அறிமுகம் பெற்றவராக இருந்தால் கூட அந்த நிகழ்வில் மாவட்டச் செயலாளர்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தப்பட்டு இணைப்பு நிகழ்வில் மாவட்டச் செயலாளர்களும் பங்கு கொள்வார்கள் இதுதான் கலைஞர் காலத்திலிருந்து நடைமுறை.
ஆனால் இந்த விஷயத்தில் உதயநிதி இப்போது புதியதொரு அணுகுமுறையை ஆரம்பித்துள்ளார்.

ஜூலை 14ஆம் தேதி குமரி மாவட்ட தேமுதிக செயலாளர் ஜெகநாதன் திமுகவில் இணைந்தார். அறிவாலயத்தில் நடந்த இந்த இணைப்பு நிகழ்வு பற்றி, சில மணிநேரங்களுக்கு முன்பு தான் குமரி மாவட்டச் செயலர் சுரேஷ் ராஜன் மனோ தங்கராஜ் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் சட்டமன்ற உறுப்பினர் என்பதால், கூட்டத்தொடர் நடக்கும் நிலையில் சென்னையில் இருந்ததால் அங்கு சென்றுவிட்டார்கள். இந்த இணைப்பு நிகழ்வில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முக்கியமாக கலந்துகொண்டிருக்கிறார்.
அதன் பிறகுதான் ஜெகநாதன் மாவட்டச் செயலாளர் மூலமாக அல்லாமல் ஸ்டாலின் வழியாக திமுகவுக்கு வந்திருக்கிறார் என்ற தகவல் குமரி திமுகவினருக்கு தெரியவந்திருக்கிறது.
நம்மிடம் திமுக புள்ளிகள் சிலர்,
“தேமுதிக மாவட்ட செயலாளர் ஜெகநாதனுக்கு தொழில் ரீதியாக உதயநிதிக்கு நெருக்கமான வட்டாரத்துடன் தொடர்பு இருந்து வந்தது. இந்த அடிப்படையில் திமுகவில் சேர்வதற்கு உதயநிதி மூலமாகவே பேச்சு நடத்தி அறிவாலயம் சென்று சேர்ந்துவிட்டார். இது மாவட்டச் செயலாளர்களுக்கு சற்று நெருடலாகத்தான் இருக்கிறது. ஆனாலும் என்ன செய்வது? தலைவர் மகனாயிற்றே?
உதயநிதி இளைஞரணிச் செயலாளராக பொறுப்பேற்றதுமே உறுப்பினர் சேர்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்போவதாக அறிவித்தார். அதற்கேற்ப பல்வேறு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுடன் திமுகவில் இணைய இருக்கும் மாற்றுக் கட்சிப் புள்ளிகளைத் தேடச் சொல்லி இளைஞரணி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார் உதயநிதி. மாசெக்கள் மூலமாக கட்சிக்கு வந்தார்கள் என்றில்லாமல் இளைஞரணி மூலமாக திமுகவுக்கு வந்தார்கள் என்று இருக்க வேண்டும் என்பதே உதயநிதியின் திட்டம். இதற்காக தனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்த புள்ளிகளுக்கும் தானே போன் போட்டு பேசி திமுகவுக்கு அழைக்கிறார். அவர்கள் வந்தால் தனியாக வர மாட்டார்கள் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்களுடன்தான் வருவார்கள். அதன் மூலம் இளைஞரணியின் உறுப்பினர் சேர்க்கையும் அதிகரிக்கும் என்பதே உதயநிதியின் திட்டம்.
அதன்படிதான் தேமுதிக குமரி மாவட்டச் செயலாளர் ஜெகநாதன் திமுகவுக்கு வந்திருக்கிறார். இனி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் உதயநிதி மூலமாக திமுகவில் சேருவார்கள்” என்றனர்.
நாம் திமுகவில் இணைந்த ஜெகநாதனிடமே இதுகுறித்துப் பேசினோம்,.
“தேமுதிகவில் தொண்டர்களின், நிர்வாகிகளின் உணர்வுகளுக்கு ஏற்ற அரசியல் முடிவுகளை அக்கட்சித் தலைமை தொடர்ந்து மறுத்து மாற்று முடிவுகளையே எடுத்து வருகிறது. 2014, 2016, 2019 என்று இந்த போக்கு தொடர்கிறது. அதனால்தான் திமுகவில் இணைய முடிவெடுத்தேன். திமுகவுடன் இணைவது குறித்து உதயநிதி சாருடன் பேசினேன். சார் மூலமாகத்தான் சேர்ந்தேன். அதேநேரம் முறைப்படி மாவட்டச் செயலாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் இணைப்பு விழாவுக்கு வந்து வாழ்த்தினார்கள். குமரியில் திமுகவை மேலும் பலப்படுத்த என்னால் ஆன அத்தனை முயற்சிகளையும் செய்வேன்” என்று கூறினார் ஜெகநாதன்.
-ஆரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக