புதன், 17 ஜூலை, 2019

தமிழகத்தில் நான்கு இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி!

தமிழகத்தில் நான்கு இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி!மின்னம்பலம் : தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் மொத்தம் 32 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழகத்தில் நாகை மாவட்டத்துக்கு உட்பட்ட மாதானம், தஞ்சை மாவட்டத்துக்கு உட்பட்ட பந்தநல்லூர், திருவாரூர் மாவட்டத்துக்கு உட்பட்ட நன்னிலம், கடலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட புவனகிரி ஆகிய நான்கு இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு ஓஎன்ஜிசி நிறுவனமும் இந்தியன் ஆயில் நிறுவனமும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
ஜூலை 1ஆம் தேதியன்று நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தின்போது திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாகக் கேள்வியெழுப்பினார். அவருக்குப் பதிலளித்த மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “ஹைட்ரோகார்பன் விவகாரம் குறித்து ஆலோசிக்க தமிழகத்தின் அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன். வலுக்கட்டாயமாக தமிழகத்தில் நாங்கள் எதுவும் செய்யப் போவதில்லை” என்று உறுதியளித்தார். இந்த நிலையில், அவர் முன்னிலையிலேயே ஹைட்ரோகார்பன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது அதிர்ச்சியளிக்கும் செய்தியாக வெளிவந்துள்ளது.

நேற்று (ஜூலை 16) நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்படாது என்று தமிழக அரசு கூறுகிறது. ஆனால், நேற்று நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது என்று தெரியுமா? திமுக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளிக்கையில், தமிழகத்தில் ஏழு இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் 23 புதிய இடங்களில் அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அவரது பேச்சு தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைட்ரோகார்பனுக்கு எதிராக தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்தால்தான் அவர்கள் மூச்சு விடமுடியும்” என்று தெரிவித்தார். அவருக்குப் பதிலளித்துப் பேசிய சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், “ஹைட்ரோகார்பன் திட்டத்துக்குக் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி வருகிறது. ஆனால், தமிழக அரசு சார்பில் எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை. எங்கள் அனுமதியின்றி ஹைட்ரோகார்பன் திட்டத்தைத் தொடங்க முடியாது. விவசாயிகளை பாதிக்கும் திட்டத்தைத் தமிழக அரசு அனுமதிக்காது. இவ்விவகாரத்தில் சிலர் தூண்டிவிடும் வேலையைச் செய்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய ஸ்டாலின், “ஹைட்ரோகார்பன் விவகாரத்தில் தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் போராட வேண்டிய அவசியம் இல்லை. விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவது அழகல்ல” என்று கூறினார். அவருக்குப் பதிலளித்த சண்முகம், “கொச்சைப்படுத்தும் நோக்கத்தில் பேசவில்லை. திட்டத்தைச் சட்ட ரீதியாகத் தடுத்து நிறுத்த நமக்கு உரிமை இருக்கிறது. ஹைட்ரோகார்பன் விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது.
மாநில அரசின் அனுமதியின்றி மத்திய அரசு எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த முயன்றால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் இடம் இருக்கிறது. அப்படியிருக்கும்போது எதற்காகப் போராட்டம் நடத்த வேண்டும்?” என்று கேள்வியெழுப்பினார். இவ்வளவையும் கடந்து தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஓஎன்ஜிசி நிறுவனமும் இந்தியன் ஆயில் நிறுவனமும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது விவசாயிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக