புதன், 17 ஜூலை, 2019

காங்கிரஸ் தலைவராக பிரியங்காவுக்கு அழைப்பு!

மின்னம்பலம் : காங்கிரஸ் தலைவராக பிரியங்காவுக்கு அழைப்பு!கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த படுதோல்வியை அடுத்து மே 25ஆம் தேதி காங்கிரஸ் காரியக் கமிட்டியில் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் ராகுல் காந்தி. ஆனால், காரியக் கமிட்டி உறுப்பினர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல் அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்தார்கள்.
ஆனால், காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவது உறுதியான முடிவு என்றும் அடுத்த தலைவரைத் தீவிரமாகத் தேட முயற்சி செய்யுமாறும், ஜூலை 3ஆம் தேதி ஒரு விரிவான அறிக்கை மூலம் மீண்டும் ராகுல் காந்தி வலியுறுத்தினார். இதையடுத்து காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் புதிய நபரைத் தேடும் படலம் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில்தான் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக பிரியங்கா காந்தி ஏன் வரக் கூடாது என்று ஆங்காங்கே அரசல்புரசலாக சில குரல்கள் எழுந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக பிரியங்கா காந்தி வர வேண்டும் என்று முதன்முதலாக வெளிப்படையான குரல்கள் இப்போது வர ஆரம்பித்துள்ளன.

ராகுல் இல்லையென்றால் பிரியங்காதான்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திடம் பேசும்போது, “காங்கிரஸ் கட்சியின் லட்சக்கணக்கான தொண்டர்கள் ராகுல் காந்தியைத் தவிர யாரையும் தலைவராக ஏற்கவில்லை. அதேநேரம், அவரே தலைவர் பதவியை ஏற்க மறுக்கும் நிலையில் அடுத்த கட்டமாக பிரியங்கா காந்தி தலைமைப் பொறுப்பை ஏற்றால் என்ன என்று தொண்டர்களும் நிர்வாகிகளும் இப்போது சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். நானும்கூட பிரியங்கா காந்தி அவர்களே காங்கிரஸ் கட்சியின் தலைவராக வர வேண்டும் என்று நம்புகிறேன். அவர் நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர். இளமைத் துடிப்புள்ள தொலைநோக்குப் பார்வையில் உள்ள தலைவரான பிரியங்கா காந்தி காங்கிரஸ் அரசு தலைமை ஏற்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இதேபோல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஒடிசாவைச் சேர்ந்த பக்தர் சரண்தாஸ் விஜயன் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திடம் பேசும்போது,
மோடி பிராண்டை அகற்ற நேரு பிராண்டே வழி
“ராகுல் காந்தி தலைவர் இல்லை என்றாகிவிட்ட நிலையில் நாங்கள் பிரியங்கா காந்தியைத் தலைவராக வலியுறுத்துவதில் தவறு ஏதும் இல்லை. அதேநேரம் தொண்டர்களின் இந்த விருப்பமும் கோரிக்கையும் காங்கிரஸ் கட்சி அமைப்புக்குள் எழுப்பப்பட வேண்டிய இடத்தில் இன்னும் எழுப்பப்படவில்லை. ராகுல் காந்தி தன்னுடைய ராஜினாமாவைத் திரும்ப பெற மாட்டார் என்ற நிலையில் பிரியங்காவை முன்மொழிவதில் தவறு ஏதும் இல்லை.
பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியில் இணைந்து கடந்த தேர்தலில் கடுமையாக உழைத்திருக்கிறார். அவருக்கு இந்தியா முழுவதும் மக்களின் ஆதரவு இருக்கிறது. நேரு குடும்பத்தைத் தாண்டி புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்குமாறு ராகுல் காந்தி கூறியுள்ளார். ஆனால், அது சாத்தியமற்றது. நேரு குடும்பம் என்ற பிராண்டை இந்திய அரசியலிலிருந்து நீக்கிவிட்டு மோடி பிராண்ட் என்ற ஒன்றை உருவாக்க நினைக்கிறது பாஜக. அதற்கு இடம் கொடுக்க முடியாது. ஏனெனில் மோடி பிராண்டை அகற்ற நேரு பிராண்டால்தான் முடியும்” என்கிறார் தாஸ்.

காங்கிரஸ் உடைந்தது நேரு குடும்பம் அல்லாத தலைமையில்தான்
காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் நேரு குடும்பத்திலிருந்து ஒருவர் வர வேண்டும் என்பதற்கு அக்கட்சி நிர்வாகிகள் சிலர் வேறு காரணங்களைக் கூறுகிறார்கள்.
“எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் நேரு குடும்பத்தின் தலைமையில்தான் காங்கிரஸ் ஒற்றுமையாக இருந்துள்ளது. நேரு குடும்பத்தினர் காங்கிரஸ் தலைவர் அல்லாத காலங்களில் கட்சியில் பெரிய விளைவுகள் ஏற்பட்டுள்ளன. அர்ஜுன் சிங், திவாரி, ஜி.கே.மூப்பனார், மாதவராவ் சிந்தியா போன்ற கட்சியின் பலமான தலைவர்கள் பிரிந்துசென்று தத்தமது மாநிலங்களில் மாநில காங்கிரஸ்களை ஏற்படுத்தியது நேரு குடும்பம் தலைவர் பதவியில் இல்லாதபோதுதான். இந்த நிலையில் சமஸ்தானங்களை ஒன்றிணைத்ததுபோல விரிந்து கிடந்த காங்கிரஸ் கட்சியை இப்போது ஒருங்கிணைத்து, கட்டியெழுப்ப வேண்டியது புதிய தலைவரின் கடமை. அதற்கு இந்திரா காந்தியின் முகச்சாயலில் இருக்கும் பிரியங்கா காந்தி நிச்சயம் உதவுவார்.
இந்திரா காந்தி, சோனியா காந்தி போன்ற பெண் தலைவர்களின் தலைமையில் காங்கிரஸ் வீறு கொண்டு எழுந்துள்ளது. அதேபோல இப்போது பிரியங்கா காந்தி தலைமையிலும் காங்கிரஸ் கட்சி வீறு நடை போட வாய்ப்பிருக்கிறது” என்று எதிர்பார்க்கிறார்கள் கடைக்கோடி காங்கிரஸ் தொண்டர்கள்.
கர்நாடக அரசியல் நெருக்கடியில் காங்கிரஸ் தலைமை மூழ்கியுள்ளதால் ஜூலை 22க்கு பின்னர்தான் காரிய கமிட்டி கூடுகிறது. அதில் பிரியங்கா காந்தியை யாரேனும் முன்மொழிவார்களா என்பதுதான் இப்போது கட்சியில் நிலவும் எதிர்பார்ப்பு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக