வியாழன், 4 ஜூலை, 2019

மாணவி காரில் பாலியல் வன்கொடுமை 5 மாணவர்கள் கைது .. மங்களூர்

மங்களூரில் கல்லூரி மாணவியை காரில் கற்பழித்த 5 மாணவர்கள் கைது
மாலைமலர் ; மங்களூரில் கல்லூரி மாணவியை காருக்குள் 5 மாணவர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூர்: கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ் அப்பில் ஆபாச வீடியோ ஒன்று பரவியது.
காரில் அரைகுறை ஆடையுடன் இருக்கும் பெண்ணிடம் 5 வாலிபர்கள் தகாத முறையில் ஈடுபடுவதும், பாதிக்கப்பட்ட பெண் போதையில் இருப்பதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த ஆபாச வீடியோ மாநிலம் முழுவதும் பெரும் பாலான பகுதிகளில் வாட்ஸ் அப்பில் பரவியது.
அதில் இருக்கும் பெண் யார்? அவரிடம் அத்துமீறி நடந்துகொள்ளும் 5 வாலிபர்கள் யார்? என்பது தெரியாமல் இருந்தது. இதனைத்தொடர்ந்து இந்த இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றது.
இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக மாநிலம் போலீஸ் அதிகாரிகள் தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர். மங்களூர் அருகே உள்ள தச்சினகன்னடா போலீஸ் நிலையத்தில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் 5 கல்லூரி மாணவர்கள் சேர்ந்து மாணவியை கற்பழித்து இருப்பது தெரிய வந்தது. அப்பகுதியில் உள்ள கல்லூரி மாணவரான சுனில் என்பவரின் அழைப்பை ஏற்று மாணவி காரில் சென்றுள்ளார். அப்போதுதான் மாணவி சீரழிக்கப்பட்டது தெரியவந்தது.

சுனில் மாணவியுடன் காரில் இருந்தபோது அவரது நண்பர்கள் 4 பேரும் வந்து காரில் ஏறியுள்ளனர். பின்னர் 5 பேரும் சேர்ந்து மாணவியை கற்பழித்து வீடியோ எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் இவர்களே இந்த வீடியோவை ஈவு இரக்கம் இன்றி வாட்ஸ் அப்பில் பரப்பியதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து சுனில், குருநாதன், பிஜ்வால், கிஷாந்த், பிரக்கியா ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட் டனர்.

பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்பதால் அதுதொடர்பான சட்டப்பிரிவு உள்பட கடுமையான 4 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கற்பழிப்பு வழக்கும் பாய்ந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி பிரசாத் கடும் எச்சரிக்கையையும் வித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான வீடியோவை யாரும் மற்றவர்களுக்கு அனுப்பக்கூடாது. இந்த வீடியோவை செல்போனிலோ அல்லது கம்ப்யூட்டரிலோ பதிவு செய்து வைத்திருந்தாலும் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இதனை வாட்ஸ் அப்பில் பரப்பினால் சம்பந்தப்பட்டவர்கள் மீதும் வாட்ஸ் அப்பில் குழு அட்மின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்திய குற்றத்துக்காக அதனை பரப்பியோர் கைது செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தை கண்டித்து இளைஞர் அமைப்பினர் போராட்டத்தில் குதிக்கவும் திட்டமிட்டுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக