வியாழன், 4 ஜூலை, 2019

உதயநிதி நியமனம் - குடும்பத்தில் நடந்த சென்டிமென்ட் போராட்டம்!

மின்னம்பலம் :
டிஜிட்டல் திண்ணை:   உதயநிதி நியமனம் - குடும்பத்தில் நடந்த சென்டிமென்ட் போராட்டம்!
மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்ட கொஞ்ச நேரத்தில் வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது. அறிவாலயத்துக்கும் அன்பகத்துக்கும் இடையே நடந்துவரும் கொண்டாட்ட புகைப்படங்களை முதலில் அனுப்பிவிட்டு, மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“திமுகவின் இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறார். மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றிபெற்ற நாளில் இருந்தே உதயநிதிக்கு மாநில இளைஞர் அணிச் செயலாளர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்ற குரல் அவரது குடும்பத்தில் இருந்து புறப்பட்டது. அன்பில் மகேஷ் உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகளால் கட்சியில் இதற்கான கருத்துருவாக்கம் செய்யப்பட்டது.
ஸ்டாலினும் கேட்டவுடனே, இதை தூக்கி எடுத்துக் கொடுத்துவிடாமல் கொஞ்ச நாள் போகட்டும் என்றுதான் சொல்லிப் பார்த்தார். ஆனால் கட்சியில் உதயநிதிக்கான லாபி அதிகரித்துக் கொண்டே போக ஒரு கட்டத்தில் குடும்பத்தின், கட்சியின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் பொருட்டு இதற்கான சம்மதத்தை தெரிவித்தார். காரணம் ஸ்டாலினைச் சுற்றியிருக்கும் சில சீனியர்கள் உதயநிதியின் திடீர் ப்ரமோஷன் பற்றி தங்கள் வட்டாரத்தில் அடித்து வரும் கமெண்ட்டுகளும் ஸ்டாலின் காதுகளுக்குப் போயிருக்கின்றன. அவர்களும் இதைக் குறையாகச் சொல்லவில்லை.

‘கட்சி தாண்டி பப்ளிக்கிடம் இப்போது ஸ்டாலினுக்கு நல்ல இமேஜ் வந்திருக்கிறது. தேர்தல் வெற்றி பெற்று ஓரிரு மாதமே ஆன நிலையில் திமுகவில் மீண்டும் ஒரு வாரிசு என்பதே பொதுமக்களிடம் ஒரு சுளிப்பை ஏற்படுத்தும். அதைவிட கலைஞர் இறந்து ஒரு வருடம் முடியவில்லை. வரும் ஆகஸ்டு மாதம்தான் கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் வருகிறது. அதன் பிறகு கட்சியில் கொண்டாட்டமான இதுபோன்ற நிகழ்ச்சிகளை வைத்துக் கொள்ளலாமே’ என்று ஸ்டாலின் குடும்பத்தைத் தாண்டிய கலைஞர் குடும்பத்தினர் சிலர் திமுக சீனியர்களிடம் சென்டிமென்ட்டாக பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். இதுவும் ஸ்டாலினுக்கு சென்றிருக்கிறது.
எனவேதான் கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் வரை பொறுத்திருக்கலாம் என்று ஸ்டாலின் நினைத்திருக்கிறார். ஆனால் அதற்குள் ஸ்டாலின் குடும்பத்தினரோ, உதயாவுக்கு இந்த வருடம் நல்லா இருக்குன்னு சொல்றாங்க. அதனால இப்பவே முடிச்சுடணும்’ என சொல்லி நல்ல நாள் நல்ல நேரமெல்லாம் குறித்துவந்து ஸ்டாலினிடம் கொடுத்திருக்கிறார்கள். இந்த சென்டிமென்ட் போராட்டத்தையும் ஸ்டாலினால் தட்டிக் கழிக்க முடியவில்லை.
திமுக இளைஞரணித் தலைமையகமான அன்பகம் எப்படிக் கட்டப்பட்டது என்பதை அண்மையில் கோவைத் தென்றல் ராமநாதன் படத்திறப்பு நிகழ்ச்சியில் உருக்கமாக பகிந்துகொண்டார் ஸ்டாலின்.
‘திமுக இளைஞரணிக்கு ஓர் அலுவலகம் வேண்டுமென்று ஆசைப்பட்டு தலைவரிடம் போய் நான் கேட்டேன். அப்போது கழக அலுவலகமாக இருந்த அன்பகம் பயன்படுத்தப்படாமல் இருந்ததால் அன்பகத்தை இளைஞரணிக்குத் தருமாறு கேட்டேன். அப்போது கலைஞர், பேராசிரியர், ராமநாதன் மூவரும் இருந்தார்கள். நான் கேட்டதற்கு தலைவர் கலைஞர், ‘அன்பகத்தை இளைஞரணிக்குக் கொடுத்துவிடலாம். ஆனால், தொழிற்சங்கம், மகளிரணி, வழக்கறிஞரணினு பல அணிகள் அதை கேட்கிறார்கள். நான் உனக்குக் கொடுத்துவிட்டால் மகன் என்ற பாசத்தில் கொடுத்துவிட்டார்னு சொல்லிடுவாங்க. அதனால ஒரு நிபந்தனை. பத்து லட்சம் ரூபாய் தேர்தல் நிதியை எந்த அணி வசூலித்துக் கொடுக்குதோ அந்த அணிக்கு அன்பகம் தரப்படும்னு சொல்லிட்டாரு.
அப்போது பக்கத்தில் இருந்த ராமநாதன், ‘கவலைப்படாத, சொடக்கு போடுறதுக்குள்ள பத்து லட்சம் வசூலிச்சிடலாம்’ என்று எனக்கு நம்பிக்கை அளித்தார். அப்போது ராமநாதன் கோவை மாநகர் செயலாளர். நிதி திரட்டுவதற்காக மாவட்ட சுற்றுப் பயணம் தொடங்கினேன். முதலில் தொடங்கியது கோவையில்தான். நான்கு நாட்கள் கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் என்னை ஒவ்வொரு உறுப்பினர் வீட்டுக்காக அழைத்துச் சென்று நிதி வசூலித்தார். 25 ஆயிரம் தருகிறேன் என்று சொன்னார். ஆனால் நான்கு நாட்களில் 50 ஆயிரம் வசூலித்துக் கொடுத்தார் ராமநாதன். அதன் பின் கலைஞர் நிர்ணயித்த பத்து லட்சம் தாண்டி 11 லட்சம் வசூலித்துக் கொடுத்து அன்பகத்தை இளைஞரணிக்குப் பெற்றோம்’ என்று அன்பகத்தை திமுக இளைஞரணிக்கு பெற்ற போராட்ட வரலாற்றை அந்த நிகழ்வில் குறிப்பிட்டார் ஸ்டாலின்.
இந்த அன்பகத்தில்தான் உதயநிதி ஸ்டாலின் இனி அமரப் போகிறார். இளைஞரணிச் செயலாளராக 30 ஆண்டுகளுக்கும் மேல் இருந்த ஸ்டாலின் தனது பதவியை 2017 ஜனவரி 6 ஆம் தேதி வெள்ளக்கோவில் சாமிநாதனிடம் ஒப்படைத்தார். மாநில இளைஞரணிச் செயலாளர் பதவிதான் சாமிநாதனுக்கு கொடுக்கப்பட்டதே தவிர, அன்பகத்திலுள்ள மாநிலச் செயலாளரின் அறையோ, இருக்கையோ சாமிநாதனுக்கு தரப்படவில்லை. எப்போதாவது மிகுந்த சந்தோஷமாகவோ, மிகுந்த துக்கமாகவோ இருந்தால் ஸ்டாலின் அன்பகத்துக்குச் சென்று தனது பழைய இருக்கையில் அமர்ந்துகொள்வார். அங்கே பழைய நினைவுகளில் மூழ்கி எழுவதில் ஸ்டாலினுக்கு ஒரு அலாதியான நிம்மதி. அப்படிப்பட்ட அந்த இருக்கையில் ஸ்டாலினுக்குப் பின் நியமிக்கப்பட்ட வெள்ளக்கோவில் சாமிநாதன் அமரவே இல்லை. காரணம் திடீரென ஸ்டாலின் வந்துவிட்டால் நன்றாக இருக்காது என்பதால் சாமிநாதனே அந்த இருக்கையைப் பயன்படுத்தியதில்லை.
இப்போது உதயநிதிக்கு மாநில இளைஞரணிச் செயலாளர் என்ற சிக்னல் நேற்று உறுதியானவுடன் இளைஞரணியின் மாநில நிர்வாகிகள் அன்பகத்துக்கு சென்று ஸ்டாலின் அறையை புதுப்பித்து, உதயநிதிக்காக மாற்றியமைத்தனர். அந்த இருக்கையில் இனி உதயநிதி அமர்வார் என்கிறார்கள். நாளை இளைஞரணி மாநில நிர்வாகிகள் ஆலோசனை, நாளை மறுநாள் இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டம் என்று உதயநிதி கட்சியின் முழு நேரப் பணியில் இறங்கிவிட்டார்” என்று முடிந்தது வாட்ஸ் அப் மெசேஜ்.
இதை ஷேர் செய்துகொண்ட ஃபேஸ்புக் தனது தகவலைப் பதிவு செய்தது.
“ராஜ்யசபா தேர்தலில் தொமுக சண்முகம், வழக்கறிஞர் வில்சன் என திமுக தனது வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. திமுக கூட்டணியில் மதிமுகவும் வைகோவை வேட்பாளராக அறிவித்துவிட்டது. ஆனால் அதிமுகவில் இன்னும் ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. சில நாட்களுக்கு முன் அமைச்சர் ஜெயக்குமார், ‘பாமகவுடன் போட்ட ஒப்பந்தத்தை நாங்கள் மீறமாட்டோம்’ என்று செய்தியாளர்களிடம் சொல்ல, இதை ஜெயக்குமாரே சொன்னாரா அல்லது எடப்பாடி சொல்லச் சொல்லித்தான் சொன்னாரா என்று கே.பி. முனுசாமி போன்றோர் டென்ஷனாகிவிட்டார்கள். இதுகுறித்து எடப்பாடியிடமே கே.பி.முனுசாமி பேச, ‘கட்சி நிதி கொடுக்குறவங்களுக்கு எம்பி சீட் கொடுக்கலாம்னு இருக்கோம்’ என்று சொன்னாராம் முதல்வர். இதைக் கேட்டு மேலும் டென்ஷனான கே.பி.முனுசாமி, எம்.பி. பதவிகளை விற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று தனது ஆதரவு வட்டத்தில் கோபமாகச் சொல்லிவருகிறார்” என்ற தகவலை பதிவு செய்துவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக