புதன், 24 ஜூலை, 2019

முன்னாள் காங்கிரஸ் எம்பி அன்பரசுவுக்கு 2 ஆண்டுகள் சிறை, உறுதி செய்த உயர் நீதிமன்றம்

காங்கிரஸ் பிரமுகர் அன்பரசுக்கு சிறை தண்டனை!மின்னம்பலம் : காசோலை மோசடி வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. அன்பரசுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜூலை 24) உறுதி செய்துள்ளது.
காங்கிரஸ் முன்னாள் எம்பி அன்பரசு, ராஜீவ்காந்தி கல்வி அறக்கட்டளை செலவுக்காக, 2002ஆம் ஆண்டு பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ராவிடம் ரூ.35 லட்சம் கடன் பெற்றிருந்தார். இதனை காசோலையாகத் திரும்ப கொடுத்துள்ளார். ஆனால் இவர் கொடுத்த காசோலை பணம் இன்றி திரும்பி வந்ததால், அன்பரசு, அவரின் மனைவி கமலா அன்பரசு அறக்கட்டளை நிர்வாகி மணி உள்ளிட்டோருக்கு எதிராக முகுந்த் சந்த் போத்ரா சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் 2008ல் மோசடி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனை விசாரித்த ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் அன்பரசு, மணி, கமலா ஆகியோருக்கு இரு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த தண்டனையை 2017ல் சென்னை நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உறுதி செய்தது. இதற்கிடையே அன்பரசு மனைவி கமலா காலமானார்.
தங்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து மணி, அன்பரசு இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு இன்று (ஜுலை 24) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அன்பரசுவின் மனைவி காலமாகிவிட்டதால் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை கைவிடப்படுகிறது; குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அன்பரசு, மணி ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்படுகிறது என கூறி இருவரது மனுவையும் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த தண்டனையை உடனே அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக