வெள்ளி, 12 ஜூலை, 2019

உயிர் அச்சுறுத்தலில் ஷர்மிளா சையத் .... ஏப்ரல் 21 ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்பு...

sharmila.seyyid : உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக சொல்வது ”ஃபேஷன்” என்று சிலர் நினைப்பதிலோ, சொல்வதிலோ உண்மை இல்லை. அப்படிச்
சொல்கிறவர்களுக்கு அதன் விளைவுகள் சுத்தமாகத் தெரியவில்லை என்றுதான் விளங்கிக் கொள்ளவேண்டும். ஒருவன்/ள் தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக சொல்வதை விளங்கிக் கொள்ளவும் புரிந்து கொள்ளவும் குறைந்தபட்ச நேர்மை, உண்மை, வெளிப்படைத்தன்மை, சமூகப் பார்வை, புரிதல் தேவையாயிருக்கிறது. 
பொறாமை, வெறுப்பு, அகம்பாவம், ஆணவம் போன்ற மனிதத் தன்மையற்ற குணங்கள் தலைக்குள் ஏறியிருப்பவர்கள் ஆபத்தான சூழல்களைப் புரிந்து கொள்வதோ, அத்தகைய சூழலில் இருப்பவர்களுக்குத் தோழமை ஆதரவு அளிப்பதோ முடியாது.
ஏப்ரல் 21 ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்குப் பிறகு உயிராபத்து இருப்பதாக சொல்லப்பட்டவர்கள் இன்னும் அதே சூழலில்தான் இருக்கவேண்டியுள்ளது. இந்த உயிராபத்து வெறும் கட்டுக் கதைகள் அல்ல.
யாரோ முகம் தெரியாத ஃபேக் ஐடிக்கள் சமூக வலைத்தளங்களில் விடுத்த எச்சரிக்கையும் அல்ல. (இந்த எச்சரிக்கைகள் பொருட்படுத்தக்கூடாதவை என்பதுகூடத் தவறான அபிப்பிராயம். இவை கட்டாயம் கவனிக்கப்படவேண்டியவை.)
இந்த உயிராபத்து எச்சரிக்கைகள் பொலிஸ் திணைக்களம், புலனாய்வுப் பிரிவு, பயங்கரவாத விசாரணைப் பிரிவு என்பவற்றினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டவை. ஏப்ரல் 21 ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்பு கைதான நபர்களை விசாரித்தபோது அவர்கள் அறிவித்திருக்கும் தகவல்களிலிருந்து உறுதி செய்யப்பட்டவை.

யாரையெல்லாம் அவர்கள் கண்காணித்தார்கள், யாரெல்லாம் அவர்களைத் தொந்தரவு செய்கிறவர்களாக அவர்கள் நினைத்தார்கள், யாரையெல்லாம் கொலை செய்யவேண்டும் என்று பட்டியலிட்டார்கள், யாரை கொலை செய்ய முயன்று தோற்றார்கள் என்பதெல்லாம் கைதானவர்களின் வாக்குமூலங்களிலிருந்து அம்பலாமானவைகள்.
குறித்த நபர்களுக்கு இந்தத் தகவல்களை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதன் மூலமாக அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எண்ணி பாதுகாப்புத் துறை ஒவ்வொருவரையும் தனியாக அணுகி விளக்கமளித்திருக்கிறது. பாதுகாப்பு ஆலோசனைகளையும் வழங்கியிருக்கிறது.
இந்த நாட்டின் அரசியல் சூழ்நிலைகளைக் கண்காணிக்கின்ற ஒருவருக்குப் புரியும், இது எத்தகைய ஆபத்தான சூழல் என்பது. ஒருவருக்கு உயிராபத்து என்ற தகவல் அம்பலமாகுவதேகூட அச்சுறுத்தல்தான். எந்தவொரு தீய சக்தியும் புகுந்து விளையாடி அரசியல் காய்நகர்த்துவதற்கான வாசல்களை திறந்துவைப்பதுதான் இது.
இப்படியான சூழலில் இருக்கும் ஒருவரின் மனநிலையைப் புரிந்து கொள்ளவும், அவர்களது தனிப்பட்ட குடும்ப சூழல்களை புரிந்து கொள்ள முற்படுவதும், அவர்களுக்கு தார்மீக ஆதரவும், தோழமையும் தருவதற்கும் எல்லாருக்கும் முடியாது. அதற்கென்று ஒரு மனம் வேண்டும். அந்த மனம் இன, மத, பால் பேதங்களிலிருந்து விடுதலை பெற்றதாக இருக்கவேண்டும். மனிதமாபிமான சிந்தனைகள் மேலோங்கியிருக்கவேண்டும்.
இங்கு அப்படி எத்தனை பேர் இருக்கிறோம்?
யாராவது இப்படியொரு சூழலில் இருக்கிறார்கள் என்று தெரிந்தால்,
”இதெல்லாம் வெளிநாட்டில் குடியுரிமை பெற” என்று பொருட்படுத்தாதிருப்பதற்கும், ”இதெல்லாம் ஃபேஷன்” என்று கோமாளித்தனம் செய்வதற்கும் மனம் கொண்டவர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள் என்பது இந்த நூற்றாண்டின் அவமானகரமான நிலை.
இப்படி நினைப்பவர்கள் வெளிநாட்டுக் குடியுரிமையை ”சுவர்க்கம்” என்று கனவு காணும் அப்பாவிகள்.
பல ஆபத்துக்கள் சூழ்ந்தும், எச்சரிக்கைகள் வந்தும், வாசல் தேடிவந்த வெளிநாட்டுப் புகலிட வாய்ப்புக்களைக்கூட மறுத்துவிட்டு இலட்சியத்திற்காக வாழ்கிறவர்களும் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளவும் ஒரு மனம் வேண்டும்.
இங்கு அப்படி எத்தனை பேர் இருக்கிறோம்?
நாமெல்லாம் சிறந்த விமர்சகர்கள். நீதிபதிகள். அதோடு சிறந்த அஞ்சலிக் கட்டுரை ஆசிரியர்கள்.
அஞ்சலிகள் மட்டும் எப்போதும் தயாராகவே இருக்கின்றன. அஞ்சலி எழுதிக்கூட தன்னை நல்லவன்/ள் என்று காண்பித்துக் கொள்கின்ற போட்டியில் வென்றுவிடத்தான் இங்கு பலர் போராடுகிறார்கள். ”நிறைய முரண்பாடுகள் இருந்தாலும் அவரை எனக்குப் பிடிக்கும்” என்று எனக்கு எழுதப்பட்ட அஞ்சலிக் குறிப்புக்களை 2014 இலேயே படித்துவிட்டவள் என்பதால் எனக்கொரு ஆச்சரியமுமில்லை.
ஆனால் தோழர்களே, நீங்கள் அஞ்சலிக் குறிப்புக்களை எழுதுவதற்கு முன்பு ஆபத்தில் இருப்பவர்களிடம் உங்களின் மெய்யான அக்கறையை ஒருமுறையாவது வெளிப்படுத்துங்கள். அன்பைச் சொல்லுங்கள். நீங்கள் நேசித்ததைக் கூறுங்கள். உங்கள் வக்கிரங்களைப் படித்துவிட்டுக் கனத்த மனத்துடன் அவர்கள் சாகவேண்டாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக