வியாழன், 18 ஏப்ரல், 2019

இலங்கையிலும் ஒரு ஆதிச்சநல்லூர்? (பொம்பரிப்புவ) பொன்பரப்பி - புத்தளம் அகழாய்வுகள்

இலங்கை - பொன்பரப்பி
ஆதிச்சநல்லூர்
ThuvaraGan VelumMylum : ஆதிச்ச நல்லூர் முதுமக்கள் தாழிகளுக்கு காலம்
கி.மு.800 - 900கள் என்று காபன் பரிசோதனை முடிவை அறிவித்திருக்கிறார்கள். ஆனால் அதே காலத்தையது என்று கருதக்கூடிய எங்கள் பொம்பரிப்பு ஈமத்தாழிகளின் காலத்தை முறையான ஆய்வுகளின் மூலம் நாம் அறியப்போவது எப்போது?
படம் 01- பொம்பரிப்பு ஈமத்தாழி
படம் 02 - ஆதிச்சநல்லூரின் ஈமத்தாழி
பொம்பரிப்புவ - வடமேற்குக்கரையின் மயான பூமி

புத்தளத்தின் வில்பத்து அடர்ந்த காடுகளிற்குள்ளே உறங்கிக்கொண்டிருக்கிறது இலங்கையின் முதல் நாகரீகம்.
மண்ணால் மிக நேர்த்தியாக வனையப்பட்ட ஈமத்தாழிகளில் அடக்கம் செய்யப்பட்ட அந்நாகரீத்துக்குரிய மக்களின் சடலச்சிதைவுகள் தான் இலங்கையின் முதல் நாகரீகமடைந்த மக்கள் கூட்டம் விஜயனும் தோழர்களும் என்கிற கருத்தை தகர்த்து இற்றைக்கு மூவாயிரம் வருட பழைமையான இலங்கைக்கேயுரிய ஒரு தொல்நாகரீகத்துக்கு சாட்சிகள் ஆகியிருந்தன.
வடமேற்குக்கரையோரத்திற்கு மிக அண்மையாக புத்தளத்திற்கும் மன்னாருக்குமிடையில் பரந்த சமவெளி பொம்பரிப்புவ. இப்போது வில்பத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருக்கிற இக்காடுகளில் நடந்த புதைபொருள் ஆய்வுகளையும் அதில் கிடைத்த தொல்பொருட்களையும் பற்றி முதலில் விபரமாக தருவது அந்த நாகரீகத்தின் முக்கியத்துவத்தையும் அக்கால மக்களின் வாழ்க்கை முறையில் அடைந்திருந்த உன்னத நிலையையும் உணரச்செய்யும் என்பதால் முதலில் அந்த விபரங்களை தருகிறேன்.

மூன்று கட்டங்களாக பொம்பரிப்புவ காடுகளுக்குள் அகழ்வாய்வுகளை ஆய்வாளர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். பிரித்தானியரான Hohort என்கிற ஆய்வாளர் 1924- 1928களில் முதன்முறையாக பொம்பரிப்பில் அகழ்வாய்வுகளை செய்தார். 0.64cm விட்டத்தில் சமச்சீராக அமைந்த பல மண்பானைகளாலான ஈமத்தாழிகளை நிலமட்டத்திலேயே எடுத்ததாக குறிப்பிட்டார்.
அவரின் ஆய்வறிக்கையில் இப்பானைகளின் கீழ்ப்பாதியை சுழலிச்சக்கரத்தின் உதவியோடு விரல்களைப்பாவித்து செய்திருப்பதாகவும் மேற்பாதியை கைகளாலும் செய்திருப்பதாக எண்ணுவதாகவும் , நெருப்பை சீராக படாத படியால் கறுப்பு சிவப்பு வேறுபாடுகள் தெரிவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
1956இல் அடுத்தகட்ட அகழ்வாய்வுகளை வீதியின் இரண்டு பக்கங்களும் மேற்கொண்டு 12 புதைக்கப்பட்ட ஈமத்தாழிகளை அகழ்ந்தார்கள். பரணவிதானே தலைமையிலான இவ்வாய்வுக்குழு சுடப்பட்ட என்புச்சிதைவுகளோடான சாம்பல்களை இனங்கண்டார்கள். இதற்கடுத்த வருடத்தில் 14 ஈமத்தாழிகள் அடங்கிய பிரதேசங்கள் அடுத்தடுத்ததாக கண்டுபிடிக்கப்பட்டன.
எரிக்கப்பட்ட உடற்சாம்பலும் என்புத்துகள்களுமாக மண்ணால் செய்யப்பட்ட பானைகள் , தட்டுகள் , குடுவைகளுக்குள் புதைத்திருக்கப்பட்ட நிலையில் இருந்ததாக ஆய்வு முடிவில் அறிக்கையிடப்பட்டன. கலசத்தொகுதிகள் பதினான்கும் பகுப்பாயப்பட்டு என்புகளின் தன்மைகள் ஆராயப்பட்ட அறிக்கையின் படி அது ஆண் பெண் குழந்தைகள் என பரதரப்பட்ட வயதுடையவர்களின் உடற்கூறுகள் இருப்பது உறுதிசெய்ய முடியும்.
கலசத்தொகுதி/ ஈமத்தாழி 01 - ஏழு மட்பானைகளை கொண்டிருந்தது. முதலாம் அமைப்பில் ஒரு தட்டில் மனித என்புத்துண்டங்கள் காணப்பட்டன.
கலசத்தொகுதி/ஈமத்தாழி 02 - ஐந்தாம் இலக்க பானைகளில் தலையோடு ஒன்று காணப்பட்டது. இரண்டு வெண்கல கை வளையல்களும் அகழப்பட்டன.
கலசத்தொகுதி 03 - அகழப்பட்ட 3 பானைகளில் இரண்டாம் இலக்க பானையில் mandible என்போடு சில பற்களும் அவதானிக்கப்பட்டது. (ஆழம் நிலமட்டத்தில் இருந்து 0.86m)
கலசத்தொகுதி 04 - பத்து பானைகள் அகழப்பட்டன. உலோக ஆபரணங்கள் கண்டெடுக்கப்பட்டன.
கலசத்தொகுதி 05 - பானைகள் அகழப்பட்டு மூன்று தொகுதி என்புகள் வைக்கப்பட்டிருந்த்து அறியப்பட்டது. இரும்பு கத்தியை ஒத்த கூரிய தகடு ஒன்று மண்டையோட்டை துளைத்த நிலையில் அவதானிக்கப்பட்டது.

கலசத்தொகுதி 06 - தலையோடு மற்றும் என்புகள் வைக்கப்பட்ட மட்பாண்ட துண்டுகள் அகழப்பட்டன.
கலசத்தொகுதி 07 - முழுவதுமாக சிதைந்து விட்ட நிலையில் காணப்பட்டது
கலசத்தொகுதி/ஈமத்தாழி 08 - பதினொரு பாத்திரங்களில் மைக்கா மற்றும் வெண்கலத்துண்டுகளோடு அவதானிக்கப்பட்டன. அண்மையாக பற்களோடு ஒரு சிறிய பானை அகழப்பட்டது.
கலசத்தொகுதி/ஈமத்தாழி 09 - 0.66m இல் அகழப்பட்டது. முழுமையாக சிதைந்த நிலையில் உள்ளது.
கலசத்தொகுதி 10 - பதினொரு பானைகள் அகழப்பட்டன. 17.5 cm நீளமான வெண்கலக்கம்பி அகழப்பட்டது. என்புகள் பற்கள் வைத்த தட்டு ஒன்று அகழப்பட்டது.
கலசத்தொகுதி 11 - என்புச்சிதைவுகளோடு 15.24cm நீளமான வெண்கலக்கம்பியும் ஆறு பானைகளோடு அகழப்பட்டது.
கலசத்தொகுதி 12 - தனி என்பு ஒன்று அகழப்பட்டது.
கலசத்தொகுதி 13 - 9 பானைகள்
கலசத்தொகுதி/ஈமத்தாழி 14 - 4 பானைகள் மற்றும் சிதைந்த என்புகள்
இத்தாழிகளில் சிலவற்றில் அலங்கார வேலைப்பாடுகளும் இருக்கின்றன. இவற்றில் சில தட்டையான மண்கிண்ணத்துடன் இறுக்கமாக பிணைக்கப்பட்ட தலையோடும் கை கால்களின் என்புகளும் ஒழுங்கமைக்கப்பட்ட அமைக்கப்போடும் உலோகப்பொருட்களோடு அகழப்பட்டன.
மொத்தமாக அகழப்பட்ட ஐந்து உலோகப்பொருட்களில் நான்கு வெண்கலத்தாலும் , ஒன்று இரும்பாலும் அமைக்கப்பட்டிருந்தன. அநேகமாக ஆபரணங்களாக பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்புக்கள் உள்ளன என்று ஆய்வறிக்கை சொல்கின்றது. இரும்புத்துண்டு கத்தியொன்றின் நுனிப்பகுதியாக அல்லது அம்பு நுனியாக இருக்கலாம்.
இதற்கு பின்னதாக Pennsylvania பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்குழுவினர் அகழ்வுகளை மேற்கொண்டிருக்கிறார்கள். 100m * 100m பரப்பளவில் மேற்கொண்ட ஆய்வின் படி நான்கு அகழிகளை அண்டியதாக ( 35/40 , 75/56 , 27/80 , 64/118) சமாதிகள் இருப்பதாக கண்டறிந்தார்கள். அகழிகளுக்கான குளம் ஒன்று பற்றிய ஊகங்களும் வெளியிடப்பட்டன. ஆய்வாளரின் அறிக்கைப்படி ஒரே கலாச்சரமுள்ள மக்கள் கூட்டம் ஒன்று மட்டுமே இவைகளை உருவாக்கினர் என்று கூறியிருக்கிறார்.
நிற்க
இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட கால மக்களின் பண்பாடு என்ற வகுதியின் கீழ் இலங்கை தேசிய நூதன சாலையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிற பொருட்களில் பிரமிக்கத்தக்க மூன்று பெரிய மட்பானைகள் /தாழிகளை , பல மட்பாண்ட சிதைவுகளை காணலாம். ஆராய்ந்து பார்த்தால் அவ்வளவுமே பொம்பரிப்பு அகழ்வில் பெறப்பட்டவைகள்.
ஆனால் இதே வகுதிக்குள் வைக்கப்பட்டிருக்கிற பெல்லன்பதிபெலஸ்ஸ இப்பன்கட்டுவ என்ற இடங்களில் பெறப்பட்டவை என்று இருப்பவை வெறும் கல் ஆயுதங்கள் , என்பாலான ஆயுதங்கள் என்று நாடோடிக்கலாச்சாரமுள்ள ஒரு மக்கள் கூட்டத்தாருடையவை. பலாங்கொடையில் அகழப்பட்ட பொருட்களும் அவ்வாறானவையே.
ஆக பொம்பரிப்பு அகழ்வு என்பது மட்டுமே ஒரு நீடித்த காலத்துக்குரிய மக்கள் வாழிடத்துக்கான நாகரீகத்தை பிரதிநிதித்துவம் செய்கிற ஆய்வு என்ற முடிவுக்கு வரமுடியும்.. எரித்த என்புகளின் மிகுதியும் சாம்பல்களும் இறந்தவர்களை எரித்த பின்பு தாழிகளில் இட்டு புதைக்கிற சடங்குகளை பின்பற்றிய மக்களின் இடுகாடு இங்கே இருந்ததை காட்டுகின்றது. ஆய்வாளர்கள் 1000வரையிலான தாழிகள் இருக்கக்கூடும் என்று ஊகிக்கிறதின் அடிப்படையில் பெருமெடுப்பிலான மக்கள் இதையண்டி வாழ்ந்திருந்தனர் எனலாம். தாழிகளில் காணப்பட்ட இரும்பு வெண்கல ஆபரணங்கள் அந்த மக்களின் உலோகப்பயன்பாட்டிற்கான அறிவை காட்டுகின்றது.
கீழே உள்ள புகைப்படங்களை நன்றாகப்பார்த்து வைத்துக்கொள்ளுங்கள்.
கொழும்பு நூதனசாலையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்கிற வகுதிக்குள்ளே முதலாவது புகைப்படத்தை எடுத்திருந்தேன்.
இரண்டாவது படம் இணையத்தில் இருந்து எடுத்திருந்தேன். ஆதிச்ச நல்லூரிற்குரியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக