வியாழன், 18 ஏப்ரல், 2019

வாக்கு பதிவு தொடங்கியது . தமிழ்நாடு புதுவை .. 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும்

தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது
தினத்தந்தி :சென்னை, நாடாளுமன்றத்துக்கு 2-வது கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. பணப்பட்டுவாடா புகாரால் வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இந்த நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டசபை தொகுதிகளில் 18 சட்டசபை தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.</ இந்த தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் ஓர் அணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன. இதுதவிர அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன. தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் 38 நாடாளுமன்ற தொகுதிகளில் மொத்தம் 822 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதேபோல், 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 269 பேர் போட்டியிடுகின்றனர். புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் 18 பேரும், அங்குள்ள ஒரு சட்டசபை தொகுதியில் 8 பேரும் மல்லுக்கு நிற்கின்றனர்.

கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த அனல் பறக்கும் பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இதைத்தொடர்ந்து வாக்காளர்கள் அல்லாத வெளியாட்கள் தொகுதியை விட்டு வெளியேற்றப்பட்டனர்.இந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. வாக்காளர் வரவர உடனடியாக ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மதிய உணவு இடைவேளை இன்றி மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு இடைவிடாமல் நடைபெறும்.


இதற்காக தமிழகம் முழுவதும் 67,720 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. வாக்குப்பதிவுக்கு தேவையான மின்னணு எந்திரங்கள் உள்ளிட்ட சாதனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. சித்திரை திருவிழாவை முன்னிட்டு, மதுரை நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதாவது அந்த தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.


ஓட்டுப்போடுவது எப்படி?

முதலில், வாக்காளர் தான் கொண்டு வந்த புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். அதைவைத்துக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயரை ஆய்வு செய்யும் தேர்தல் அலுவலர், பெயரை கண்டுபிடித்ததும் அதை ‘டிக்’ செய்வதுடன், அங்கு அரசியல் கட்சி வாரியாக இருக்கும் பூத் ஏஜெண்டுகளிடம் வாக்காளரின் பெயரை சத்தமாக சொல்வார். அவர்களும் தங்கள் கைகளில் உள்ள வாக்காளர் பட்டியலில் குறித்து வைத்துக் கொள்வார்கள்.

அதனைத் தொடர்ந்து, வாக்காளரின் இடதுகை ஆள்காட்டி விரலில் அழியாத கருப்பு மை வைக்கப்படும். அதன்பின்னர், அவர் வாக்கு எந்திரத்தில் ஓட்டுப்போட அனுமதிக்கப்படுவார். அவர் வாக்களித்து விட்டு வெளியே சென்றபிறகு, அடுத்தவர் உள்ளே அழைக்கப்படுவார்.

செல்போனுக்கு தடை

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் ‘விவிபாட்’ கருவியும் இணைக்கப்பட்டு இருக்கும். தான் அளித்த வாக்கு உரிய வேட்பாளருக்கு சரியாக பதிவாகி இருக்கிறதா? என்பதை வாக்காளர் அந்த கருவியில் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம். ஓட்டுப்போட செல்லும்போது வாக்காளர்கள் கையில் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதனால், வாக்காளர்கள் வீட்டிலேயே செல்போனை வைத்துவிட்டு செல்வது நல்லது.மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவடைந்தாலும், அதற்கு முன்பாக வாக்குப்பதிவு மையத்துக்குள் வாக்காளர்கள் வந்துவிட்டால், அவர்கள் ஓட்டுப் போட அனுமதிக்கப்படுவார்கள். கடைசி நேரத்தில் கூட்டம் அதிகமாக இருந்தால், டோக்கன் கொடுத்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

மே 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதல் 2 மணி நேர இடைவெளியில் பதிவான வாக்கு சதவீத விவரங்கள் வெளியிடப்படும். ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும், வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக பெட்டியில் வைத்து அடைக்கப்பட்டு ‘சீல்’ செய்யப்படும். பின்னர், போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும்.அடுத்த மாதம் (மே) 19-ந் தேதி, தமிழகத்தில் மீதமுள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் அன்றுடன் முடிவடைகிறது.மே மாதம் 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து இருக்கிறது.மாநில போலீசாருடன், துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.63,951 போலீசார், 27,400 துணை ராணுவ படை வீரர்கள், 13,882 ஊர்க்காவல் படையினர், 14 ஆயிரம் தேசிய மாணவர் படையினர், 20 ஆயிரம் ஓய்வு பெற்ற போலீசார் மற்றும் ராணுவத்தினர் என மொத்தம் 1 லட்சத்து 39 ஆயிரத்து 233 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். பதற்றமான வாக்குச்சாவடி என்று கண்டறியப்பட்ட 8,293 ஓட்டுச்சாவடிகளில் துணை ராணுவ படையினர் நிறுத்தப்படுகிறார்கள்.இவர்கள் தவிர மாநிலம் முழுவதும் 1,500 வாகனங்களில் அதிவிரைவு படையினர் ரோந்து சுற்றி வருவார்கள்.மேலும், கண்காணிப்பு கேமரா மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படுவதுடன் வீடியோ பதிவும் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக