வியாழன், 18 ஏப்ரல், 2019

பணமதிப்பிழப்பால் 50 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர்

மின்னம்பலம்:  2016ஆம் ஆண்டில் பணமதிப்பழிப்பு மேற்கொள்ளப்பட்ட சமயத்திலிருந்து 2018ஆம் ஆண்டு வரையில் நாடு முழுவதும் 50 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று கூறியுள்ளது.
கறுப்புப் பணத்தை ஒழிக்கும் விதமாகப் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களை தடை செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி அறிவித்தார். இதன்படி புழக்கத்திலிருந்து 80 விழுக்காட்டுக்கும் அதிகமான பணம் வங்கிகள் மூலம் திரும்பப் பெறப்பட்டு புதிய 2000 மற்றும் 500 ரூபாய் தாள்கள் விநியோகம் செய்யப்பட்டது. இந்நடவடிக்கை இந்தியாவின் ஒட்டுமொத்த சில்லறை வர்த்தகத்தையும் மாதக் கணக்கில் முடக்கியது. அத்தியாவசியச் செலவுகளுக்கு கூட கையில் ரொக்கப் பணம் இல்லாமல் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் தடுமாறினர்.
ஆனால் ”கருப்புப் பணத்தை ஒழித்து நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல மிகப்பெரிய சீர்திருத்தத்தை அரசு செய்துள்ளது. அதற்காக மக்களுக்கு ஏற்பட்ட துயரங்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்” என்று பிரதமர் மோடி கூறினார். பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு லட்சக்கணக்கானோர் வேலையிழந்ததாக பல்வேறு ஆய்வறிக்கைகளும், பொருளாதார அறிஞர்களும் கூறிவந்த நிலையில், தற்போது புதிதாக ஒரு ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.

ஸ்டேட் ஆஃப் வொர்க்கிங் இந்தியா 2019 என்ற வேலைவாய்ப்பு தொடர்பான அறிக்கையை பெங்களூரைச் சேர்ந்த அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. ’2016ஆம் ஆண்டு பணமதிப்பழிப்பு செய்யப்பட்ட காலத்திலிருந்து 2018ஆம் ஆண்டு வரையில் 50 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சமூகத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள். அமைப்புசாரா துறையில் பணியாற்றி வந்தவர்கள்’ என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கையை தயாரித்த குழுவில் தலைமைப் பொறுப்பை வகித்த அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அமித் பசோல் கூறுகையில், “நிகர வேலைவாய்ப்புகள் ஒரு துறையில் குறைந்தால், மற்றொரு துறையில் அதிகரிக்கலாம். பணமதிப்பழிப்புக்கு பிறகு கிட்டத்தட்ட 50 லட்சம் வேலைகள் இழக்கப்பட்டுள்ளன. இது இந்தியப் பொருளாதாரத்துக்கு உகந்தது அல்ல. உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை மட்டும் பார்த்துக்கொண்டு வேலையிழப்புகளைச் சரிசெய்யாமல் இருப்பது பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றதல்ல” என்று கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக