வெள்ளி, 19 ஏப்ரல், 2019

அமமுக பொதுச்செயலாளர் ஆனார் டிடிவி. தினகரன்: தலைவராகிறார் சசிகலா ! சு.சாமி டெல்லி பிரதிநிதியாகிறார்?

THE HINDU TAMIL : அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைவராக சசிகலா செயல்படுவார் என்று அமமுக அறிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்புக்குப் பிறகு அதிமுகவில் குழப்பங்கள் ஏற்பட்டன. சசிகலா தரப்பினரை ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும் சேர்ந்து கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இதன் பொதுச் செயலாளராக சசிகலாவும் துணைப் பொதுச் செயலாளராக டிடிவி தினகரனும் நியமிக்கப்பட்டனர்.
எனினும் அதிமுகவைக் கைப்பற்ற முடியாது என்பதால் தினகரன் அமமுகவைக் கட்சியாகப் பதிவு செய்யவில்லை. கடந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தைக் கேட்டு டிடிவி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவ்வழக்கில் பொதுச்சின்னத்தை அளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அமமுகவைப் பதிவு செய்யுமாறு டிடிவி தினகரனுக்கு அறிவுறுத்தியது.
இந்நிலையில் தேர்தல் முடிந்தபிறகு சென்னையில் அமமுக கட்சியினர் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அமமுகவைப் பதிவு செய்வது குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் டிடிவி தினகரன் அமமுகவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாகப் பேசிய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் தங்க தமிழ்ச் செல்வன், ''டிடிவி தினகரன் அமமுகவின் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சசிகலா வெளியே வந்தபிறகு கட்சிக்குத் தலைவராக இருப்பார். துணைத் தலைவர் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார்.
இவை அனைத்தும் முழுக்க முழுக்க சசிகலாவின் ஒப்புதலின்பேரிலேயே நடந்துள்ளது. இடைத் தேர்தல்களிலும் பரிசுப் பெட்டி சின்னத்தையே வழங்குமாறு கோரிக்கை விடுப்போம். விரைவில் அத்தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்'' என்றார் தங்க தமிழ்ச் செல்வன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக