வெள்ளி, 19 ஏப்ரல், 2019

சவுதி சகோதரிகள் ஜார்ஜிவில் தஞ்சம் .. வீடியோ


Neelakandan S- tamiloneindia : திபிலீசி: சவுதி அரேபியாவின் சட்டங்களுக்கு அஞ்சி அந்நாட்டிலிருந்து வெளியேறிய 2 சகோதரிகளுக்கு ஜார்ஜியா நாடு அடைக்கலம் வழங்க முன்வந்துள்ளது.
சவுதி அரேபியாவிலிருந்து வெளியேறிய வஃபா மற்றும் மஹா-அல்-சுபாய் என்ற 2 இளம்பெண்கள் ஜார்ஜியா நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர். அங்கிருந்தபடியே சகோதரிகள் இருவரும் தங்களை பற்றிய தகவல்களை ட்விட்டரில் பதிவிட்டு உதவி கோரியிருந்தனர்.
சவுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பெண்களுக்கு எதிரான சட்டத்திட்டங்களை தாங்கள் வெறுப்பதாகவும், நாங்கள் இருவருமே தந்தை மற்றும் சகோதரர்களால் தாக்கப்பட்டதால் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ பதிவில் கண்ணீருடன் கூறியிருந்தனர்.
அவர்கள் வெளியிட்டிருந்த வீடியோவில், நாங்கள் தற்போது ஆபத்தில் உள்ளோம். எங்களுக்கு பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தற்போது குரல் எழுப்புகிறோம். எங்களை எந்த நாடாவது ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும். எங்களது பாஸ்போர்ட்டைசவுதி அரசு முடக்கிவிட்டது. நாங்கள் தற்போது ஜார்ஜியாவில் இருக்கிறோம்.

எங்கள் இருவரையும் தேடி எங்களது பெற்றோர்கள் ஜார்ஜியாவிற்கே வந்து விட்டனர். பெற்றோர்கள் அழைக்கிறார்கள் என்பதற்காக நாங்கள் சவுதி திரும்பினால், அந்நாட்டு சட்டப்படி நாங்கள் நிச்சயம் கொல்லப்பட்டு விடுவோம் என கண்ணீருடன் கூறியிருந்தனர்.
 சவுதி சகோதரிகள் அடைக்கலம் கேட்டு கதறிய ட்விட்டர் வீடியோ, அதிகளவில் பரவி வைரல் வீடியோவாக மாறியது. எனவே சகோதரிகளுக்கு உதவ சர்வதேச மனிதஉரிமைகள் ஆணையம் உள்ளிட்ட பல அமைப்புகள் முன்வந்துள்ளன.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட இரு சகோதரிகளும் பத்திரமாக இருப்பதாகவும், அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாகவும் ஜார்ஜியா நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக