வியாழன், 21 மார்ச், 2019

தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டுகளில் இந்தித் திணிப்பு ......?

தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டுகளில் இந்தித் திணிப்பா?மின்னம்பலம் :மா.மாரிராஜன் : சமூக வலைதளங்களில் திடீரென்று ஒரு பெரும் பரபரப்பு. தஞ்சை பெரிய கோயிலில் தமிழ்க் கல்வெட்டு அகற்றம். இந்தி மொழி கல்வெட்டுகள் திணிப்பு.
இச்செய்தி உண்மைதானா?
இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை (Archaeological Survey of India – ASI) கட்டுப்பாட்டிலுள்ள கோயிலில் இம்மாதிரி செய்ய இயலாது என்று சொன்னால்... ASIதானே ரவிசங்கர் கூட்டத்துக்கு அனுமதி கொடுத்து கூடாரம் அமைத்தார்கள் என்னும் மறுமொழி வருகிறது..
இக்கல்வெட்டுகள் இருநூறு வருடங்களுக்கு முந்தைய மராட்டியர்களின் கல்வெட்டுகள் என்றால்... அப்போ 200 வருடங்களுக்கு முன்பே திணிப்பு ஆரம்பமாகிவிட்டதா என்று மறுமொழி வருகிறது.
வடமொழி கல்வெட்டு புகைப்படங்களைப் பார்த்த ஒரு சிலர், பலத்த அதிர்ச்சிக்குள்ளாகி இது தஞ்சை கோயில் கல்வெட்டுகள்தானா என்கிறார்கள். தஞ்சைக் கோயிலில் வேற்று மொழிக் கல்வெட்டுகள் இருப்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை.


இவர்களின் தமிழ் ஆர்வம், விழிப்புணர்வு, உணர்ச்சி வேகம், உண்மையிலேயே வணங்கி வரவேற்புக்குரிய ஒன்று. இக்காலத்துக்கு இந்த உஷார் நிலை அவசியத் தேவைதான். அதே சமயம் என்ன நடந்தது என்பதை விருப்புவெறுப்பின்றி ஆராய வேண்டியது அவசியம்.
எனவே, இக்கல்வெட்டுகள் பற்றிய முழுத் தகவல்களையும் சேகரிக்கத் தஞ்சை பெரிய கோயிலுக்குச் சென்றோம்.
கோயிலின் வரலாறு
பேரரசன் இராஜராஜ சோழனால் தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு கிபி 1010இல் குடமுழுக்கு செய்யப்பட்டது.
கோயில் பணியாளர் விவரம், கொடுக்கப்பட்ட நிவந்தங்கள், நிர்வாகம், பாதுகாப்பு முதலான பல விஷயங்கள் கோயில் முழுவதும் கல்வெட்டுச் செய்திகளாகப் பதிவு செய்யப்பட்டன. இச்செய்திகள் அழகு தமிழில் நேர்த்தியான எழுத்துகளைக் கொண்டு கல்லில் வெட்டப்பட்டது. இந்த ஒவ்வொரு செய்தியும் ஒரு வரலாற்று ஆவணம்.
பெரிய கோயிலில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. இவற்றின் பெரும்பகுதி தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி எண் 2இல் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

சமஸ்கிருதக் கல்வெட்டு
பெரிய கோயிலின் தொடக்க அதாவது முதல் கல்வெட்டு, கருவறையின் வடப்புற அதிஷ்டானத்தில் தொடங்குகிறது. சண்டிகேசர் கோயிலுக்கு நேர் எதிரே இக்கல்வெட்டு இருக்கும்.
முதல் வரியே சமஸ்கிருதத்தில், அனுஷ்டுப் என்னும் யாப்பில் தொடங்கும்.
ஏதத் விஸ்வ ந்ருபஸ்ரேணி
என்று வடமொழி ஸ்லோகத்தில் ஆரம்பித்து, திருமகள்போல என்று இராஜராஜரின் மெய்கீர்த்தீயோடு, “நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரமுடையார்க்கு” என்று சொல்லி, “நாம் கொடுத்தனவும்…” என்று ஆரம்பம் ஆகும்.
இதுதான் பெரிய கோயிலின் முதல் கல்வெட்டு.
எத்தனை கல்வெட்டுகள்?
கோயிலில் இராஜராஜரின் 64 கல்வெட்டுகள், இராஜேந்திரனின் 21 கல்வெட்டுகள், இரண்டாம் இராஜேந்திரரின் ஒரு கல்வெட்டு, முதலாம் குலோத்துங்கனின் ஒரு கல்வெட்டு, மூன்றாம் குலோத்துங்கனின் ஒரு கல்வெட்டு, மூன்றாம் இராஜராஜனின் ஒரு கல்வெட்டு, பாண்டியர் இரண்டு கல்வெட்டுகள், விஜயநகர, நாயக்கர் காலத்தைச் சேர்ந்த நான்கு கல்வெட்டுகள், மராட்டியர்கள் காலத்தின் நான்கு கல்வெட்டுகள் ஆகியவை கோயிலில் உள்ளன.
இந்த மராட்டியர்களின் மராட்டிய மொழிக் கல்வெட்டுகள்தான் தற்போது சர்ச்சைக்குள்ளாகின்றன.
இக்கல்வெட்டுகள் மராட்டிய மொழியில்தான் வெட்டப்பட்டுள்ளன. இந்தி மொழியில் அல்ல.
மராட்டியமும், இந்தியும், தேவநாகரி என்னும் வரிவடிவ அமைப்பில் எழுதப்படுவதால் பார்ப்பதற்கு இரண்டும் ஒரே வடிவமாகத் தோன்றும். ஆனால், இரண்டும் வெவ்வேறு.
இந்த மராட்டியர் கல்வெட்டுகள் பெரிய கோயிலில் எங்கு உள்ளன? எப்போதிலிருந்து உள்ளன? வரலாறு என்ன சொல்கிறது?
சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு பாண்டியர்கள், பிறகு விஜயநகர நாயக்கர்கள், பிறகு மராட்டியர்கள் தஞ்சையை ஆண்டார்கள்.
தஞ்சையின் கடைசி நாயக்க மன்னரான விஜயராகவ நாயக்கரைப் போரில் வென்று மராட்டியரான ஏகோஜி தஞ்சையைக் கைப்பற்றினார். இது நடந்தது கிபி 1675இல்.
பிறகு சாஹஜி (கிபி 1684), முதலாம் சரபோஜி (1712), துக்கோஜி (1728), ஏகோஜி (1736), சுஜான் பாய் (1738), பிறகு பிரதாப சிம்மன் (1739 – 1763) இரண்டாம் சரபோஜி (1798 - 1832) ஆகிய மன்னர்கள் ஆண்டார்கள்.
1798 - 1832 வரை ஆட்சி செய்த இரண்டாம் சரபோஜி காலத்தில்தான் மராட்டிய மொழிக் கல்வெட்டுகள் பெரிய கோயிலில் இடம் பெற்றன.
மராட்டியர்கள் மோடி வரி வடிவம் என்னும் எழுத்துமுறையையும் பயன்படுத்தினார்கள். தேவநாகரி மற்றும் மோடி வரி வடிவம் என்னும் இரண்டு முறைகளைக் கையாண்டார்கள்.
மோடி வடிவம் என்பது மராட்டிய எழுத்துகளைச் சுருக்கெழுத்தாக விரைவாக எழுதப் பயன்பட்ட வடிவம். எழுதுகோலை எடுக்காமல் விரைவாக எழுத முடியும். இவ்வகையில் எழுதப்பட்ட ஆவணங்கள் மோடி ஆவணங்கள் என்றழைக்கப்படும். இந்த மோடி ஆவணங்களை இன்றும் சரசுவதி மஹால் நூல் நிலையத்தில் நாம் காணலாம்.
பெரிய கோயிலில் காணப்படும் மராட்டிய மொழிக் கல்வெட்டுகள் தேவநாகரி முறையில் எழுதப்பட்டவை.

இக்கல்வெட்டு தரும் செய்திகள் என்ன?
பெரிய கோயிலில் உள்ள விநாயகர் ஆலயத்தில் வாயிற்படியில் உள்ள கல்வெட்டு, கிபி 1801இல் சரபோஜியால் விநாயகர் கோயில் கட்டப்பட்ட செய்தியைப் பதிவு செய்கிறது.
விநாயகர் கோயிலின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு கல்வெட்டில், குற்றம் ஒன்றை விசாரித்து, கொதிக்கும் நெய்யினுள் கைகளை விடுமாறு தண்டனை அளித்த செய்தி பதிவாகியிருக்கிறது.
கோயிலின் தென்மேற்குத் திருச்சுற்று மாளிகையில் மிக நீண்டதொரு கல்வெட்டு இருக்கிறது. பெரிய கோயிலிலேயே இதுதான் மிக நீண்ட கல்வெட்டாகும். இக்கல்வெட்டில் மராட்டிய வம்சாவளி முழுவதும் எழுதப்பட்டுள்ளது. இதை போன்ஸ்லே வம்ச சரித்திரம் என்பார்கள்.
இக்கல்வெட்டில் மிக முக்கிய செய்தி ஒன்று காணப்படுகிறது. கிபி 1801ஆம் ஆண்டு மருது சகோதரர்களைக் கைது செய்ய ஆங்கிலேயர்களுக்கு சரபோஜி மன்னர் படை உதவியும் பண உதவியும் செய்தார் என்ற செய்தியும் இருக்கிறது.
அதே ஆண்டில்தான் (கிபி 1801) ஆங்கிலேயர்கள் மருது சகோதரர்களைக் கைது செய்து தூக்கிலிட்டனர்.
விநாயகர் கோயில் வடக்குச் சுவரில் உள்ள மேலும் சில கல்வெட்டுகள், கோயிலைப் பராமரிப்பு செய்தது, தரைதளம் அமைத்தது, நிவந்தங்கள், வழிபாடுகள், முருகன் கோயில் கோபுர சுதை வேலை செய்தது, வண்ணம் பூசிப் புது கலசம் அமைத்துக் குடமுழுக்கு செய்தது முதலான மேலும் பல கோயில் திருப்பணிகளைப் பதிவு செய்கின்றன.
வரலாற்று சாசனங்கள்
ஆக, இந்த மராட்டிய மொழிக்கல்வெட்டுகள் கிபி 1801 முதல், 218 வருடங்களாகப் பல வரலாற்றுச் சம்பவங்களைச் சுமந்துகொண்டு இக்கோயிலில் இருக்கின்றன.

புகைப்படங்கள் - பாரதி ராஜேந்திரன்
(கட்டுரையாளர் மா.மாரிராஜன் இலக்கிய வரலாற்று ஆர்வலர். சமூக வலைதளங்களில் தொடர்ந்து வரலாற்றுத் தகவல்களைப் பதிவு செய்துவருகிறார். தொடர்பு எண்: 9171510787)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக