வியாழன், 21 மார்ச், 2019

பெரியார் - பூலே சமத்துவபுரம்: கலைஞர் பாதையில் ஸ்டாலின்!

பெரியார் - பூலே சமத்துவபுரம்: கலைஞர் பாதையில் ஸ்டாலின்!
மின்னமபலம் : ;பிரகாசு
மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை திமுகவும், அதிமுகவும் ஒரே நாளில் மார்ச் 19 அன்று வெளியிட்டிருக்கின்றன. நீட் தேர்வு ரத்து, கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றும் கோரிக்கை, தனியார் துறை இட ஒதுக்கீடு, ஏழு தமிழர் விடுதலை எனத் தமிழகத்தின் முற்போக்கு இயக்கங்கள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கும் கோரிக்கைகள் இருகட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், திமுகவின் தேர்தல் அறிக்கையில் இதையும் தாண்டி பல தனித்துவமான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.
ஆளுநர் பதவியை அரசியலமைப்பு சட்டத்திலிருந்து நீக்க வேண்டும்; நீக்கும் வரை முதல்வரால் பரிந்துரைக்கப்படும் மூன்று பேரில் ஒருவரை ஆளுநராக நியமிக்க வேண்டும்; மாநில அரசை கலைக்கிற சட்டப்பிரிவு 356ஐ நீக்க வேண்டும் என்று கூட்டாட்சி தத்துவத்தை வலியுறுத்துவோம் என்ற வாக்குறுதியாகட்டும், இந்த நாட்டின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்புகளில் ஒன்றான நீதிமன்றங்களில் தற்போதைய நீதிபதிகள் நியமன முறை தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, நீதிபதிகள் நியமனங்களில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவோம் என்ற வாக்குறுதியாகட்டும்
, மாநிலங்களுக்கு வரி வருவாயைப் பகிர்ந்தளிக்கிற நிதிக்குழுவின் அமைப்பு மற்றும் அதன் பணிகள் தொடர்பான முடிவுகள் மாநிலங்கள் இடை மன்றத்தால் தீர்மானிக்க வேண்டுமென வலியுறுத்துவோம் என்ற வாக்குறுதியாகட்டும் சமூகநீதி மற்றும் மாநில சுயாட்சி உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பதாக அமைந்துள்ளன.
திமுக தேர்தல் அறிக்கையில், இவற்றையெல்லாம் தாண்டி திராவிட இயக்கத்தின் பாதையில், கலைஞரின் பாதையில் வெளியாகியிருக்கிற தனித்துவமான அறிவிப்பாக இருப்பது பெரியார் - ஜோதிராவ் பூலே சமத்துவபுரங்கள். சமத்துவபுரங்களின் தேவையையும், அவற்றின் காரிய நோக்கையும் அறிய வேண்டுமானால் முதலில் இந்தியாவின் சாதி அமைப்பு எத்தகைய கட்டமைப்பின் கீழ் செயல்பட்டு வருகிறது என்பதை உணர வேண்டியது அவசியம். “இப்பல்லாம் யாருங்க சாதி பாக்குறாங்க?” என்ற கேள்வி சர்வசாதாரணமாகப் பலரிடத்திலிருந்து எழும்.

ஆனால், உட்சாதிக்குள் மட்டுமே திருமணம் செய்யும் அகமண முறையைப் பற்றியோ அல்லது ஊர் தனி - சேரி தனி என்று தொடரும் அவலத்தைப் பற்றியோ கேட்டால் அவர்களிடத்தில் பதில் இருக்காது. இந்த இரண்டையும் கட்டிக்காக்கிற இடங்களாகக் கிராமங்கள் இருக்கின்றன. கிராமங்களில் வழிபடப்படுகிற குல தெய்வங்களும், நாட்டார் தெய்வங்களும் ஊர் சேரி இணையாமல் இருப்பதிலும், அகமண முறையைப் பாதுகாப்பதிலும் இப்போதும் முழுமுதல் பங்காற்றுகின்றன. யார் வீட்டில் மணம் முடிக்க வேண்டும் என்பதைக் குல தெய்வத்தை வைத்தும், ஒருவர் சாதியை அறிய அவர் எந்தக் கடவுளை வழிபடுகிறார், அவர் எந்த ஊர் என்பதைக் கேட்டால் போதும் என்கிற நிலையும் இன்றும் கிராமங்களில் இருக்கிறது. எனவேதான், சாதி அமைப்பைக் கிராமங்கள் காக்கிறது, கிராமங்கள் ஒழிந்து நகரங்கள் பெருக வேண்டும் என்றார் பெரியார்.
அவற்றிலிருந்து மக்கள் விடுபட்டு வரும் வரை சாதி அமைப்பு அப்படியே இருக்கட்டும் அமைதி காக்கவும் இயலாது. அகமணமுறையை ஒழிக்கும் விதமாக இந்து திருமணச் சட்டத்தில் திருத்தம் செய்து சுயமரியாதைத் திருமண முறைக்கு 1967ஆம் ஆண்டில் சட்ட அங்கீகாரம் கொடுத்தார் பேரறிஞர் அண்ணா. இதன்மூலம் சாதி கடந்து, மதம் கடந்து நடக்கிற காதல் திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கியது. அதன் பயனாய், கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது காதல் திருமணங்கள் பெருகி, சாதி, மதம் கடந்த திருமணங்கள் மெல்ல மெல்ல இயல்பாகி வருகின்றன. இன்று வரையிலும் இந்தியாவின் வேறெந்த மாநிலங்களிலும் சுயமரியாதைத் திருமணத்துக்குச் சட்ட அங்கீகாரம் கிடையாது.

இதைப்போலவே ஊர் தனி - சேரி தனி என்ற நிலையையும் உடைக்கும் முயற்சியாக 1998ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 17ஆம் தேதி சமத்துவபுரம் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் அப்போதைய முதல்வர் கலைஞர். அனைத்து சாதியைச் சேர்ந்தவர்களையும் ஒரே இடத்தில் குடியிருக்கச் செய்யும் திட்டம் சமத்துவபுரம். இந்தத் திட்டத்துக்கு ஒரு முக்கியமான சிறப்பம்சமும் உண்டு. ”ஊர் தனி - சேரி தனி என்று பட்டியலின மக்களைப் பிரித்து தனிமைப்படுத்த வேண்டாம். ஊர்ப்பகுதிக்குள் சிறிய இடம் இருந்தாலும் பரவாயில்லை, அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டி அவர்களையும் ஊருக்குள் குடியிருக்கச் செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார் பெரியார். ”பட்டியலின மக்களையெல்லாம் ஒரே பகுதிக்குள் வாழச் செய்யுங்கள், எண்ணிக்கையில் பெருகி நின்றால் பட்டியலின மக்கள் பாதுகாப்பாக உணர்வார்கள்” என்றார் அம்பேத்கர்.
பெரியார், அம்பேத்கரின் இச்சிந்தனைகளை ஆழமாக உள்வாங்கிய கலைஞரின் வெளிப்பாடுதான் சமத்துவபுரங்கள். ஏனென்றால் சமத்துவபுரங்களில் ஊர் தனி - சேரி தனி என்ற நிலை கிடையாது. அனைத்து சாதியினரும் ஒருங்கே இணைந்து வாழலாம். அதேசமயத்தில் சமத்துவபுரங்களில் 40 விழுக்காடு வீடுகள் பட்டியலின மக்களுக்கே ஒதுக்க வேண்டுமென்று ஆணை உள்ளது. மற்ற சாதியினருக்கு எஞ்சியவை பிரித்து வழங்கப்படுகிறது. யாரையும் புறக்கணிக்கக் கூடாது என்ற நோக்கத்தோடு 10 விழுக்காட்டை உயர் சாதியினருக்கு வழங்கவும் அதில் ஆணை உள்ளது. எனவே, பட்டியலின மக்கள் சமத்துவபுரங்களில் ஊருக்குள் வசிக்கும் அதே வேளையில், எண்ணிக்கையில் அதிகமானவர்களாகப் பாதுகாப்பாகவும் வசிக்கிறார்கள்.

சாதியத் தன்மையை ஏற்றுக்கொண்டிருக்கிற மக்களுடன் பட்டியலின மக்களை இணைந்து வாழ வைத்தால், காலப்போக்கில் சாதியத் தன்மை இல்லாமல் போய்விடும் என்று கருதிய பெரியாரின் சிந்தனைக்கு உயிர் வடிவம் கொடுக்கும் வகையில் இந்த சமத்துவபுரங்களை உருவாக்கினார் கலைஞர். அதனால் பெரியார் நினைவு சமத்துவபுரம் என்று பெயரும் சூட்டப்பட்டது. தற்போது 200க்கும் மேற்பட்ட சமத்துவபுரங்கள் தமிழகம் முழுவதும் இருக்கிறது. கலைஞரின் இந்தத் திட்டத்தை இந்தியா முழுவதும் கொண்டுசெல்ல வலியுறுத்துவோம் என்று திமுக இப்போது தேர்தலை அறிக்கையில் அறிவித்திருக்கிறது. அதில், “தமிழகத்தில் கலைஞர் அரசால் உருவாக்கப்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரங்களைப் போல், இந்தியா முழுவதும் சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டு அவை பெரியார் - ஜோதிராவ் பூலே சமத்துவபுரம் என பெயரிடப்பட வேண்டும் என திமுக வலியுறுத்தும்” எனக் கூறப்பட்டுள்ளது.
வடநாட்டுப் பெரியார் ஜோதிராவ் பூலே என்றும், தென்னாட்டு ஜோதிராவ் பூலே பெரியார் என்றும் பலர் ஒப்பீடு செய்திருக்கிறார்கள். மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள வால்கன் என்ற கிராமத்தில் 1827ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி பிறந்தவர் ஜோதிராவ் பூலே. மாலி என்ற இடைநிலை சமூகத்தைச் சேர்ந்தவரான இவர், 1848ஆம் ஆண்டு தன்னுடன் படித்த மாணவனின் திருமணத்தில் கலந்துகொள்ள சென்றபோது, தனக்கு நேர்ந்த சாதியக் கொடுமையால், அதற்கு எதிராக வெகுண்டெழுந்து போராடத் தொடங்கினார். பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து 1851, 1852ஆம் ஆண்டில் பெண்களுக்கான கல்விக் கூடங்களை நிறுவினார். தனது மனைவி சாவித்ரி பாய் பூலேவை ஆசிரியராக்கினார். அவர்தான் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்.

பட்டியலின மக்களின் உரிமைகள், குழந்தை திருமண முறைக்கு எதிர்ப்பு, புரோகித மறுப்பு திருமணங்கள், கைம்பெண்களுக்கு ஆதரவான போராட்டங்கள் எனக் கணவன் மனைவி இருவரும் இணைந்து பல்வேறு புரட்சிகரமான செயல்பாடுகளை 19ஆம் நூற்றாண்டில் மேற்கொண்டனர். இப்பணிகளை 20ஆம் நூற்றாண்டில் இன்னும் வீரியத்தோடு தமிழ்நாட்டில் செய்து காட்டியவர் பெரியார். இவர்கள் இருவரையும் இணைத்து பெரியார் - ஜோதிராவ் பூலே சமத்துவபுரங்களை இந்தியா முழுவதும் உருவாக்க வலியுறுத்துவோம் என்று திமுக வாக்குறுதி அளித்திருப்பது சாதி ஒழிப்பு சிந்தனையாளர்களின் காதில் தேனாய் விழுந்திருக்கிறது. இரண்டு நாட்களாய் சமூக வலைதளங்களில் பலரும் இதை வெளிப்படுத்தியும் வருகிறார்கள். நாடே சமத்துவபுரமாய் மாற, அதற்கான அடித்தளமாய், முன்மாதிரியாய் கலைஞரின் சமத்துவபுரம் திட்டம் இருக்கும். இதை இந்தியா முழுவதும் எடுத்துச்செல்ல வேண்டும் என்ற திமுகவின் வலியுறுத்தல் அவசியமானது, ஏற்கப்படவேண்டியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக