ஞாயிறு, 10 மார்ச், 2019

வேல்முருகன்: திமுகவா, அமமுகவா?

வேல்முருகன்: திமுகவா, அமமுகவா?மின்னம்பலம் : தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வரும் தேர்தலில் யாரோடு கூட்டணி வைக்கப் போகிறேன் என்பதை இன்று(மார்ச் 10) நடக்கும் பொதுக்குழுவில் அறிவிக்க இருக்கிறார்.
இது தொடர்பாக மார்ச் 8 சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வேல்முருகன்,
“அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி குறித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழகத்தின் லட்சக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமையைப் பறிக்கும் மத்திய அரசை எதிர்த்துப் போராடி வருகிறது. தமிழகத்தில் மத்திய அரசுப் பணிகளில் முழுக்க முழுக்க வட இந்தியர்களைத் திணித்து வருகிறது மத்திய அரசு. இதற்காக நீதி வேண்டி தென்னக ரயில்வே அதிகாரிகளிடம் ஆவணங்களை ஒப்படைத்திருக்கிறோம்.

மத்திய அரசுப் பணிகளில் தமிழர்களுக்கு இடமில்லாத நிலையை எதிர்த்து, பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்பும் முழக்கத்தையும், தமிழக உரிமைகளை அடகு வைக்கும் முதல்வர் எடப்பாடியை வீட்டுக்கு அனுப்பும் முழக்கத்தையும் இன்று முதல் முன் வைக்கிறோம்.
gohomemodi, gohomeedapadi ஆகிய இரு முழக்கங்களை முன் வைத்துப் போராடப் போகிறோம். எடப்பாடி பழனிசாமியையும், மோடியையும் வீட்டுக்கு அனுப்புவதே எங்கள் வேலை” என்று தெரிவித்தார் வேல்முருகன்.
அப்படியென்றால் யாரை ஆதரிப்பீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “கடலூர் மாவட்டம் வடலூரில் மார்ச் 10 ஆம் தேதி தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சியின் பொதுக்குழு கூடுகிறது. அங்கு ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை எடுத்து மத்திய, மாநில அரசுகளை வீட்டுக்கு அனுப்பும் போராட்டம் தொடங்கும்” என்றார் வேல்முருகன்.
மத்திய, மாநில அரசுகளை எதிர்ப்பது என்று முடிவெடுத்துவிட்ட வேல்முருகன் திமுக கூட்டணியை ஆதரிப்பார் என்று ஒரு தரப்பினரும், டிடிவி தினகரனை ஆதரிப்பார் என்றும் இரு வேறான கருத்துகள் நிலவுகின்றன.
பாட்டாளி மக்கள் கட்சியோடு திமுக பேசிக் கொண்டிருந்த நிலையிலேயே இன்னொரு பக்கம் வேல்முருகனோடும் திமுக பேசிக் கொண்டுதான் இருந்தது. எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் போன்றவர்கள் வேல்முருகனிடம் டச்சில் இருந்தனர்.
அப்போது வேல்முருகன், ‘கடலூர் பார்லிமெண்ட் தர்றீங்களாண்ணே?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு வாய்ப்பில்லை என்று திமுக தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஒருகட்டத்தில் அதிமுக தலைமையிலான அணிக்கு பாமக சென்றுவிட்ட நிலையில் வேல்முருகனோடு திமுக தரப்பில் மீண்டும் திமுஇஅ வடமாவட்ட முக்கியஸ்தர்கள் பேசியிருக்கிறார்கள். ‘காடுவெட்டி குரு குடும்பத்தோடு சேர்ந்து பாமகவுக்கு எதிராகப் பிரசாரம் செய்யுங்கள். சட்டமன்ற தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம்’ என்று வேல்முருகனிடம் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் திமுக அணியில் காங்கிரஸ் இருப்பதைப் பற்றி யோசித்த வேல்முருகன், கட்சியினரிடம் கலந்து பேசிச் சொல்வதாக பதில் சொல்லியிருக்கிறார்.
அதேநேரம் தினகரன், தங்கள் கூட்டணியில் சேர எஸ்டிபியை கட்சியைத் தவிர இன்னொரு கட்சி தயாராக இருப்பதாகவும் விரைவில் அறிவிப்பேன் என்றும் பத்திரிகையாளர் சந்திப்புகளில் கூறிவந்தார். அந்த கட்சி வேல்முருகனின் கட்சிதான் என்றும், அமமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பேச்சு நிலவியது.
அமமுகவா, திமுகவா யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு இன்று வடலூரில் நடக்கும் பொதுக்குழுவில் விவாதித்து முடிவெடுத்து பதில் அளிப்பார் வேல்முருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக