சனி, 23 மார்ச், 2019

லாலு - காங்கிரஸ் கூட்டணி ..பிகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 20 தொகுதிகள் . காங்கிரஸ் 9 தொகுதிகள்

மாலைமலர் : பீகாரில் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டது.
பீகாரில் லாலு கட்சி-காங்கிரஸ் மெகா கூட்டணி அமைத்து போட்டி பாட்னா: பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளை கொண்டுள்ள பீகார் மாநிலம் முக்கிய பங்கு வகிக்கிறது.
இங்கு ஆளும் கட்சியாக உள்ள நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளமும், பாரதீய ஜனதா கட்சியும், ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த கூட்டணிக்கு சரியான போட்டியை ஏற்படுத்துகிற விதத்தில் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ், ராஷ்ட்ரீய லோக்சமதா, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மத சார்பற்றது), விகாஷீல் இன்சான் கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
இந்த கட்சிகள் இடையே நேற்று தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. மொத்தம் உள்ள 40 இடங்களில் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் தரப்பட்டுள்ளன.
உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரீய லோக்சமதா கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஜித்தன் ராம்மஞ்சி தலைமையிலான இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மத சார்பற்றது) கட்சிக்கு 3 தொகுதிகளும், முகேஷ் சானியின் விகாஷீல் இன்சான் கட்சிக்கு 3 இடங்களும் தரப்பட்டுள்ளன. இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்டு) கட்சிக்கு ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி தனது தொகுதிகளில் இருந்து ஒரு தொகுதியை ஒதுக்கித்தருகிறது.
காங்கிரசுக்கு மாநிலங்களவை இடம் ஒன்றும் தரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய மந்திரி சரத் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி சின்னத்தில் போட்டியிடுவார். தேர்தலுக்கு பின்னர் அவர் தனது லோக்தந்திரிக் ஜனதாதளம் கட்சியை ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியுடன் இணைக்க ஒப்புக்கொண்டுள்ளார். இடது சாரி கட்சிகளுக்கு இந்த கூட்டணியில் இடம் தரப்படவில்லை. இது அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி கூறி உள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக