திங்கள், 25 பிப்ரவரி, 2019

தேமுதிக ..... ஒவ்வொரு மாவட்டத்திலும் இடப்பெயர்வு ..பணமும் தொகுதியும் .. பேரம் பேசும் பிரேமா - சுதீஷ் கம்போ

.ஆ.விஜயானந்த் - vikatan.com/  : எப்படியாவது எம்.பி ஆகிவிட வேண்டும்' என்ற
முனைப்பில் இருக்கிறார் சுதீஷ். வெற்றி பெறுவதற்கான வாக்குவங்கியும் செலவு செய்வதற்கான வேட்பாளர்களும் தே.மு.தி.க-வில் இல்லை என்பதுதான் எதார்த்தமான நிலவரம்.
அ.தி.மு.க-வுடன் கூட்டணி உருவாவதை தே.மு.தி.க-வின் முக்கிய நிர்வாகிகள் விரும்பவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. `ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் கடுமையான துயரங்களை அனுபவித்தோம். தொண்டர்கள் பலரும் அ.தி.மு.க எதிர்ப்பு மனநிலையில் உள்ளனர். மீண்டும் இப்படியொரு கூட்டணியை நாங்கள் விரும்பவில்லை' என்கின்றனர் தே.மு.தி.க வட்டாரத்தில்.

அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்ட விஜயகாந்த், நேற்று முன்தினம் சென்னை திரும்பினார். தற்போது தீவிர ஓய்வில் இருக்கும் அவர்,விரைவில் கூட்டணி தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். இதற்கிடையில், அ.தி.மு.க-வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருக்கிறார் தே.மு.தி.க துணை செயலாளர் எல்.கே.சுதீஷ். `அ.தி.மு.க கூட்டணியில் எத்தனை தொகுதிகள், எந்தெந்த இடங்கள்?' என்பதைப் பற்றி உறுதியான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் அணி அமைத்து 14 தொகுதிகளில் தே.மு.தி.க போட்டியிட்டது. இதில், ஒரு தொகுதியில்கூட அந்தக் கட்சி வெற்றி பெறவில்லை. இதன்பிறகு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பல தொகுதிகளில் டெபாசிட்டைப் பறிகொடுத்தது. மக்கள் நலக் கூட்டணி உருவானதை விரும்பாத தே.மு.தி.க எம்.எல்.ஏ-க்கள் 3 பேர் தி.மு.க-வில் ஐக்கியமானார்கள். `அ.தி.மு.க வெற்றி பெறுவதற்காகத்தான் மக்கள் நலக் கூட்டணி உருவானது' என்ற விமர்சனங்களும் எழுந்தன.
இந்த நிலையில், `அ.தி.மு.க-வோடு தே.மு.தி.க தலைமை கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதை அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் விரும்பவில்லை' என்கிறார்கள். இதுதொடர்பாக நம்மிடம் விரிவாகப் பேசினர் தே.மு.தி.க நிர்வாகிகள் சிலர். ``விஜயகாந்த் உடல்நிலை முன்னேறி வருவதில் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறோம். அவரைக் கலந்து ஆலோசித்து கூட்டணிப் பேச்சு நடக்கிறது என்பதை நாங்கள் நம்பவில்லை. `எப்படியாவது எம்.பி ஆகிவிட வேண்டும்' என்ற முனைப்பில் இருக்கிறார் சுதீஷ். வெற்றி பெறுவதற்கான வாக்குவங்கியும் செலவு செய்வதற்கான வேட்பாளர்களும் தே.மு.தி.க-வில் இல்லை என்பதுதான் யதார்த்தமான நிலவரம். ஓரிரு இடங்களில் நின்றாலும் அது வலுவான எதிர்காலத்தைக் கொடுக்குமா என்ற கேள்வியும் தொண்டர்கள் மத்தியில் உள்ளது. அ.தி.மு.க-வோடு கூட்டணி முடிவாகி, கையெழுத்தாகும்போது தே.மு.தி.க-வில் தற்போதுள்ள நிர்வாகிகள் சிலரும் பெரும்பான்மையான தொண்டர்களும் வேறு கட்சிகளுக்கு இடம்பெயரும் சூழல்தான் ஏற்படும்' என விவரித்தவர்கள்,
``கருணாநிதி முதல்வராக இருந்த 2006-11 காலகட்டத்தில் தே.மு.தி.க அதிகளவில் பாதிக்கப்படவில்லை. பொதுக்கூட்டம் நடத்துவதிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவதிலும் சுணக்கம் ஏற்பட்டதில்லை. கருணாநிதியைக் கடுமையாக விமர்சித்தாலும் யார் மீதும் வழக்குகள் வந்ததில்லை. இடைத்தேர்தலில் மட்டும்தான் தோல்வி வந்து சேரும். கட்சியின் அடிமட்டத் தொண்டன் பாதிக்கப்படவில்லை.
2011 அ.தி.மு.க ஆட்சியில் தே.மு.தி.க நிர்வாகிகள் மீது தொடர்ச்சியாக வழக்குகள் பதிவானது. வாட்ஸ்அப் செய்திக்காக நெல்லை மாவட்டச் செயலாளர் அய்யம்பெருமாளை புழல் சிறையில் 15 நாள் ரிமாண்ட்டில் வைத்தார்கள். ஒன்றும் இல்லாத பிரச்னைக்காக எல்லாம் கட்சி நிர்வாகிகள் சிறைத் தண்டனை அனுபவித்தனர். மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் ஜெயக்குமார் மீது பேருந்து மீது வெடிகுண்டு வீசியதாக வழக்கு போட்டார்கள். பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக எஸ்.ஆர்.பார்த்திபனும் சேலம் மாநகர மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தே.மு.தி.க எம்.எல்.ஏ-க்களும் சஸ்பெண்டு உட்பட பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஆளானார்கள். விஜயகாந்த் பங்கேற்ற பொதுக்கூட்டங்களுக்கும் ஏராளமான இடையூறுகளை ஏற்படுத்தினார்கள்.
சட்டமன்றத்தில் நேருக்கு நேர் சண்டை போட்டதால், தே.மு.தி.க தொண்டர்களுக்கும் ஜெயலலிதா மீதும் அ.தி.மு.க மீதும் வெறுப்பு ஏற்பட்டது. உள்ளூரில் பொதுக்கூட்டமோ ஆர்ப்பாட்டமோ நடத்த வேண்டும் என்றால், நீதிமன்றத்துக்குச் சென்று உத்தரவு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு பேனரைக் கூட வைக்க முடியாத அளவுக்கு அ.தி.மு.க-வினரால் தொல்லைகளைச் சந்தித்தோம். இதன் விளைவாக, `அண்ணா தி.மு.க நமக்கு எதிரானது' என்ற மனநிலைக்குத் தொண்டர்கள் வந்துவிட்டார்கள். இப்போது அதே அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கிறார்கள் என்பதை நிர்வாகிகளாலும் தொண்டர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில், `நான் தனித்து நிற்கிறேன், முதல்வர் வேட்பாளர்' எனக் கூறியதால், விஜயகாந்த் பக்கம் தொண்டர்கள் நின்றனர்.
தே.மு.தி.க அழிவுக்கு அ.தி.மு.க-தான் காரணம் என்பதைத் தொண்டர்கள் உறுதியாக நம்புகின்றனர். இதை தலைமையிடம் எடுத்துக் கூறுவதற்கு யாரும் இல்லை. இந்தக் கூட்டணி முடிவாகும்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் இடப்பெயர்வு அரங்கேறும். காற்றில் வைத்த கற்பூரம் போலக் கட்சி கரைந்துபோகும் சூழல்தான் ஏற்படும். ஏற்கெனவே, 50 சதவிகிதம் பேர் மாற்றுக் கட்சிகளுக்குச் சென்றுவிட்டனர். தேர்தல் உடன்படிக்கை முடிவாகும்போது, இருக்கும் சிலரும் தி.மு.க-விலோ தினகரன் கட்சியிலோ ஐக்கியமாகிவிடுவார்கள்" என்கின்றனர் அச்சத்துடன்.
www.vikatan.com/…/149995-dmdk-cadres-shocked-about-…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக