புதன், 27 பிப்ரவரி, 2019

தேமுதிக ஏலம் ஆரம்பம் ... திமுக அதிமுக உச்சகட்ட ..

டிஜிட்டல் திண்ணை: தேமுதிகவிடம் திமுக, அதிமுக நடத்தும் உச்சகட்ட பேர விவரம்!மின்னம்பலம் :“தேமுதிக முக்கியப் பிரமுகர் ஒருவரிடம் இருந்து வந்த மெசேஜைதான் ஃபார்வர்டு செய்திருந்தேன். நாளை வரை தேமுதிக கூட்டணி விஷயத்தில் அமைதியாய் இருக்கும் என்கிறார்கள். அதேநேரம் திமுகவும், அதிமுகவும் தங்களது அணிக்குள் தேமுதிகவை கொண்டுவருவதற்கான பணிகளை நேரம் காலம் பார்க்காமல் செய்துகொண்டிருக்கின்றன.முதலில் திமுகவின் மூவ்களை சொல்லிவிடுகிறேன். காங்கிரசுக்குக் கொடுக்கப்பட்ட 10 தொகுதிகளில் இரண்டை திரும்பக் கேட்டு வாங்கி தேமுதிகவுக்கு நான்கு சீட் கொடுக்கலாம் என்ற முயற்சியில் ஈடுபட்டது திமுக. ஆனால் காங்கிரசிடம் இருந்து இரு தொகுதிகளைத் திரும்பப் பெறுவதிலும் இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. திமுகவில் இருந்து இதுகுறித்து காங்கிரசிடம் கேட்கப்பட்டபோது 2 தொகுதிகளை விட்டுக்கொடுக்க மறுத்திருக்கிறார்கள். குறிப்பாக ப.சிதம்பரமே, ‘ஏற்கனவே தமிழகத்தில் ஒன்பது தொகுதிகளில்தான் நிற்கிறோம். அதிலும் இரண்டைக் குறைக்க முடியாது. ஏற்கனவே திமுக தலைமையின் மூவ் காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிருப்தியளித்திருக்கிறது. இப்போது சீட் குறைப்பு என்றால் அது மேலும் சிக்கலாகிவிடும்’ என்று சொல்லிவிட்டாராம்.

திமுகவின் மீது காங்கிரஸ் தலைவர்களுக்கு ஏற்பட்ட அதிருப்திக்குக் காரணம் கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி திமுக -காங்கிரஸ் உடன்பாடு ஏற்பட்டபோது நடந்த சம்பவங்கள்தான். பிப்ரவரி 20 ஆம் தேதி மாலை தொகுதி உடன்பாட்டில் கையெழுத்து போடுவதற்கு அறிவாலயம் செல்வதற்காக காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் முகுல் வாஸ்னிக், கே.சி.வேணுகோபால் ஆகியோர் டெல்லியில் இருந்து வந்து கிண்டியிலுள்ள தனியார் ஹோட்டலில் இருந்தனர். அங்கே தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளோடு சுமார் 2 மணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதற்கிடையே 20 ஆம் தேதி பிற்பகலே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி முன்னாள் தலைவர்களான திருநாவுக்கரசர், ஈவிகேஸ் இளங்கோவன், கிருஷ்ணசாமி, தங்கபாலு, குமரி அனந்தன் உள்ளிட்டோருக்கு போன் போட்டு மாலை அறிவாலயம் செல்கிறோம் வந்துவிடுங்கள் என்று அழைத்திருக்கிறார். அவர்களும் தயாராக இருந்தனர்.
மாலை அறிவாலயம் செல்வதற்கு கொஞ்ச நேரம் முன்பு திமுக அமைப்புச் செயலாளர் ஆலந்தூர் பாரதியிடம் இருந்து கே.எஸ். அழகிரிக்கு ஒரு போன் வந்திருக்கிறது. ‘மாநிலத் தலைவர் நீங்கள், டெல்லியில் இருந்து வந்த வேணுகோபால், முகுல் வாஸ்னிக், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர். ராமசாமி ஆகியோர் தவிர வேறு யாரும் தலைவர் அறைக்குள் வரவேண்டாம்’ என்பதுதான் அந்தத் தகவல். இதைக் கேட்டு அழகிரியே அதிர்ந்துவிட்டாராம். ‘என்ன இப்போ சொல்றீங்க. நான் அவங்களை எல்லாம் வரச் சொல்லிட்டேன். இப்ப திடீர்னு வேண்டாம்னு சொன்னா ஏதோ நான் தான் வேணும்னே பண்றதா நினைச்சுக்க மாட்டாங்களா?’ என்று கேட்க, ‘தலைவர் தான் சொல்லச் சொன்னார்’ என்று கறாராக சொல்லிவிட்டாராம் பாரதி.
இதையடுத்து அழகிரி தயங்கியபடியே ஒவ்வொருவருக்காய் போன் போட்டு விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். அப்போதுதான் அறிவாலயத்தை நெருங்கிய முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தனது ரூட்டை மாற்றிவிட்டாராம். இளங்கோவனும் புறப்பட்டு பாதிவழியில் வந்துவிட்ட நிலையில் அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரும் திரும்பிவிட்டார். தங்கபாலு உள்ளிட்டசிலரும் இதேபோல் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள். ஆனால் ஏற்கனவே வந்துவிட்ட குமரி அனந்தன், கிருஷ்ணசாமி ஆகியோர் வெளியிலேயே அமரவைக்கப்பட்டனர். முறைப்படி தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்பட்ட நாளிலேயே காங்கிரஸ் தலைவர்களுக்குள் திமுக மீது கசப்பும், கோபமும் ஏற்பட்டுவிட்டது.
‘அதென்ன மூன்று, நான்கு பேர்தான் உள்ளே வரவேண்டும் என்று சொல்கிறார்கள். மற்ற கட்சித் தலைவர்கள் ஸ்டாலினை சந்திக்க செல்லும்போது இந்தக் கட்டுப்பாடு உண்டா? திமுகவினர் மட்டும் ஸ்டாலினோடு ஏழெட்டு பேர் சுற்றியிருக்கிறார்களே... ’ என்றெல்லாம் அவர்களுக்குள் விவாதம் நடந்து வருகிறது. ஆரம்பமே இப்படி அமர்க்களமான நிலையில் ஒரே வாரத்தில் 10 சீட்டில் இருந்து 2 ஐ குறைக்க வேண்டுமென்றால் எப்படி ஒப்புக் கொள்வோம்? என்கிறார்கள் காங்கிரஸார்.
ஆனாலும் தேமுதிகவை விட்டுவிட வேண்டாம் என்ற எண்ணத்தில் திமுக தனது தொகுதிகளில் இருந்தே கொடுக்க முடிவு செய்துள்ளது.
நான்கு மக்களவை தொகுதிகள் ஒரு ராஜ்யசபா மேலும் தேர்தல் செலவுக்கு 50 கோடி வரை கொடுக்க சபரீசன் சுதீஷிடமே நேரடியாக தெரிவித்திருக்கிறாராம்.
தமிழகத்தில் நடக்கும் கூட்டணி பேரங்கள் பற்றி மத்திய அரசின் உளவுத்துறையான ஐபி சகல இடங்களிலும் மூக்கை நுழைத்து மோப்பம் பிடித்து வருகிறது. இந்நிலையில் திமுக-தேமுதிக இடையே நடக்கும் இந்த பரிவர்த்தனைகள் பற்றி அமித் ஷாவுக்கு அனுப்பிய ரிப்போர்ட்டில், ‘தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக கூட்டணி அமைந்தால் 25 சீட் வரை கிடைக்க வாய்ப்பிருக்கிறது’ என்று இரு தினங்களுக்கு முன்பு குறிப்பிட்டிருக்கிறது ஐபி. இதையடுத்து உடனடியாக எடப்பாடியிடம் இதைப் பகிர்ந்துகொண்ட அமித் ஷா, ‘எப்படியாவது தேமுதிகவை நம்ம அணிக்குக் கொண்டுவாருங்கள்.’ என்று அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.
விஜயகாந்த் பிரச்சாரத்துக்கு வர முடியாத நிலையில் தேமுதிகவை சேர்த்துப் பயனில்லை என்ற முடிவில் இருந்த எடப்பாடி பாஜக தலைமையின் தகவலை அடுத்து தேமுதிகவை அணியில் சேர்க்க மறுபடியும் முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளார். இப்போதைய தகவலின்படி அதிமுக அணியில் நான்கு மக்களவைத் தொகுதிகளோடு திமுக தருவதாக சொன்னதை விட இருமடங்கு தேர்தல் நிதியையும் அளிக்கத் தயாராகிவிட்டதாம் அதிமுக.
தேமுதிகவை மையமாக வைத்து இவ்வளவும் நடந்து வரும் நிலையில் அஷ்டமி, நவமி முடிந்து நாளை இதுபற்றி இரு தரப்பிலும் மீண்டும் பிரேமலதாவிடம் பேச இருக்கிறார்கள்.
தேமுதிகவை அணிக்குள் கொண்டுவர அதிமுக மீண்டும் விடாமுயற்சி எடுத்துக் கொண்டிருக்கையில் சென்னையில் இருக்க வேண்டிய திமுக தலைவர் ஸ்டாலின், இன்று கோவை சிபிஐ மாநாட்ட்டில் கலந்துகொண்டு, அப்படியே ஊட்டிக்கு செல்கிறாராம். மார்ச் 1 ஆம் தேதி தனது பிறந்தநாள் அன்று கட்சியினர் தன்னை சந்திக்க வரவேண்டாம் என்று ஏற்கனவே அறிவித்திருக்கிறார் ஸ்டாலின். கலைஞர் காலமாகி ஒரு வருடம் நிறைவு பெறாத நிலையில் பிறந்தநாள் கொண்டாட்டம் தேவையில்லை என்பது ஸ்டாலினின் முடிவு” என்று முடிந்தது வாட்ஸ் அப் மெசேஜ்.
இந்தத் தகவலுக்கு தலை சுற்றும் ஸ்மைலியை ரியாக்‌ஷனாக போட்ட ஃபேஸ்புக் தனது தகவலை டைப் செய்ய ஆரம்பித்தது.
“கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் நேற்று தேமுதிக மாநிலச் செயலாளர் சுதீஷுக்கு போன் செய்திருக்கிறார். ‘கமல்சார் விஜயகாந்தை சந்திக்க விரும்புகிறார். அதற்கு முன் உங்களைப் பார்த்து நானும் கொஞ்சம் பேச வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார். அதற்கு சுதீஷ், ‘நான் கிண்டி சோழா ஹோட்டலில் இருப்பேன். நீங்கள் வேணும்னா வாங்களேன்’ என்று சொல்லியிருக்கிறார். அதன் பின் நேற்று இரவு பத்தரை மணிக்கு மேல் ஹோட்டலுக்கு சென்று சுதீஷை சந்தித்திருக்கிறார் முரளி அப்பாஸ். ‘கமல் சார்... தேமுதிகவும், மக்கள் நீதி மய்யமும் ஒரே அணியில் இருக்கணும்னு விரும்புறாரு. திமுக, அதிமுக அல்லாத மாற்று என நீங்கள் சொல்லிவருவதற்கு இது நல்ல களமாக இருக்கும். நேரம் சொன்னீங்கன்னா சாரே வர்றதா சொல்லியிருக்காரு’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு சுதீஷ், ‘அக்காவிடம் கேட்டு சொல்கிறேன்’ என்று சொல்லி முரளி அப்பாஸை அனுப்பி வைத்திருக்கிறாராம்” என்று தகவலை டைப் செய்து முடித்து போஸ்ட் செய்துவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக