புதன், 27 பிப்ரவரி, 2019

இம்ரான் கான் அழைப்பு : ஒன்றாக உட்கார்ந்து பேசுவோம்

ஒன்றாக உட்கார்ந்து பேசுவோம்: இம்ரான் கான்மின்னம்பலம் : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
இந்திய விமானப் படை நேற்று (பிப்ரவரி 26) பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து குண்டுகளை வீசியதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகக் காஷ்மீரின் ராஜெளரி பகுதியில் பாகிஸ்தான் விமானப் படை இன்று குண்டுகளை வீசியுள்ளது. இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய விமானி ஒருவர் பாகிஸ்தான் விமானப் படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதும் உறுதியாகியுள்ளது.
இந்தியத் தரப்பில் ஒரு விமானி சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், 2 விமானிகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தானைச் சேர்ந்த டான் ஊடகம் கூறியுள்ளது. ஒருவர் விங் கமாண்டர் அபி நந்தன் எனவும், மற்றொருவர் அடையாளம் காணப்படவில்லை எனவும், அவர் பாகிஸ்தான் இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளது.

இந்தப் பதில் தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இன்று பிற்பகலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இம்ரான் கான், “நேற்று இந்திய விமானப் படை நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலிலிருந்து, தேசத்துக்கு நம்பிக்கை அளிக்கவே இன்று இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு அமைதி நிலவ நாம் உறுதி வழங்கினோம். புல்வாமாவில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை நான் புரிந்துகொள்கிறேன். வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களின் வலியை நான் மருத்துவமனையில் பார்த்துள்ளேன். புல்வாமா தாக்குதல் குறித்து விசாரணை செய்வோம் என்று இந்தியாவுக்கு கூறினோம். இந்தியாவுடன் இணைந்து செயல்படத் தயாராகவே இருந்தோம்” என்று கூறியுள்ளார்.

மேலும், “இந்தியா இன்னும் நடவடிக்கை எடுக்கும் என்று நான் பயந்தேன். அதிலிருந்து காத்துக்கொள்ளவே இந்தியாவை எச்சரித்துள்ளேன். இந்தியா குண்டுகளை வீசிய பிறகு நேற்று காலையில் ராணுவ கமாண்டர்களுடன் பேசினேன். பாதிப்புகளைக் கணக்கிடும் வரை எதிர் நடவடிக்கைகளுக்குப் பொறுமை காக்குமாறு கூறியிருந்தேன்.
உங்களால் எங்கள் நாட்டிற்குள் வர முடியும் என்றால், எங்களாலும் அதைச் செய்ய முடியும் என்ற செய்தியைச் சொல்லுவது மட்டும்தான் நம்முடைய நடவடிக்கையின் நோக்கம். 2 இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. இங்கிருந்து நம் தலைகளைப் பயன்படுத்துவதுடன் மிகுந்த ஞானத்துடன் செயல்படுவதும் அவசியம்” என்று பேசியுள்ளார்.
அனைத்துப் போர்களும் தவறானவையே, போர்கள் எதை நோக்கிச் செல்கின்றன என்பதும் யாருக்கும் தெரியாது என்று கூறியுள்ள இம்ரான் கான், “முதல் உலகப் போர் ஒரு வாரத்திற்குள் முடிந்திருக்க வேண்டும். ஆனால் 6 ஆண்டுகள் நீடித்தது. அதைப் போலவே பயங்கரவாதத்தின் மீதான போர் 17 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்திருக்க வேண்டும்.
நான் இந்தியாவிடம் கேட்கிறேன். உங்களிடம் ஆயுதங்கள் உள்ளன. எங்களிடம் ஆயுதங்கள் உள்ளன. நாம் ஒரு தவறான மதிப்பைப் பெற வேண்டுமா? இது மேலும் வளருமென்றால், அது என்னுடைய கட்டுப்பாட்டிலோ அல்லது மோடியின் கட்டுப்பாட்டிலோ இருக்காது. புல்வாமா தாக்குதலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் துக்கத்தை நாங்கள் உணர்கிறோம். அதற்காக உரிய விசாரணையையும் பேச்சுவார்த்தையும் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். ஒன்றாக உட்கார்ந்து பேசுவோம். பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வு காண்போம்” என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக