செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

கூட்டணி குறித்துப் பொய்யான தகவல்கள்: அன்புமணி

மின்னம்பலம் : கூட்டணி குறித்துப் பொய்யான செய்திகள் வெளியாகி
வருவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று கூறிவந்த பாமக, கூட்டணி குறித்து அதிமுகவுடன் மறைமுகப் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசை கடுமையாக விமர்சித்து அறிக்கைகள் வெளியிட்டு வந்த பாமக நிறுவனர் ராமதாஸ், சமீப காலங்களில் தமிழக அரசை வரவேற்கும் விதமாகவும் வலியுறுத்தும் விதமாகவுமே அறிக்கைகளை வெளியிடுவது அதனை உறுதிப்படுத்தும் விதமாகவே அமைந்துள்ளது.


சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிமுகவுடன் பாமக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்திவருவதாகக் கூறப்படுகிறதே என்னும் கேள்விக்கு பதிலளித்த அன்புமணி, “பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. முடிவு வந்தவுடன் உங்களுக்குத் தெரியப்படுத்துவோம்” என்று பதிலளித்திருந்தார். இந்த நிலையில் தற்போது கூட்டணி குறித்து தான் எந்தக் கருத்தும் கூறவில்லை என்று மறுத்துள்ளார்.
தருமபுரியில் இன்று (பிப்ரவரி 5) செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, “யாருடன் கூட்டணி என்பது குறித்தும், யாருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்பது குறித்தும் ஊடகங்களில் நான் எதுவுமே கூறவில்லை. பொதுவாக பேச்சுவார்த்தை நடக்கிறது என்று சொன்னேன். மற்ற செய்திகள் அனைத்தும் பொய்யானவை” என்று கூறியுள்ளார். மேலும், “கூட்டணி தொடர்பாக யாருடன் பேசுகிறோம், என்ன பேசுகிறோம் என்பதை நானோ, பாமக நிறுவனர் ராமதாஸோ அல்லது நிர்வாகிகளோ கூறாத பட்சத்தில் பொய்யான செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது” எனவும் குற்றம் சாட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக