செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

திருநாவுக்கரசரை நீக்க ராகுல் போட்ட கண்டிஷன்!

டிஜிட்டல் திண்ணை: அரசரை நீக்க ராகுல் போட்ட கண்டிஷன்!மின்னம்பலம் : “காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டது தொடர்பாகவும், திருநாவுக்கரசர் மாற்றப்பட்டது தொடர்பாகவும் மின்னம்பலத்தின் காலை 7 மணி பதிப்பில் எழுதியிருந்தோம். அதையும் தாண்டிய சில தகவல்களை டெல்லி வட்டாரத்தில் சொல்கிறார்கள். அதை சொல்கிறேன்.
திருநாவுக்கரசர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார் ராகுல். திருநாவுக்கரசர் மீது தொடர்ந்து அடுக்கடுக்கான புகார்கள் டெல்லிக்கு வரிசைகட்டி வந்தது. ராகுல் கவனத்துக்கும் போனது. ஆனாலும் அவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ‘திருநாவுக்கரசரே இருக்கட்டும்...’ என்றுதான் திரும்பத் திரும்ப சொல்லி வந்தார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்துக்கு மேலிடப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட சஞ்சய் தத், ஸ்ரீவெல்ல பிரசாத் ஆகிய இருவரும் தமிழகம் முழுக்க மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் செய்தனர். அவர்கள் டெல்லிக்கு கொடுத்த ரிப்போர்ட்டில், ‘திருநாவுக்கரசர் மீது நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் இருக்கிறார்கள். அவருக்கு பதிலாக வேறு ஒருவரை நியமிப்பது நல்லது’ என சொல்லியிருக்கிறார்கள். அந்த ரிப்போர்ட்டை பார்த்த ராகுல் காந்தி, ‘யாரைப் போட்டாலும் எதாவது ஒரு பிரச்னை கிளப்பிட்டுதான் இருப்பாங்க...’ என்று சொல்லி அப்போதும் அந்த விஷயத்தைத் தவிர்த்துவிட்டார். இப்படியாக திருநாவுக்கரசரை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ராகுல்தான் பாதுகாத்து வந்தார்.

அதே நேரத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எப்படியாவது தலைவராகிவிட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் துடியாக துடித்தார்கள். இளங்கோவனின் தீவிர ஆதரவாளரான குஷ்புவே பல இடங்களில் வெளிப்படையாகவே, தமிழக காங்கிரஸ் தலைவர் விரைவில் மாற்றப்படுவார் என்றெல்லாம் சொல்லி வந்தார். இளங்கோவனைப் பற்றி ராகுலிடம் சிலர் சொன்னபோது, ‘தலைவராக இருக்கிறவங்க 70 வயசுக்குள் இருக்கணும். இளங்கோவனுக்கு இப்போது 72 வயசு ஆகுது. அவரை எப்படி தலைவராக போட முடியும்’ என்று சொல்லி அந்த பேச்சுக்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டாராம்.
அதன் பிறகு கடந்த வாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் ராகுலை சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது ராகுல் சில விஷயங்களை சிதம்பரத்திடம் சொல்லியிருக்கிறார். ‘தேர்தல் நெருங்கப் போகுது. தென் மாநிலங்களில் தேர்தலுக்கான நிதி ஒருங்கிணைப்பு வேலைகளை நீங்க கவனிச்சுக்கோங்க. ஒரு பொறுப்பான நபர் இருந்தால்தான் வேலை சரியாக நடக்கும். அதேபோல தமிழ்நாட்டில் நமக்கு எத்தனை சீட் கிடைக்கும்னு இன்னும் தெரியலை. எத்தனை கிடைச்சாலும் சரி, அந்த தொகுதிகளுக்கான தேர்தல் செலவுக்கு நிதி கலெக்ட் செய்யும் பொறுப்பு உங்களுடையதுதான்...’ என்பதுதான் ராகுல் சொன்னது.
அதைக் கேட்ட சிதம்பரம், ‘அதெல்லாம் பண்ணிடலாம். மற்ற மாநிலங்களில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. தமிழ்நாட்டில் நீங்க சொல்ற மாதிரி நிதி கலெக்ட் பண்றது என்பது எனக்கு பெரிய விஷயம் இல்லை. ஆனால், அதை திருநாவுக்கரசரை வெச்சுக்கிட்டு என்னால் பண்ண முடியாது. அவர் ரூட் வேற. என் ரூட் வேற. எப்படி போனாலும் ஒத்து வராது. அதனால் என்னுடைய அலைவரிசைக்கு இணக்கமா வர்ற மாதிரி ஒருத்தரை தலைவராகப் போடுங்க. அப்போதான் நீங்க சொல்றதை என்னால் செய்ய முடியும்’ என்று சொன்னாரம்.‘அப்போ யாரை போடலாம்?’ என ராகுல் கேட்டதும், சிதம்பரம் கொஞ்சமும் யோசிக்காமல் சொன்ன பெயர்தான் கே.எஸ்.அழகிரி. சிதம்பரம் சொன்னதும், ‘ஓகே நீங்க புரஸிட் பண்னுங்க..’ என யோசிக்காமல் சொல்லி இருக்கிறார் ராகுல்.
சிதம்பரத்திடம் ஓகே சொன்ன பிறகும் கூட, ‘திருநாவுக்கரசரை உடனே டெல்லிக்கு வரச் சொல்லி அவருகிட்ட விஷயத்தை சொல்லிட்டு அதுக்குப் பிறகு புதிய தலைவர் பெயரை வெளியிடுங்க. திருநாவுக்கரசரை நான் பார்க்கிறேன்னு சொல்லுங்க..’ என்று சொன்னதுடன் மட்டுமல்லாமல், அதன்படியே திருநாவுக்கரசரை பார்த்து எல்லாவற்றையும் விளக்கமாக சொல்லி இருக்கிறார். ‘நான் பார்த்துக்குறேன்.. போங்க’ என்று அவருக்கு தைரியம் சொல்லித்தான் அனுப்பியிருக்கிறார். ராகுல் கொடுத்த நம்பிக்கையோடு இன்று பிற்பகல் சென்னை திரும்பினார் திருநாவுக்கரசர்.
பதவியை இழந்து திரும்பியபோதும் அவரது ஆதரவாளர்கள் திரளாக நின்று திருநாவுக்கரசரை வரவேற்றனர். அப்போது அவர்களிடையே பேசிய திருநாவுக்கரசர், ‘இரண்டரை வருடம் காங்கிரஸ் தலைவராக இருந்த போது தமிழகம் முழுவதும் சுற்றி காங்கிரஸின் கட்டமைப்பை பலப்படுத்துவதற்காக முயற்சி எடுத்தேன். இரண்டு ஆண்டுகளில் சுமார் 30 லட்சம் உறுப்பினர்களைக் கட்சியில் சேர்த்துள்ளோம். பல மாவட்டங்களில் காங்கிரஸுக்கு சொந்தமான நிலங்களை மீட்டுள்ளோம். இதற்காக ராகுல் பாராட்டு தெரிவித்தார். என்னையும் தமிழகத்தையும் கண்டிப்பாக ராகுல் கை விடமாட்டார் என்றார். என்னை நம்பிய உங்களையும் ராகுல் கைவிடமாட்டார். இனியும் தீவிரமாக செயல்படுவோம்’ என்றார். இந்த வார்த்தைகளுக்குக் காரணம் தேர்தலில் சீட் என ராகுல் கொடுத்த வாக்குறுதிதான் என்கிறார்கள் திருநாவுக்கரசரின் ஆதரவாளர்கள்”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக