செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

தெற்கு ரயில்வே முழுவதும் கண்காணிப்பு காமிராக்கள்!.. 534 ரயில் நிலையங்களில்..

தெற்கு ரயில்வே முழுவதும் கண்காணிப்பு காமிராக்கள்!மின்னம்பலம் : தெற்கு ரயில்வேயின் 534 ரயில் நிலையங்களில் சிசிடிவிக்கள் பொருத்தப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.கே.குல்ஷ்ரேஸ்தா தெரிவித்துள்ளார்.
ஈரோடு ரயில் நிலையத்தில் நேற்று (பிப்ரவரி 4) ஆர்.கே.குல்ஷ்ரேஸ்தா வருடாந்திர ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நிர்பயா நிதித் திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ரயில் நிலையங்களுக்கு சிசிடிவிக்கள் பொருத்தும் பணி அடுத்த 2 மாதங்களுக்கு மேற்கொள்ளப்படுகிறது. இதில் ஈரோடு ரயில் நிலையத்தில் 72 கேமராக்கள் அமைக்கப்படவுள்ளன. தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட 534 ரயில் நிலையங்களில் சிசிடிவிக்கள் பொருத்தப்படவுள்ளன” என்றார்.
தெற்கு ரயில்வேயில் மொத்தம் 745 ரயில் நிலையங்கள் உள்ளன.
மேலும், “ஜோலார்பேட்டை முதல் சேலம் மற்றும் கேரளாவின் ஷோரனூர் வரையிலான பாதையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்கான 3ஆவது வழித்தடம் அமைப்பதற்கான ஆய்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னைப் பகுதிகளில் ஏற்கெனவே 3 மற்றும் 4 வழித்தடங்கள் அமைக்கும் பணி முடிந்துள்ளன. அப்பகுதிகளில் தற்போது 5ஆவது வழித்தடம் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார். நடைபாதைகள் புனரமைப்புத் திட்டங்களுக்கு ரூ.13 கோடியும், மேம்பாலங்கள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளுக்கு ரூ.27 கோடியும் செலவிட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக