புதன், 27 பிப்ரவரி, 2019

ராணுவத்தை அரசியல் லாபத்துக்காக ஆளும் கட்சி பயன்படுத்துகிறது: எதிர்க்கட்சிகள்!

ராணுவத்தை அரசியல் லாபத்துக்காக ஆளும் கட்சி பயன்படுத்துகிறது: எதிர்க்கட்சிகள்!மின்னம்பலம் : இந்திய பாக் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் பிரதமர் மோடி அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்கவில்லை என்று காங்கிரஸ் உட்பட 21 எதிர்க்கட்சிகள் இணைந்து நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்ததை அடுத்து பாகிஸ்தானும் இந்தியாவும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த சூழலில் டெல்லியில் இன்று (பிப்ரவரி 27) 21 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, உட்பட 21 கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி 21 கட்சிகள் சார்பிலும் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளன.


அதில், உயிர்த் தியாகம் செய்த 40 வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 26ஆம் தேதி பாகிஸ்தானுக்குள் சென்று நடத்தப்பட்ட தாக்குதலுக்காக இந்திய விமான படைக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
ராணுவ நடவடிக்கையை அரசியல் லாபத்திற்காக, ஆளுங்கட்சி பயன்படுத்துவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஜனநாயக நடைமுறையான அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை பெறும் நடைமுறையை மோடி பின்பற்றவில்லை என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மாயமான விமானிகள் பாதுகாப்பு குறித்து மிகவும் கவலை தெரிவிப்பதாகவும், இந்தியாவின் ஒருமைப்பாடு இறையாண்மையைப் பாதுகாக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக