செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

டெல்லி ஹோட்டலில் தீ விபத்து: 17 பேர் உடல் கருகி பலி, பலர் படுகாயம் Hotel Arpit Palace


BBC : டெல்லி கரோல்பாக் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நடந்த தீவிபத்தில் 17 பேர் உடல்கருகி பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். தீவிபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
தீ விபத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள கட்டடத்தின் உயரமான பகுதிகளில் இருந்து குதித்து சிலர் தப்பித்துள்ளனர்.
போலீஸார் இது குறித்து விசாரித்து வருகின்றனர். விபத்து நடந்த கட்டடத்தில் இருந்து 35 பேர் மீட்கப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
ஹோட்டலின் குளிர்சாதன அமைப்பில் வெளியாகும் காற்றை வெளியேற்றும் குழாய்களில் உண்டான தீவிபத்தே எல்லா அறைகளுக்கும் பரவியதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு செய்யப்பட்ட பிறகே, அங்கு விடுதி நடத்த அனுமதி வழங்கப்பட்டதாகவும் டெல்லி ஹோட்டல் சங்கத் துணைத் தலைவர் பாலன் மணி கூறியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. 
பலர் மூச்சுத்திணறலின் காரணமாக இறந்திருக்கலாமென டெல்லி உள்துறை அமைச்சர் சத்தியேந்திர குமார் ஜெயின் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக நீதித்துறை நடுவர் ஒருவர் தலைமையில் விசாரணை நடத்தவும், டெல்லியில் உள்ள அடுக்குமாடிக் கட்டடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் போதிய அளவு செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்து சோதனைகள் மேற்கொள்ளவும் டெல்லி மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் அவர், இது அலட்சியத்தினால் நடந்த விபத்து. இந்த பகுதியில் உள்ள கட்டடங்களுக்கு எல்லாம் நான்கு மாடிகள் இருக்கும் போது. இந்த கட்டடத்தில் ஆறு மாடிகள் உள்ளன என்றார்.
இது குறித்து டெல்லி தீயணைப்பு படை துணைத் தலைவர் சுனில் சவுத்ரி கூறுகையில், "தீவிபத்து குறித்து எங்களுக்கு இன்று அதிகாலை 4.30 மணிக்குத் தகவல் அளித்தார்கள். உடனடியாக இங்கு வந்து, தீயணைக்கும் பணியில் ஈடுபட்டோம். இதுவரை 40க்கும் மேற்பட்ட பயணிகளை மீட்டுள்ளோம். காயமடைந்தவர்கள் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக