செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

திமுக கூட்டணி உறுதி ..திமுக 25 இடங்களில் போட்ட்டியிடும்,காங்கிரஸ் 8, மாக்சிஸ்ட் 2 , மதிமுக 1,விசிக 1, கம்யுனிஸ்ட் 1, ம நே மக 1,மு லீ 1..

திமுக தலைமையில் 8 கட்சி கூட்டணி உறுதிமாலைமலர் : பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 8 கட்சிகள் இடம் பெறுவது உறுதியாகி உள்ளது. சென்னை: பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் 9 அல்லது 10 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
அடுத்த மாதம் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அட்டவணை வெளியாகிறது. அநேகமாக மார்ச் 3 அல்லது 4-ந்தேதி தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தேசியக் கட்சிகளான பாரதிய ஜனதாவும், காங்கிரசும் ஒவ்வொரு மாநிலத்திலும் தங்களுக்கு தோழமையாக இருக்கும் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி பங்கீட்டை உறுதி செய்து வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ஜனதா தலைவர்கள் பேசி வருகிறார்கள். தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது.
பா.ஜனதா, காங்கிரஸ் இருகட்சிகளுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட போவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டி.டி.வி.தினகரன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் 4 முனைப்போட்டி ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதா, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இடம் பெற உள்ளன. பா.ம.க., தே.மு.தி.க.வும் இந்த கூட்டணியில் சேரும் என்று தெரிய வந்துள்ளது.

பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி, ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி, தேவநாதனின் இந்திய மக்கள் கல்விக் கழகம் ஆகிய கட்சிகளும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பங்கேற்கின்றன. இந்த மூன்று கட்சிகளும் பாரதிய ஜனதாவின் தாமரை சின்னத்தில் போட்டியிடும் என்று கூறப்படுகிறது.
ஆளும் அ.தி.மு.க. கூட்டணியில் 8 கட்சிகள் இடம் பெறும் நிலையில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியிலும் 8 கட்சிகள் இடம் பெறுவது உறுதியாகி உள்ளது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம் பெறுகின்றன.

இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இடம் பெறும் என்று தி.மு.க. மூத்த தலைவர்கள் சிலர் கூறினார்கள். இதைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி தி.மு.க. கூட்டணியில் இடம் பெறும் என்று தகவல்கள் வெளியானது.
தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வை இடம் பெற செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். பா.ம.க. இருக்கும் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம் பெறாது என்றும் அவர் அறிவித்தார்.
இதனால் தி.மு.க. கூட்டணியில் சலசலப்பு உருவானது. இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த விவகாரத்தில் ஒரு தெளிவான நிலை தெரிய வந்தது. அதன்படி தி.மு.க. கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம் பெறாது என்பது உறுதியாகி உள்ளது.
இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெறும் என்று கூறப்படுகிறது.
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் ஏற்கனவே இடம் பெற்றுள்ள கட்சிகள் அப்படியே நீடிக்கும் என்பதை தி.மு.க., காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உறுதிப்படுத்தினார்கள். வேறு புதிய கட்சிகள் வர வாய்ப்பில்லை என்பதால் தி.மு.க. கூட்டணியில் உள்ள 8 கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
அதன்படி தி.மு.க. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 25 இடங்களில் போட்டியிடும் என்று தெரிய வந்துள்ளது. மீதமுள்ள 15 தொகுதிகளையும் கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க. விட்டுக் கொடுக்கிறது.
புதுச்சேரி உள்பட 8 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுவான வெற்றியை கருத்தில் கொண்டு ஒற்றை இலக்கத்தில் போட்டியிட காங்கிரஸ் சம்மதம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு 2 இடங்கள் கொடுக்கப்படுகிறது. ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மனித நேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 இடம் வழங்கப்படுகிறது. ம.தி.மு.க. திருச்சியிலும், விடுதலை சிறுத்தைகள் சிதம்பரம் தொகுதியிலும் போட்டியிட உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக