செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

தமிழ்நாடு ஏறக்குறைய திவாலாகிவிட்டது.. தேர்தலுக்கு பின் மஞ்ச கடுதாசியும் கொடுப்பார்கள்?


LR Jagadheesan : தமிழ்நாடு ஏறக்குறைய திவாலாகிவிட்டது. இன்னும் முறையான மஞ்சக்கடுதாசி மட்டும்தான் கொடுக்கப்படவில்லை. நாடாளுமன்றத்தேர்தல் முடிந்தபின்னர் அதுவும் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
ஒருபக்கம் மாநில வரி வருவாய் விதிக்கும் அதிகாரத்தையே மத்திய அரசு ஏறக்குறைய முழுமையாக தன் அதிகாரத்துக்குள் எடுத்துக்கொண்டு கபளீகரம் செய்துவிட்டது. மறுபக்கம் தமிழ்நாட்டுக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டின் பங்கை சரிபாதியாக குறைத்தும்விட்டது.
ஒரு மாநில அரசு அதிகபட்சமாக வாங்க அனுமதிக்கப்பட்ட அளவு கடனையும் தமிழ்நாடு ஏற்கனவே வாங்கிவிட்டது. இனிமேல் கடன் வாங்கவும் கதியில்லை.
ஆக வரி வருவாயும் இல்லாமல் மத்திய அரசு நிதியும் போதுமானதாக இல்லாமல் கடன்கூட வாங்க முடியாத முட்டுச்சந்தில் தமிழ்நாடு தற்போது நிற்கிறது. நாடாளுமன்றத்தேர்தல் முடிந்ததும் தமிழ்நாடு நிதி நெருக்கடியால் திவால் நிலையில் இருப்பதை தமிழக அரசு அறிவிக்காவிட்டாலும் அதற்கு கடன் கொடுத்தவர்கள் அறிவிப்பார்கள்.

இந்த லட்சணத்தில் அடுத்த தேர்தலுக்கான லஞ்சமாக ஆளுக்கு இரண்டாயிரம் ரூபாயை அளிக்கப்போவதாக அறிவித்திருக்கும் தமிழக அரசின் அறிவிப்பை பார்க்கும்போது ஒரு திரைப்படத்தில் வைகைப்புயல் வடிவேலு வீட்டில் மனைவியிடம் காசில்லை என்று சொல்லிவிட்டு மந்தையில் ஆடிய கரகாட்டக்கார கலைஞருக்கு நூறுரூபாய் நோட்டை பரிசாக வீசியெறிந்த காட்சி தான் நினைவுக்கு வருகிறது.
சமூகநீதி, பெரியார் மண், நலத்திட்டங்கள் போன்ற எதற்கும் இனி பெரிய அர்த்தமில்லை. தனிமனிதனோ ஒரு மாநிலமோ அதன் சுயமரியாதை மற்றும் சுயாதீனம் என்பது பொருளாதார சுயசார்பை பொறுத்தே அமையும். அதுவே அனைத்துக்கும் அடிப்படை. அந்த அடிப்படையான பொருளாதார சுயசார்பு வலிமையை தமிழ்நாடு இழந்துவிட்டது என்பதை நண்பர் ஜெயரஞ்சன் அவருக்கே உரிய எளிய தமிழில் மிகச்சிறப்பாக விளக்கியிருக்கிறார்.

பிகு: இதில் கொடுமையான செய்தி என்னவென்றால் 2011 ஆண்டுமுதல் தமிழக அரசின் கடன் சுமை அதிகரித்ததைவிட தமிழக அமைச்சர்களின் சொத்துக்கள் கூடுதல் வேகமாக வளர்ந்ததாக சொல்லப்படுவது தான். அரசு கஜானா பணமும் அரசு கஜானாவுக்கு வரவேண்டிய பணமுமாக இரண்டு வருவாயும் ஒன்று சேர்ந்தால் இரட்டை இலக்க வளர்ச்சி சாத்தியமாகாமல் என்ன செய்யும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக