புதன், 23 ஜனவரி, 2019

சிம்பு மீது பால் முகவர்கள் சங்கம் புகார்!

சிம்பு மீது பால் முகவர்கள் சங்கம் புகார்!மின்னம்பலம் :
பாலபிஷேகம் செய்யும்படி ரசிகர்களை உசுப்பேற்றிய சிம்பு மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல் ஆணையர் அலுவலகத்தில் பால் முகவர்கள் சங்கம் புகாரளித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு நடிகர் சிம்பு ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், என்னுடைய ரசிகர்கள் அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்க்கத் தேவையில்லை. என்னுடைய கட் அவுட், பேனர்களுக்கு பால் ஊற்றத் தேவையில்லை. அதற்கு செலவழிக்கும் பணத்தில் உங்கள் குடும்பத்தினருக்கு ஆடை உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்தால் நான் மகிழ்ச்சியடைவேன் என்று சிம்பு தெரிவித்திருந்தார். இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்த ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படம் வெளியாகவுள்ள சூழலில் அவர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அடுத்த சில தினங்களிலேயே சிம்பு மற்றொரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில், “ரசிகர்களுக்கு வணக்கம். சில நாட்களுக்கு முன் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தேன். அதில் என் படத்தை அதிக விலை கொடுத்து பார்க்க வேண்டாம், பேனர் கட் அவுட்டிற்கு பாலூற்ற வேண்டாம், அம்மா அப்பாவுக்கு ஆடை வாங்கி கொடுங்கள் என்று கூறியிருந்தேன். ஆனால், இவரெல்லாம் ஏன் இதைப் பேசுறாரு? இவருக்கு இருப்பதே இரண்டு, மூன்று ரசிகர்கள்தான். வெறும் விளம்பரத்துக்காக பேசுகிறார் என சிலர் கூறுகிறார்கள். தற்போது என் ரசிகர்களுக்கு ஒரு அன்புக் கட்டளையிடுகிறேன்.
எனக்கு இரண்டு, மூன்று ரசிகர்கள்தானே இருக்கிறார்கள். நான் சொன்னால் யார் கேட்கப்போகிறார்கள். இதுவரை வைக்காத அளவுக்கு நீங்கள் கட் அவுட் பேனர் வைக்க வேண்டும். பாலை பாக்கெட்டில் எல்லாம் கொண்டுவராமல் அண்டாவில் கொண்டுவந்து ஊற்ற வேண்டும். இதைத்தான் நான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன். ஏனென்றால், எனக்கு இருப்பதே இரண்டு, மூன்று ரசிகர்கள்தானே. அதனால் இதையெல்லாம் செய்தால் தவறில்லை” என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வலைத்தளங்களில் கிண்டல்களுக்கும், கேலிகளுக்கும் ஆளானது.
சிம்புவின் அன்புக் கட்டளைக்கு பால் முகவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், சிம்பு மீது பால் முகவர்கள் சங்கம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளது. இன்று (ஜனவரி 23) பிற்பகல் 12.30 மணியளவில் பால் முகவர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி, மாநில பொதுச்செயலாளர் எஸ்.பொன்மாரியப்பன், மாநில இணைச் செயலாளர்கள் எம்.சக்திவேல், எஸ்.வெங்கடேசபெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தனர்.
இந்தப் புகாரில், கட் அவுட்களுக்கு அண்டா, அண்டாவாக பாலபிஷேகம் செய்ய வேண்டுமென்று ரசிகர்களை உசுப்பேற்றி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தும் வகையில் பேசி காணொளி வெளியிட்ட நடிகர் சிம்பு மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கட் அவுட்களுக்கு பாலபிஷேகம் செய்வதற்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும், வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படம் வெளியாகும் நாளில் பால் முகவர்கள் கடைகளிலிருந்து பால் திருடப்படாமல் தடுக்க காவல்துறை பாதுகாப்பளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக