புதன், 23 ஜனவரி, 2019

சபரிமலை - கனகதுர்காவை வீட்டைவிட்டு விரட்டிய குடும்பத்தினர்

சபரிமலையில் சாமி தரிசனம்- கனகதுர்காவை வீட்டைவிட்டு விரட்டியடித்த குடும்பத்தினர்
மாலைமலர் : சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்த கனதுர்காவை அவரது மாமியார் வீட்டை விட்டு விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனகதுர்கா வீட்டின் முன்பு சோகத்துடன் நின்ற காட்சி. திருவனந்தபுரம்: சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் 10 வயதிற்கு மேற்பட்ட 50 வயதிற்குட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்ய இருந்த தடை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு மூலம் தற்போது நீங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலுக்கு கேரளாவை சேர்ந்த கனகதுர்கா, பிந்து ஆகிய 2 இளம்பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று சாமி தரிசனம் செய்தனர்.


இதனால் கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் இடையே கொந்தளிப்பு ஏற்பட்டு கலவரம் நடந்தது. இதைத் தொடர்ந்து கனகதுர்காவும், பிந்துவும் போலீஸ் பாதுகாப்புடன் தலைமறைவாக வாழும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோழிக்கோட்டில் உள்ள தனது வீட்டிற்கு பிந்து திரும்பினார். அவருக்கு தற்போது ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 5 போலீசார் 24 மணிநேரமும் பாதுகாப்பு வழங்கி வருகிறார்கள்.

அதே சமயம் கனகதுர்கா மலப்புரத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றபோது அவருக்கு அவரது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கனகதுர்காவை அவரது மாமியார் தாக்கியதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டதால் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது உடல் நலம் தேறியதை தொடர்ந்து கனகதுர்கா மலப்புரத்தில் உள்ள தனது வீட்டிற்கு மீண்டும் சென்றார். இந்த முறை அவருடன் போலீசாரும் பாதுகாப்புக்கு சென்றார்கள்.


ஆனால் கனகதுர்காவை வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம் என்று அவரது கணவர், சகோதரர் மற்றும் உறவினர்கள் கூறிவிட்டனர்.

இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் கூறும்போது, கனகதுர்கா பாவம் செய்து விட்டார். ஆச்சாரத்தை மீறி சபரிமலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததன் மூலம் அங்குள்ள சடங்குகளையும் மாற்றி விட்டார். எனவே அவர் பொது இடத்தில் பக்தர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்போது தான் அவரை ஏற்றுக்கொள்வோம் என்றனர்.

கனகதுர்காவின் சகோதரர் பரத்பூ‌ஷன் கூறும்போது இந்து சமூகத்திடமும், ஐயப்ப பக்தர்களிடமும் கனகதுர்கா மன்னிப்பு கேட்கும்வரை அவரை குடும்பத்தில் சேர்க்க மாட்டோம் என்றார்.

போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். போலீசார் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அதை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் வேறு வழி இல்லாமல் கனகதுர்காவை போலீசார் அங்கிருந்து அழைத்துச் சென்றனர். தற்போது அவர் போலீஸ் பாதுகாப்பில் உள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக