புதன், 23 ஜனவரி, 2019

ஜாக்டோ ஜியோ போராட்டம்: 1 லட்சம் பேர் கைது!

ஜாக்டோ ஜியோ போராட்டம்: 1 லட்சம் பேர் கைது!மின்னம்பலம் : பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் செய்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்களைக் கைது செய்து சிறைக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.
ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு கொண்டுவரும் கல்வித் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று முன் அறிவிப்பு செய்துவிட்டு, நேற்று (ஜனவரி 22) வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர் ஜாக்டோ ஜியோ அமைப்பினர். இதனால் தமிழகத்தில் பல பள்ளிகள் மூடப்பட்டன.
இரண்டாவது நாளான இன்று (ஜனவரி 23), தமிழகம் முழுவதும் 292 தாலுகாக்களில் போராட்டம் செய்தவர்களைக் கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்தனர் போலீசார். மாவட்டம்தோறும் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கைது எண்ணிக்கையைக் கணக்கெடுத்து, மேலிடத்துக்கு அனுப்பி வைத்தனர் உளவுத் துறையினர்.

ஆனால், முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுசென்ற அதிகாரிகள், குறைவான கணக்கையே கூறியுள்ளனர். ஆனால், ஜெ தொலைக்காட்சி வீடியோக்களை பார்த்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆண்களைவிடப் பெண்கள் அதிகமாகக் கைதானதைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக 3,000 பேர் வீதம், 32 மாவட்டங்களில் சுமார் 1 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கைதாகியுள்ளனர். இதில் 65% பேர் பெண்கள் என்பதே ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கான வெற்றி என்கின்றனர் ஆசிரியர்கள்.

“உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த முதல்வர் கைது செய்தவர்களை விட்டால் நாளையும் போராடுவார்கள். அதனால் போலீஸ் மூலமாக மிரட்டி, மண்டபத்தில் இருப்பவர்களைப் பயமுறுத்தி வெளியேற்றுங்கள். எண்ணிக்கையைக் குறைத்து மிச்சம் இருப்பவர்களைச் சிறைக்கு அனுப்புங்கள் என்று முக்கிய அதிகாரி ஒருவர் மூலமாக முதல்வர் உத்தரவு கொடுத்துள்ளார்” என்கின்றனர் காவல் துறை அதிகாரிகள்.
“குடும்பப் பெண்களாக இருக்கீங்க. சிறைக்குப் போனால் உடனே வெளியில் வர முடியாது. நீங்கள் சிறைக்குப் போனால் உங்கள் பிள்ளைகள், பெரியவர்களை யார் பார்த்துக்குவாங்க. அதுவுமில்லாம உங்க வேலையும் போயிடும்” என்று மண்டபங்களில் இருந்த பெண் ஆசிரியர்கள், ஊழியர்களிடம் சில காவல் துறை அதிகாரிகள் பேசியுள்ளனர். இவர்களது மிரட்டல் முயற்சியைத் தொடர்ந்து, சிலர் மண்டபத்தில் இருந்து வெளியேறியதாகக் கூறினர் ஜாக்டோ ஜியோ அமைப்பினர்.
ஆனாலும், இன்று மாலையில் இறுதியாக உளவுத்துறை போலீஸார் கணக்கெடுத்தபோது, எதிர்பார்த்ததுபோல எண்ணிக்கை குறையவில்லை. இதனால், மாலை ரிப்போர்ட் வாங்கிப் பார்த்த முதல்வர் வருத்தமடைந்துள்ளார். “எதிர்பார்த்த அளவுக்குக் குறையவில்லையே, அதுவும் பெண்கள் அதிகமாக இருக்கிறார்கள். அவர்களைச் சிறைக்கு அனுப்பினால், தமிழ்நாட்டு மக்கள் என்ன நினைப்பார்கள். அதனால், அவர்களைச் சிறைக்கு அனுப்புவது பற்றி பிறகு சொல்கிறேன்” என்று அதிகாரிகளிடம் கூறியுள்ளார். விருதுநகர், திருநெல்வேலி, மதுரை, தர்மபுரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் அதிகளவில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைதாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது பற்றி, கடலூர் மாவட்ட ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் ஹரிகிருஷ்ணனிடம் பேசினோம். “கடலூர் மாவட்டத்தில் போராட்டம் செய்த 3,000 பேரை கைது செய்தனர் போலீசார். அதில் பலரை வடிகட்டினர் போலீசார். தற்போது போலீஸ் கணக்குப்படி மொத்தம் 2,383 பேர் கைதாகியுள்ளனர். அதில் பெண்கள் 782 பேர். விழுப்புரத்தில் காலையில் 3,600 பேரைக் கைதுசெய்து திருமண மண்டபங்களில் அடைத்தனர். அதில் 1,400 பேர் பெண்கள்.
தமிழகம் முழுவதும் போராடிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்களைக் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து, கடுமையாக மிரட்டி அவர்களை வெளியேறச் சொல்கின்றனர் போலீசார். இதுதான் மாநில முதல்வருக்கு அழகா?” என்று கேள்வி எழுப்பினார்.
சிறைக்குச் சென்றாலும் எங்கள் உரிமையை விடமாட்டோம் என்று தெரிவித்தார் ஹரிகிருஷ்ணன். “எந்த அரசாக இருந்தாலும், மக்கள் போராட்டத்துக்குத் தலைவணங்கியாக வேண்டும். பெண் ஆசிரியர்களைச் சிறைக்கு அனுப்பி வைத்து அரசியல் செய்யப்போகிறாரா முதல்வர்? இதுதான் மக்கள் ஆட்சியா? எங்களுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுங்கள்; எங்கள் உரிமையைப்
பறிக்காதீர்கள் என்றுதான் போராடுகிறோம். குறிப்பாக, எங்களைக் கைது செய்து மிரட்டும் காவல் துறையினருக்கும், அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சேர்த்துத்தான் போராடுகிறோம். எங்கள் போராட்டம் தொடரும். நாங்கள் சிறைக்குச் சென்றாலும் எங்கள் குடும்பத்தினர் தொடர்ந்து போராடுவார்கள்” என்றார். ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டத்தைக் கவனித்துவரும் அரசியல் கட்சியினரும் தங்களுக்காகக் குரல் கொடுப்பார்கள் என்று ஹரிகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக