திங்கள், 14 ஜனவரி, 2019

கோத்தகிரியில் ரூம் போட்ட கொள்ளையர்கள்! - டி.ஜி.பி-யிடம் ஆதாரத்தை அடுக்கிய வெற்றிவேல்

வெற்றிவேல்
கோத்தகிரியில் ரூம் போட்ட கொள்ளையர்கள்! - டி.ஜி.பி-யிடம் ஆதாரத்தை அடுக்கிய வெற்றிவேல்vikatan.com -vijayanand.: அமைச்சர்களின் பினாமி சொத்து தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் கொடநாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. இதன் அடிப்படையில், சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் நடவடிக்கை எடுக்க நினைத்தார் ஜெயலலிதா. அதன் பிறகு உடல்நலமில்லாமல் இறந்துவிட்டார்.
கொடநாடு கொள்ளைச் சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல்ரீதியாகக் கொடுக்கப்படும் அழுத்தத்தால் கொங்கு வட்டாரம் அதிர்ச்சியில் இருக்கிறது. `அமைச்சர்களின் சொத்து தொடர்பான ஆவணங்களைக் கைப்பற்றுவதற்காக இந்தக் கொள்ளை நடந்திருக்கலாம். அப்போதே நான் கொடுத்த புகாரைக் கிடப்பில் போட்டுவிட்டார்கள்' என்கிறார் தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல்.
கொடநாடு
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது. அவரது மறைவுக்குப் பிறகு எஸ்டேட்டில் கொள்ளை முயற்சி சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புபடுத்தி, ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார் மூத்த பத்திரிகையாளர் மேத்யூஸ்.
இதனால் அதிர்ச்சியடைந்த முதல்வர், `கொடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி நடைபெற்ற ஒரு சம்பவத்தில் என்னை சம்பந்தப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளனர். இது முற்றிலும் உண்மைக்கு மாறானது, துளியும் உண்மையில்லை. இந்தச் செய்திகளை வெளியிட்டவர்கள் மீதும் மற்றும் இதற்குப் பின்புலமாக இருந்தவர்களை உடனடியாகக் கண்டறிந்து, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' எனக் கூறியிருந்தார். இதையடுத்து, மேத்யூ, சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். நேற்று மாலை டெல்லியில் வைத்து மனோஜும் சயானும் கைது செய்யப்பட்டனர். 

கொடநாடு சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களைப் பற்றி, அப்போதே டி.ஜி.பி-யை சந்தித்துப் புகார் மனு ஒன்றைக் கொடுத்திருந்தார் வெற்றிவேல். அத்துடன், கோவையில் இருந்து சென்ற சிலர் கோத்தகிரியில் தங்கியிருந்து கொடநாடு சென்றதற்கான தகவல்களையும் கொடுத்திருக்கிறார். இந்தப் புகாரைக் கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்டுவிட்டனர்.

வெற்றிவேலிடம் பேசினோம்.
கொடநாடு சம்பவம் தொடர்பாக, டி.ஜி.பி-யிடம் அப்போதே புகார் மனு கொடுத்திருந்தீர்களே? 
கொடநாடு
ஆமாம். கொள்ளைச் சம்பவம் நடந்த காலத்தில் எடப்பாடி பழனிசாமி, எங்களுடன்தான் இருந்தார். கொள்ளை சம்பவத்தில், எனக்குக் கிடைத்த தகவல்களைக் கூறுவதற்காக 2 முறை டி.ஜி.பி-யை சந்திக்கச் சென்றேன். நான் சந்திக்கச் செல்லும் விவரத்தை எடப்பாடியிடம் சொல்லவில்லை. இந்தக் கொள்ளை முயற்சியில் ஓ.பி.எஸ், அவரின் சகோதரர், அவரின் மகன்களுக்குத் தொடர்பிருப்பதாக எனக்குத் தகவல் கிடைத்தது. அப்போது மேற்கு மண்டல ஐ.ஜி-யாக பாரி இருந்தார். அவர்தான் இந்த வழக்கை விசாரித்து வந்தார். அவர் அமைச்சர் வேலுமணி சொல்வதைத்தான் கேட்பார். இந்தத் தகவலை டி.ஜி.பி-யிடம் எடுத்துக் கூறி, `பாரி மூலமாக இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது' என்றேன். அதன் பிறகு, வேறொரு உயர் அதிகாரி மூலமாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதன் பின்னர், மூன்றாவது முறையாக நான் டி.ஜி.பி-யை சந்தித்தபோது, `அந்த சம்பவத்தில் பெரிதாக ஒன்றும் இல்லை' என்றார்.

எடப்பாடி பழனிசாமிஇப்போது கொள்ளைச் சம்பவம் தொடர்பாக ஆவணப்படம் வெளியிட்டிருக்கிறார்கள். அந்தச் சம்பவத்தில் சி.எம் அலுவலகமே சம்பந்தப்பட்டிருந்தால் போலீஸால் என்ன செய்துவிட முடியும்? கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய பலர் மர்மமான முறையில் இறந்திருக்கிறார்கள். அப்போது, கூர்கா மட்டும் மூச்சுத் திணறி இறந்துவிட்டார் என்றார்கள். மற்றவர்கள் இறந்ததில் மர்மம் இருக்கிறது. குற்றச்சாட்டுக்கு ஆளாகி இறந்துபோன டிரைவர் கனகராஜ், எடப்பாடி பழனிசாமி மூலமாகத்தான் சசிகலாவுக்கு அறிமுகமானார். அதன் பிறகு அவருடைய நடவடிக்கை சரியில்லை எனத் துரத்திவிட்டார்கள். இந்த வழக்கில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம். 
அம்மா குடியிருந்த வீடு அது. இதில் புதைந்துள்ள சர்ச்சைகளை வெளியில் கொண்டு வர வேண்டியது அவசியம். மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு என்ன நேர்ந்தது என்பதை வெளிக்கொண்டு வருவதற்கு விசாரணை ஆணையம் அமைத்திருக்கிறார்கள். அதேபோல், இந்தச் சம்பவத்திலும் கொலை, கொள்ளை, தற்கொலை என நிறைய மர்மங்கள் உள்ளன. இந்த வழக்கை தமிழக அரசு விசாரிப்பது சரியானதாக இருக்காது. ஏனென்றால், போலீஸ் துறையை முதல்வர் கையில் வைத்திருக்கிறார். ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள போலீஸாரைக் கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். 
ஓ.பன்னீர்செல்வம்
ஆவணங்களைக் குறிவைத்துதான் இந்தக் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றதா? 
உண்மையில் எதற்காகக் கொள்ளையடிக்க வந்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. அதே காலகட்டத்தில் அமைச்சர்களாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, நத்தம் விஸ்வநாதன், காமராஜ் உள்பட மேலும் சிலர் பினாமி பெயர்களில் ஏராளமான சொத்துகளைச் சேர்த்துவிட்டதாக அம்மாவுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸ் மூலமாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதுதொடர்பான ஆவணங்கள் அனைத்தும் கொடநாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. இந்த ஆவணங்களின் அடிப்படையில், சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் நடவடிக்கை எடுக்க நினைத்தார். அதன் பிறகு உடல்நலமில்லாமல் இறந்துவிட்டார். இந்த ஆவணங்களுக்காக கொள்ளை, கொலை நடந்ததா என்பது விசாரணை முடிவில்தான் தெரிய வரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக